வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (07/04/2017)

கடைசி தொடர்பு:13:56 (07/04/2017)

அதிகாலை விழித்தெழுதல் நல்லனவெல்லாம் தரும்... துயிலெழ உதவும் 10 வழிகள்!

'திகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்' என்பது வழக்குமொழி. `சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழித்தெழுவதுதான் ஒருவனை ஆரோக்கியமாகவும், திறமையானவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் வைத்திருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அதாவது, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் குறிக்கோளை எளிதாக அடைய முடியும் என்பதே உண்மை. வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் இந்த வழக்கத்தைக்கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அதிகாலை 

 

ஆனால், இன்றைய தலைமுறையிலோ, பலரும் நடு இரவுக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள்; காலையில் தாமதமாகத்தான் எழுகிறார்கள். இதனால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அவசர அவசரமாகக் கிளம்பவேண்டியிருப்பதால், காலை உணவைத் தவிர்ப்பது தொடங்கி, கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்கு ஆளாவது வரை பல விபரீதங்கள்!

அதிகாலையில் எழுகிறவர்களோ பொறுமையாக, அவசரம் இல்லாமல் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லலாம். அவர்களுக்குக் கூடுதல் நேரம் இருப்பதால், பதற்றம் இல்லாமல் பணியைத் தொடங்கலாம். அதோடு அலுவல நெருக்கடி, மனச்சோர்வு, உடல் உபாதைகள், மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும் முடியும். ஆனாலும், பலராலும் விடியற்காலையில் எழுந்திருப்பது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. அதற்கு உதவும் 10 வழிகள் இங்கே...

மதியத்தில் நீண்ட வாக்கிங்!

மதிய உணவு இடைவேளையில் ஒரு நீண்ட வாக்கிங் சென்று வரலாம். நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடப்பது நல்லது. இந்தப் பழக்கம், இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு உதவும். 

நடைபயிற்சி 

மாலைப்பொழுதில் எக்சர்சைஸ்!

`காலை நேரத்தைவிட மாலை நேரங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இரவில் தூக்கம் வரவழைக்கும் சக்தி அதிகம்’ என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள். எனவே, மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்!

இரவு நேரத்தில், தொலைக்காட்சித் திரையில் இருந்து வெளிப்படும் ஊதா நிற கதிர்கள், உடலில் `மெலட்டனின்’ ( Melatonin) என்ற தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன் சுரப்பைப் பாதிக்கும். எனவே, இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைத் தவிர்க்கவும்.

தூக்கம் 

மணம் வீசும் விளக்கு உதவும்!

இரவில் தூங்கச் செல்லும்போது, அறையில் இரவு விளக்காக நறுமணம் வீசும் எண்ணெய் விளக்குகளை (Aroma Lamps) ஏற்றிவைக்கலாம். இவற்றிலிருந்து வெளிப்படும் வாசம், மனதை ரிலாக்ஸாக்கி, அழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்; உடற்சோர்வை நீங்கவும் உதவும். 

இரவு உணவைக் குறைக்கவும்!

இரவில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு அல்லது குறைந்த அளவான உணவைச் சாப்பிடலாம். இதனால், அதிகாலையிலேயே பசியுணர்வு ஏற்பட்டுவிடும். அது, நம்மை எழுப்பிவிட்டுவிடும்.

அதிகாலை 

தூக்கத்தை வரவேற்கவும்!

தூக்கம் வரும் உணர்வு ஏற்பட்டால் மட்டும் உறங்கச் செல்வது என்பதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இது படுக்கையில் படுத்தும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதையும், தூங்குவதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கும்.

அறைக்குள் வரட்டும் ஆகாசக் காற்று!

இரவில் தூங்கும் அறையின் ஜன்னல்களை முடிந்தவரை திறந்து வைத்துத் தூங்குவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உறக்கத்தின்போது அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவோம். அது மூடிய அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்தால், மூச்சுவிட சிரமம் ஏற்படும். அதன் காரணமாகவும், தூக்கம் கலையலாம். இடையூறு இல்லாத தூக்கம்தான் காலையில் சீக்கிரத்தில் எழுந்திரிக்க அலாரம்நமக்கு உதவும்.

தட்டியெழுப்ப ரசனைக்குரிய பாடல்!

`அலாரம்வெச்சாலும் என்னால எந்திரிக்க முடியலை’ என்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், அலார சத்தத்தை எழுப்பும் கடிகாரத்தையோ, செல்போனையோ உறங்கும் இடத்துக்கு அருகில் வைக்கக் கூடாது. சற்று தொலைவில், கேட்கும் தூரத்தில் வைக்க வேண்டும். அதாவது, அறைக்கு வெளிப்புறத்தில் அல்லது பக்கத்து அறையில் வைத்துவிடலாம். இதனால் ஒலி எழும்போது அதை ஆஃப் செய்வதற்காக எழுந்து செல்வோம்; தூக்கம் கலைந்து சுறுசுறுப்பு ஏற்படும். அலாரத்துக்காக வைக்கும் பாடல் நமக்கு பிடித்தமான பாடலாக இருப்பது நல்லது. அந்தப் பாடல் சத்தம் தொலைவில் இருந்தாலும், நம் மூளையை எளிதில் தூண்டி உறக்கத்தைப் போக்கிவிடும். 

சூரிய ஒளி உசுப்பிவிடும்!

மொட்டைமாடியில் தூங்குவது அல்லது படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நல்லது. சூரிய ஒளியே நம்மை உசுப்பி எழுப்பிவிடும்; புத்துணர்வுடன் எழுந்துகொள்ள உதவும். 

இலக்கு

குறிக்கோள் முக்கியம்!

பொதுவாக எந்த நிர்பந்தமும், பெரிய அளவிலான தீர்மானமும் இல்லாதவர்கள் அதிகாலையில் எழுந்துகொள்வதில்லை. எனவே, திடமான குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம், `காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தையாவது உறுதியாக எடுத்துக்கொண்டால், மூளையே அலாரம் அடித்து நம்மை எழுப்பிவிட்டுவிடும். உண்மையில், மூளையைவிடச் சிறந்த அலாரம் ஏதுமில்லை!

- ஜி.லட்சுமணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்