Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்! #SummerTips

யிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள். 

மோர்

எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது. கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல், கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு. மோரில் அப்படி என்ன மகோன்னதம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்...
 
கால்சியம் குறைபாடு நீக்கும்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது. 

வயிற்றெரிச்சலைக் குறைக்கும்
காரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும். 

நீரிழப்பைத் தடுக்கும்
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது. 

மோர்க்கரைசல்

செரிமானத்தை எளிதாக்கும்
தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது. 

கொழுப்பைக் குறைக்கும்
மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உடல் நச்சுகளை வெளியேற்றும்
இதில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். 

மோர் குடித்தல்

மலச்சிக்கலுக்கு மருந்து
உணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும். 

எடை குறைக்கும்
குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு. 

முக அழகைக் கூட்டும்
இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும். 

குவளை

வயிற்றுப்புண் குறைக்கும்
வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.

வாய்ப்புண் நீக்கும்
தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும். 

மூல நோய்க்கு மருந்து
சாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும். 

வெந்தயம் மோர்

சளியைப் போக்கும்
மோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும். இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும். 

சாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம். இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் நாம் என்றென்றும் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 


- அகில் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement