பிளாஸ்டிக் கேன் தண்ணீரையும், மண் பானைக்கு இப்படி டவுன்லோடு பண்ணலாம்! | Amazing Health Benefits Of Using Modern Mudpot

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (04/04/2017)

கடைசி தொடர்பு:06:46 (05/04/2017)

பிளாஸ்டிக் கேன் தண்ணீரையும், மண் பானைக்கு இப்படி டவுன்லோடு பண்ணலாம்!

 

 

ல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு நம் மக்களிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மரங்கள் வளர்ப்பது, நிலத்தடி நீரைக் காப்பது ஆகியவற்றில் அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோலத்தான் இதுவும்... எண்ணற்ற இயற்கை வளங்களை நமக்குத் தெரிந்தே அழித்துவிட்டு, இப்போது காப்பாற்ற நினைப்பது தாமதமான காரியம்தான். இருந்தாலும், இப்போதாவது நமக்கு இயற்கையின் முக்கியத்துவம் பற்றியப் புரிதல் வந்திருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ளத்தான் வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும். கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதவில்லை. திரும்பத் திரும்பக் குடித்தாலும் வாட்டியெடுக்கிற தாகம்! அதைத் தணிக்க வந்து இறங்கியிருக்கிறது மாடர்ன் மண்பானை!  

மண் பானை

கோடையின் தாக்கத்தைச் சமாளிக்க முன்பெல்லாம் மண்பானை பயன்பட்டது. இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் நீரைத்தான் அருந்துகிறோம். இந்தக் குளிர்ந்த நீர் நம் உடலுக்கு உகந்ததல்ல. பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்; பணத்தை விரையமாக்க, மருத்துவமனைக்கு ஓட வைத்துவிடும். உண்மையில், மண்பானையில் நீர் பிடித்து, அதைக் குடித்துவந்த காலத்தில் நம்மை அது எதுவும் செய்யவில்லை. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் பல தாது சத்துக்களையும் அள்ளி வழங்கியது அந்த அற்புத மண் பாத்திரம் இயற்கை மீது திரும்பியிருக்கும் ஈர்ப்பின் இன்னொரு அடையாளம் இந்த மாடர்ன் மண்பானை. கோடையைச் சமாளிக்க உதவும் இந்த குளு குளு மண்பானை எங்கே கிடைக்கும் என்று தேடினோம். மதுரை, அழகர்கோயில் பகுதியில் இருக்கும் அப்பந்திருப்பதியில் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். புதுமையான வடிவில் ஸ்டைலாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன இந்த நவீன மண்பானைகள்!

மண் பானை

நம்மை வரவேற்றார் உரிமையாளர் பிரபு. ``உள்ளே வாங்க சார்! இந்தாங்க தண்ணீர்’’ என்றவர் தான் வடிவமைத்திருந்த அந்தக் குட்டி மண்பானையில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தார். `ஜில்’ என்று நம் தொண்டையோடு சேர்த்து நெஞ்சையும் நிறைத்தது அந்தக் குளிர்ந்த நீர். 


பிரபு

``இது நான் வடிவமைச்ச மாடல். பல இடங்களுக்குப் போய் சுற்றிப் பார்த்து, மண்பானையில் இப்போ எந்த மாதிரியான வடிவத்தை மக்கள் விரும்புவாங்க, எது ஜனங்களைக் கவரும்’னு ஒரு வாடிக்கையாளரோட கண்ணோட்டத்துல சிந்திச்சேன். அதுக்கப்புறம்தான் இந்த வடிவத்துக்கு மண்பானையைக் கொண்டு வந்தேன்’’ என்கிற பிரபுவின் பேச்சைக் கவனித்தபடி அவர் காட்டிய மண்பானையைப் பார்த்தோம். ஒரு பெரிய சைஸ் ஊறுகாய் ஜாடி மாதிரியான தோற்றம்; செங்குத்தான வடிவில் நிற்கிறது பானை. கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. அதை இயக்கி நீர் பிடித்துக்கொள்ளலாம். மேலே ஒரு மூடி. அதை நீக்கிவிட்டு, வாட்டர் கேனை கவிழ்த்துக்கொள்ளலாம். 

மண் பானை

``மானாமதுரை மண்ணில் செஞ்ச பானை இது. என் நண்பர் ஒருவரிடம் பேசி எனக்கு இந்த வடிவத்தில் மண்பானை வேண்டும் என்று கேட்டு இதைச் செஞ்சு வாங்கினேன். அதில் ஒரு குழாயை செட் பண்ணினேன். நல்ல குளிர்ச்சி கிடைக்கணும்கிறதுக்காக சில செம்மண் வர்ணங்களையும் பூசி இருக்கேன். இந்தப் பானைக்கு செங்குத்து வடிவம் கொடுத்ததற்கு முக்கியக் காரணம், தண்ணீர் சீக்கிரம் குளிர்ச்சி அடையணும்கிறதுக்காகத்தான். அதேபோல அடிக்கடி தண்ணீர் கேனை மாத்தணும் என்ற அவசியம் இருக்கக் கூடாது; தண்ணீரை அதிக அளவு சேமிச்சி வைக்கணும்னுதான் . இப்போல்லாம் மண்பானையில குழாய் வச்சு வருது ஆனா அதோட அடிப்பாகத்துல தண்ணீர் அதிக அளவு தேங்கி, வீண் ஆகுது. இல்லைன்னா, பாட்டில்ல தண்ணீர் பிடிக்கறது கஷ்டமா ஆகிடுது. அதனாலதான், இந்தப் பானைக்கு 90 டிகிரி மையம் கொடுத்து தயாரிச்சிருக்கேன். இதோட அடிப் பகுதி குறுகலாக இருக்கறதால, ஓரளவுக்கு முழுமையாக எல்லா தண்ணீரும் நமக்குக் கிடைக்குற மாதிரி இது செஞ்சுடும் .வாட்டர் கேனை அப்படியே கவிழ்த்து மேலே வச்சுட்டா போதும்... இந்தப் பானை, ஆபீஸ் ஸ்டைலுக்கு மாறிடும். உண்மையிலேயே இது எல்லாருக்கும் பயன்படுற, குளிர்ந்த தண்ணீரை ஆரோக்கியமான முறையில தர்ற குட்டி மண்பானை.

மண் பானை

நான் சென்னையில ஆறு வருஷமா டிசைன் ஃபீல்டுல இருந்தேன். எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடிச்சிருந்தாலும், எனக்கு டிசைனிங்தான் பிடிச்சிருக்கு. இப்போ மதுரையில ஆர்க்கிடெக் ஃபீல்டுல வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ரொம்ப நாளாகவே இது மாதிரி ஒரு பானை செஞ்சு மார்க்கெட்டுக்கு கொண்டு வரணும்னு ஆசை. அது இப்போதான் நிறைவேறியிருக்கு. ஒரு பானையை 300 ரூபாலருந்து 450 ரூபா வரைக்கும் விக்கிறேன். அதிக எண்ணிக்கையில பானைகளை வாங்குறவங்களுக்கு இன்னும் குறைவான விலைக்குக் கொடுப்பேன். இந்தப் பானையோட சேர்த்து ஒரு இரும்பு ஸ்டாண்டும் இலவசமாகக் கொடுக்குறோம். அது, மேலே வைக்கிற வாட்டர் கேனை தாங்குறதுக்கு வசதியாக இருக்கும்’’ என்கிறார் பிரபு. நம் மரபை மறந்துவிடாமல், மண்பானையை புது வடிவில் கொடுக்க நினைத்த பிரபுவை வாழ்த்தலாம். 

- கட்டுரை மற்றும் படங்கள்: சே.சின்னதுரை

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்