Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனம்விட்டுப் பேசலாம்... மனஅழுத்தம் குறைக்கலாம்! - உலக சுகாதார தினப் பகிர்வு #WorldHealthDay

ண்டுதோறும் ஏப்ரல் 7, `உலக சுகாதார தின’மாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் உடல்நலம் சார்ந்த முக்கியமான ஒரு கருப்பொருளை மையப்படுத்தி, அதைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில்  இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘மனஅழுத்தம் பற்றிப் பேசுவோம்’ (Depression, Let's Talk) அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி, `உலக அளவில்  மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30 கோடிப் பேருக்கும் மேல். 2000 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களைவிட இது பதினெட்டு சதவிகிதம் அதிகம். 

மனஅழுத்தம்

மனஅழுத்தம், குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. ஐந்து பேரில் ஒருவர்  மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முழுக்க முழுக்கப் பொருளியல் சார்ந்து மாறிவரும் சமூகச் சூழலில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு குழந்தையின் நிலையை எண்ணிப்பாருங்கள். எவ்வளவு கொடுமையானது அது? ’நாளைக்கு எக்ஸாம் இருக்கு, விளையாடிக்கிட்டு இருக்காம படிக்கிற வழியைப் பாரு’ என்று பதற்றத்தோடு மிரட்டும் அம்மாக்கள். இவர்களின் குழந்தைகள் ப்ளஸ் டூ படிப்பவர்களாக இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால், இந்த அறிவுரையோ பிரீகேஜியில் ரைம்ஸ் சொல்லும் தேர்வுக்குத்தான் சொல்லப்படுகிறது. 

குழந்தையின் மனஅழுத்தம்

பொருள் தேடும் ஓட்டம் தொடர்பான பயிற்சி, குழந்தைகளுக்கு பிரீகேஜியிலேயே தொடங்கிவிடுகிறது. தேர்ச்சி அட்டவணையில் எல்லா முறையும் ஃபர்ஸ்ட் ரேங்க் இருந்தால்தான் பெற்றோர் முகத்தில் பூரிப்பு எட்டிப்பார்க்கிறது. `நீ என்னவாகப் போறே?’ என்ற கேள்வி குழந்தை பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே கேட்கப்படுகிறது. ஒரு மனிதனாகவே அது அப்போதுதான் ஆகி வந்திருக்கிறது, அதற்குள் அது என்னவாக முடியும்?  சில ப்ளே ஸ்கூல்களில் குழந்தைகளுக்கு அவர்களின் பண்புகள் சார்ந்து, `இந்தக் குழந்தை அன்பானவன்’, `இந்தக் குழந்தை கருணைமிக்கவன்’... என்றெல்லாம் சான்றிதழ்கள் தரப்படுவதாக ஒரு நண்பர் சொன்னார். மூன்று வயதில் எல்லாக் குழந்தையும் பிறர் மேல் அன்புடனும் கருணையுடனும்தானே இருக்க முடியும்? `இது வக்கிரம் மிகுந்த குழந்தை’ என்று எந்தக் குழந்தைக்காவது சான்றிதழ் தர முடியுமா? ஒரு குழந்தை அன்பானவன் என்பதை ஈக்யூ (EQ) தேர்வு வைத்து கண்டிபிடித்த நேரத்தில், அதனுடன் கொஞ்சம் அன்பாகப் பேசியிருந்தால், உளச்சிக்கலில் இருந்து அந்தக் குழந்தையைத் தேற்றி இருக்கலாம். 

உளச்சிக்கல்

டாக்டர், இன்ஜினீயர் என ஏதாவது ஒன்றாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு, பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடிக்கும் குழந்தை மெதுவாக இளமைக்குள் குதித்து இறங்குகிறது. எதிர்ப் பாலினம் பற்றிய ஆசைகள் மனதில் முளைக்கின்றன. உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அறிதலுக்கான ஆர்வம் அதிகரிக்கிறது. ஆனால், கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களைத் தேர்வுத்தாளில் பிரதியெடுக்க வேண்டியிருக்கிறது. ஆணும் பெண்ணும் பேசவே முடியாதபடி பிரித்துவைக்கப்படுகிறார்கள். அணைகளை உடைத்து முன்னேறும் இளமைப் பருவம் சரியான நபர்களிடம் இருந்து வாழ்வியல் ஆலோசனைகள் கிடைக்காததால், இணையத்தின் மூலைமுடுக்குகளில் அதைத் தேடிப் பார்த்து தப்பு தப்பாக தகவல்களைப் பொறுக்கி எடுக்கிறது. ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் சரிவரப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல், வெறும் உடல் ஆசைகளால் உந்தப்பட்டு அதன் முடிவில் காதல் தோல்வியாக அது கற்பனை செய்துகொள்ளப்படுகிறது. இது, உளச்சிக்கலாக மாறுகிறது. 

ஆனால், சிலருக்கு இந்த வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. பேசாமலேயே பிரித்து வைத்ததால், அவர்கள் எப்போதும் எதிர்ப் பாலினத்தை ஒருவித நடுக்கத்தோடு எதிர்கொள்கிறார்கள். `எதிர்ப் பாலினத்தோடு பேசாதே, பேசாதே’ என்று தினமும் கட்டளையிட்டுவிட்டு, இன்டர்வியூவில் எதிர்ப் பாலின மனிதவள அதிகாரியுடன் பேச முடியாமல் திக்கித் திணறும்போது ’உனக்கு கம்யூனிக்கேஷனே வராதுடா’ என மனச்சிக்கலை ஏற்படுத்துகிறது சமூகம். 

வேலையில் மனஅழுத்தம்

காலகட்டத்துக்கு ஒத்துவராத கல்விமுறையால், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போய்விடுவதால் மனஅழுத்தம் இன்னும் அதிகமாகிறது. வேலை கிடைத்தாலும், மனஅழுத்தம் குறைவதில்லை. முற்றிலும் வணிகமயமான சூழலால், மேம்படாத முதலாளித்துவ நடைமுறைகளால் மனஅழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது. எதிர்பாலினப் புரிதல் இல்லாமல் திருமணம் செய்துகொள்வதால் மண உறவில் மனக்கசப்பு மேலோங்கி, விவாகரத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. இதனால் மனஅழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது. பெண்ணுக்கு முதல் குழந்தை பிறக்கும்போது, குழந்தை வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாது. அதனால், குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எண்ணி மனஅழுத்தம் ஏற்படும். இந்த ஓட்டத்துக்கு இடையில் பெற்றோரை கவனிக்க நமக்கு நேரம் ஏது? சிறு வயதில் அவர்கள் நம்மை கவனிப்பதில்லை; பெரியவர்களானதும் நாம் அவர்களை கவனிப்பதில்லை. கவனிப்பதற்கு ஆள் இல்லாத வயதான பெற்றோருக்கு தனிமையால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதே தனிமையைத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் அவர்கள் கொடுத்தார்கள் என்பது இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நம் வேகமான வாழ்வியல் ஓட்டமும், தவறான வாழ்க்கைமுறையுமே மனஅழுத்தத்துக்கான மிக முக்கியக் காரணம். நாம் யாருக்குமே நேரம் ஒதுக்குவதில்லை. 

கடந்த வாரம் உங்கள் குழந்தையோடு எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்? 

கல்லூரியில் படிக்கும் உங்கள் பையனின் பெண் தோழி பற்றி ஒரு முறையாவது அவனிடம் கேட்டிருக்கிறீர்களா?

அலுவலகத்தில் சோகமாக இருக்கும் ஒருவரிடம் ‘என்னாச்சு சார்?‘ என்று அக்கறையாகக் கேட்டதுண்டா? 

கண்ணே தெரியலடா, கண்ணாடி மாத்தணும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ காது கொடுத்தீர்களா?... 

உச்சகட்ட மனஅழுத்தம்

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் மனம்விட்டு பேசுவதே அதை விரட்டுவதற்கான வழி. யாராவது ஒருவர் உங்கள் தோள்மீது சாய்ந்து கொஞ்ச நேரம் அழ விரும்பலாம்; உங்களிடம் போனில் பேசினால், மனஆறுதல் கிடைக்கும் என நம்புபவர்கள் இருக்கலாம். அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். மனஅழுத்ததால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். தியானப் பயிற்சிகளைச் செய்யலாம். இது சாதாரணப் பிரச்னையல்ல. தற்கொலை வரை கொண்டுசெல்லும் ஆற்றல் உடையது. `மனஅழுத்தம் பற்றி மனம் விட்டுப் பேசுவேன்’ என்பதே  இந்த நல்ல நாளில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமோழி. ஏனென்றால், இந்த 30 கோடிப் பேர் பட்டியலில் இருப்பது வேறு யாருமல்ல... நீங்களும் நானும்தான்!

- அகில் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement