Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கஞ்சி... ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம்! #HealthTips

‘வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்த வக்கில்லை’, `ஒரு வாய் கஞ்சிக்கு வழி இருக்கா சொல்லு’... என விரிகிற சொற்றொடர்கள் எல்லாமே ஆழ்ந்த பொருள்கொண்டவை. அதுதான் மனித வாழ்வின் ஆதாரம் என்பதை அப்பட்டமாக உணர்த்துபவை. மனிதன் உயிர்வாழ ஐந்து நட்சத்திர விடுதி சாப்பாடோ, விருந்தோ தேவையில்லை; உணவாக ஒரு கலையம் கஞ்சி போதும். கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை! 

கஞ்சி

‘இன்றைக்கு சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்... அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றில் தயாரிக்கப்படுவதாகட்டும்... அனைத்துமே ஒவ்வொருவிதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். எளிமையான செய்முறை; தண்ணீரில் அல்லது பாலில்கூட இதைத் தயாரிக்கலாம்; எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. தனியாகத் தயாரிக்கப்படுவது தவிர, சாதம் வடித்ததேகூட ஆரோக்கியமானது; நம் உடலுக்கு பலம் தருவது. 

பழைய ‘விக்கிரமாதித்தன் கதை’யில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடந்த ஒருவனுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவனால் வாயைத் திறந்து சாப்பிடக்கூட முடியாது. உடல் அவ்வளவு பலவீனம் அடைந்திருக்கும். சோற்றை வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாதத்தைப் போட்டு, நெய் ஊற்றி அதை ஒரு துணியில் முடிவார்கள். அந்தத் துணியால் அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்கள். அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்துவிடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இது வெறும் கதை அல்ல... இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் எழுதிய யதார்த்தம். 

கொள்ளில்...

நம் பாரம்பர்யத்தில் மட்டும் அல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளின் முக்கிய உணவாக இது இருந்திருக்கிறது; இருக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டிலும் இதுதான் எளியோர்களின் முக்கிய உணவு. வறுத்த இறைச்சி என்பதெல்லாம், விருந்தில் பெருந்தனக்காரர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பரிமாறப்படும் ஒன்று. ரொட்டி என்பதேகூட நகரங்களில் மட்டும் சாப்பிடப்படும் ஆடம்பர உணவாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. மாயா, ஆஸ்டெக் நாகரிகங்களில்கூட கஞ்சி பிரதான உணவாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 

இதை வெறுமனே அப்படியே குடிக்கலாம்; தொட்டுக்கொள்ள பச்சைமிளகாய், வெங்காயம், ஊறுகாய், கருவாட்டுத்துண்டு இருந்தால் அமர்க்களம். சீனாவிலும் பாரம்பர்ய உணவாக கஞ்சி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சீனர்களின் வரலாற்று ஆவணமான `புக் ஆஃப் சோவ்’ (The Book of Zhou), நூலில் `முதன்முதலில் சிறுதானியத்தில் கஞ்சி தயாரித்தது அரசர் ஹுவாங் டி (Huang Di)' என்கிற குறிப்பு இருக்கிறது. பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய `ஆலிவர் ட்விஸ்ட்’ (Oliver Twist) நாவலில் வறுமையின் அடையாளமாகக் கஞ்சியை சித்தரித்திருப்பார். ஆனால், மென்மையான சத்துள்ள இந்த உணவு, மேல்தட்டு மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் கஞ்சி... கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கிட்டத்தட்ட இதே பெயரில் அழைக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயர்... வங்காளத்தில் `ஜாவு’ (Jaou), ஒடிசாவில் பகல் பாத் (Pakhal Bhat). ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்கள்... பர்மியர்களுக்கு `ஹ்சான் ப்யோக்’ (Hsan Pyok), போர்ச்சுகீசியர்களுக்கு `கேன்ஜா’ (Canja),  தாய்லாந்துகாரர்களுக்கு `காவோ டோம்’ (Khao Tom), ஜப்பானியர்களுக்கு `காயு’... நீள்கிற கஞ்சியின் பெயர்களுக்கு முடிவே இல்லை. இந்தோனேஷியா, கொரியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், போர்ச்சுக்கல், இலங்கை, சிங்கப்பூர், துருக்கி... என கஞ்சி இல்லாத தேசமே இல்லை. ஏனென்றால், இது மனிதனின் ஆதி உணவு... ஆதார உணவு. 

அரிசியில்...

இரண்டு நாள் சோறில்லாத ஒருவனுக்கு ஒரு குவளை கம்மங்கஞ்சி சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு. இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது பெண்ணின் மாதவிடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு `கஞ்சி மட்டும் கொடுங்க...’ எனப் பரிந்துரைக்கும் டாக்டர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். பாலூட்ட இயலாத தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கலக்கிக் கொடுக்கும் பல சத்து மாவுகள், கஞ்சியின் இன்னொரு வடிவம்தான். ஆனால், அதுவும்கூட குழந்தைகளுக்கு சத்தில்லாத வெறும் உணவு என்ற வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து இந்தக் கலவைகளில் கிடைப்பதில்லை. வறுமை பாதித்தப் பகுதிகளில் அரசும் அதிகாரிகளும் கடைசி கடைசியாக இறங்கி வந்து செய்கிற வேலை... கஞ்சித்தொட்டி திறப்பது! இது பல இடங்களில் மக்களின் வயிற்றை நிறைத்துவிடுகிறது; பல விஷயங்களை மறந்துபோகவோ ஒத்திப்போடவோ வைத்துவிடுகிறது என்பது யதார்த்தமே! பத்மினி

கஞ்சியின் தரும் ஆரோக்கியப் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பத்மினி... ``கஞ்சி ஆரோக்கிய உணவு. நோயாளிகளுக்கு மருந்தும்கூட. பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க் கஞ்சி வைத்துக்கொடுப்பது நம் வழக்கம். அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. காலையில் எழுந்து கஞ்சி குடித்தாலே அன்றைக்கு முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்துவிடும். 

இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாகச் செயல்படும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். ஏதாவது ஒரு நோய்த்தொற்று காரணமாக ஜுரம், வாந்தி வரும்போது, அவற்றின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும். அதனால்தான் ஜுரம் வந்தவர்களுக்கு இதைக் கொடுக்கச் சொல்கிறார்கள். ஜுரத்தில் இருந்து விரைவாக மீள்வதற்கும் இது உதவும். 

வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது பயனளிக்கும். வயிற்றுப்போக்கு வந்த குழந்தைகளை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், அவர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். கஞ்சித் தண்ணீர், குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் உதவும். அரிசிக் கஞ்சி மட்டுமல்ல... சாதம் வடித்த கஞ்சிகூட பல பயன்களைத் தரக்கூடியது. சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங்களுக்கும் இது உதவும்.  உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். கிராமங்களில் இதைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குப் போகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இது, உடல் வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும். அதனால்தான் கோடை காலத்தில் கஞ்சி குடிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அல்சீமர் போன்ற மறதி நோய் வராமல் தடுக்கும். அரிசி மட்டுமல்ல, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ்... என எதிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். கஞ்சி, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாதது; உடலுக்கு ஆரோக்கியம் தருவது!’’

பிறகென்ன... ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவாய் கஞ்சியைக் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்தானே! 

-  பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement