கவனம்... இதழ், உடல் முழுக்க பாதிப்பை உண்டாக்கும் லிப்ஸ்டிக்! #HealthAlert

ன்றைக்கு பெண்களின் மேக்கப் பாக்ஸில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒன்று, லிப்ஸ்டிக்! உதடுகள் பளீரெனத் தெரிவதற்கும், முக வசீகரத்துக்கும் இது அவசியமே. ஆனால், லிப்ஸ்டிக்கில் இருக்கும் நிறமி உதட்டுடன் பல மணி நேரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. பல நேரங்களில், பெண்கள் அதை அகற்றாமலேயே தூங்கிவிடுகிறார்கள். நல்லது என நினைத்து, விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு தேர்வு செய்து வாங்கும் இது, உண்மையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அந்தப் பக்கவிளைவுகளைப் பற்றி நம்மிடையே விளக்கமாகப் பேசுகிறார் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜன் சசிகுமார் முத்து...

லிப்ஸ்டிக்

* `லிப்ஸ்டிக்கில் நம் உடலுக்குத் தீங்கிழைக்கும் மோசமான உட்பொருள்கள் பல உள்ளன. இவை, முக்கியமாக நரம்பு மண்டலத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கும். இதில் உள்ள ரசாயனங்கள் உதட்டையும் உதட்டைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனத் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறார்கள் தோலியல் மருத்துவர்கள்.  சசிகுமார்

* இதில் `ஃபார்மால்டிஹைடு’ என்ற பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது. இது, இருமல், மூச்சிரைப்பு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதோடு இதில் கலக்கப்படும் மினரல் ஆயில் நம் தோலில் உள்ள சிறு துளைகளை அடைத்துவிடும். இதனால் உதட்டின் இயல்புத்தன்மை பாதிக்கப்படும். தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* இதற்கான நிறமியில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்கு ஏற்றவை அல்ல. எனவே, இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அலர்ஜி உண்டாகும்; இது சருமத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், உதட்டை வறண்டு போகச் செய்யும்; சின்னச் சின்ன கொப்பளங்கள், வெடிப்புகளை ஏற்படுத்தும்; மேலும் பூச்சிகடித்தால் ஏற்படுவதைப் போன்ற வீக்கமும் உண்டாகும். உதட்டில் வெண்புள்ளிகள் (Leucoderma) உருவாகும் அபாயமும் உண்டு.

* லிப்ஸ்டிக்கிலும் லிப் கிளாஸிலும் (Lip Gloss) அலுமினியம், குரோமியம், காட்மியம், மாங்கனீஸ் போன்ற மெட்டல்களின் கலப்பு உள்ளன. அளவுக்கு அதிகமான நேரம் அவை நம் உடலில் தங்கியிருக்கும்போது நச்சுத்தன்மையைக் கொண்டுவிடும். சமயத்தில் இவை சிறுநீரகச் செயலிழப்பைக்கூட ஏற்படுத்திவிடும். அதிக அளவிலான காட்மியம் கலந்திருந்தால், அது தொற்றுநோயை ஏற்படுத்தும்.

லிப்ஸ்டிக்

* பெரும்பாலான உதட்டுச் சாயங்களில் அதிக அளவில் காரீயம் (Lead) கலந்துள்ளது. இது ஒரு நரம்பு நச்சு (Neurotoxin). நம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இது மிக மிகச் சிறிய அளவில் இருந்தாலுமேகூட, பெரிய பாதிப்புகளை நம் உடலுக்கு ஏற்படுத்தக்கூடியது. 

* ஒரே நாளில் மேலும் மேலும் பலமுறை உதட்டில் லிப்ஸ்டிக் தடவுபவர்களுக்கு வயிற்றில் கட்டிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

* இதில் பெட்ரோகெமிக்கல் கலந்துள்ளது. பெட்ரோகெமிக்கல், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இருந்து தயாரிக்கப்படுவது. அதனால் உடலுக்கு மிக மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியது. இது, நாளமில்லாச் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளைத்திறனைக்கூட குறைந்துபோகச் செய்துவிடும். 

லிப்ஸ்டிக்

* கண்ணில் பாதிப்பு, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தோல் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

* உதட்டுச் சாயங்களில் உள்ள ரசாயனம் மற்றும் இடுபொருட்கள் நம்மை அறியாமலேயே நம் வயிற்றுக்குள் போய்விடும் அபாயமும் உண்டு. எனவே, இதில் உள்ள நச்சுக்கள் உடலுக்குள் சென்று, மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.

* விலை மலிவான லோக்கல் பிராண்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன... கவனம்!

* லிப்ஸ்டிக்கோ, லிப் கிளாஸோ தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். விருந்து, விழாக்கள் என ஸ்பெஷல் மேக்கப் தேவைப்படும் தினங்களில் மட்டும் போட்டுக்கொள்ளவும். 

* தரமானதாகப் பார்த்து வாங்கவும். 

- வெ.வித்யா காயத்ரி (மாணவப் பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!