தலைவலி முதல் நெஞ்சுவலி வரை தீர்க்க மருந்தில்லா மருத்துவம்.!அக்குப்பிரஷர் பலன்கள் | Most Popular Acupressure Points and their Benefits

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (09/04/2017)

கடைசி தொடர்பு:19:58 (09/04/2017)

தலைவலி முதல் நெஞ்சுவலி வரை தீர்க்க மருந்தில்லா மருத்துவம்.!அக்குப்பிரஷர் பலன்கள்


சப்பான மருந்துகள்... வலி தரும் ஊசி... இவற்றைப் பார்த்தால் பலருக்கும் பயம்தான். அதுபோல கஷாயம், பத்தியச் சாப்பாடு இதையெல்லாம் முறையாகப் பின்பற்ற மெனக்கெடுவது வெகுசிலரே. `மருந்தும் வேண்டாம்; ஊசியும் வேண்டாம். ஆனால் நோய் தீரவேண்டும்’ என்பவருக்கான நற்செய்திதான் இந்த மருந்தில்லா மருத்துவம். வலி இல்லாத சிகிச்சை என்பது இனிப்பான தகவல். நமக்கு நாமே செய்துகொள்ளும் எளிய பயிற்சிதான் இந்த அக்குப்பிரஷர். 


இது, 5,000 ஆண்டுகாலப் பழைமையான சிகிச்சை முறைகளில் ஒன்று. உடல்நலக் கோளாறுகளைச் சரிசெய்வதற்கும் மனரீதியான டாக்டர் பாரதிபிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. `உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளை நாமே சரி செய்துகொள்ளலாமா... அதை எப்படிச் செய்ய வேண்டும்?’ என்று பிரபல அக்குப்பிரஷர் நிபுணரான பாரதியிடம் கேட்டோம். 


குறிப்பிட்ட புள்ளிகளில், விரல்களால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவே அக்குபிரஷர். இதனால் அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் உடலின் ஆற்றலைத் தூண்டி உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சுயமாகச் செய்வதைவிட அக்குப்பிரஷர் நிபுணரிடம் செய்துகொள்வது மிகுந்த பலன்களை அளிக்கும். இருந்தாலும், நிபுணரின் வழிகாட்டுதலின்படி சில பிரச்னைகளுக்கு நாமே அக்குப்பிரஷர் செய்துகொள்வதால் உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.


முடி உதிர்வைத் தடுக்க...  

அக்குப்பிரஷர்


செய்முறை: பிடரியின் மத்தியப் பகுதியில், 15 முறை  மெதுவாக ஆழமாகச் சுவாசித்துக்கொண்டே அழுத்தம் கொடுக்க வேண்டும்.  தினமும் காலை, மாலை என இரண்டு முறை செய்யவேண்டும். தொடர்ந்து நான்கு வாரங்கள் இப்படி அழுத்தம் கொடுக்கலாம்.


பலன்கள்: முடி உதிரும் பிரச்னையைக் குறைக்கும். பின் தலைவலி, கழுத்து விறைப்பு (Stiffness), வலிப்பு, கவனமின்மை ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் இதைச் செய்தால் நல்ல பலன்களைத் தரவல்லது.


மன உளைச்சல் நீங்க... 

மன உளைச்சல்


செய்முறை: உள்ளங்கையை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். படத்தை உள்ளபடி, கையின் மீது நான்கு விரல்களை வைக்கவேண்டும். ஐந்தாம் விரல் வைக்கும் இடத்தில் உள்ள புள்ளியில், 12 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த இடத்தில் இரண்டு நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுக்கலாம்.


பலன்கள்: 'பெரிகார்டியம்' எனப்படும்  இதய வெளியுறையுடன் இந்தப் புள்ளிகள் தொடர்புடையதால், எதிர்மறை உணர்வுகள் நீங்கி, மனம் தளர்வடையும். குமட்டல், வாந்தி, இரைப்பை மேற்பகுதியில் ஏற்படும் வலி ஆகியவை சரியாகும். 


உடல் சூட்டைத் தணிக்க... 

அக்குப்பிரஷர்


செய்முறை: படத்தில் இருப்பதுபோலக் கை மூட்டு அருகில்,  12 முறை ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். காலை, மாலை என இரு வேளையும் அழுத்தம் தர வேண்டும். 


பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வெப்பத்தால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும். தோல் சிவந்து போவதைச் சரிசெய்யும். இந்தப் புள்ளி பெருங்குடலுடன் தொடர்புடையதால், வயிற்றுப்போக்கையும் சரிசெய்யும்.


தொண்டை வலி குணமாக... 

தொண்டை வலி

செய்முறை: ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே, தொண்டைக்குழியில் உள்ள புள்ளியில் (படம் பார்க்க),  மிதமாக 12 முறை ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும், இப்படி மூன்று முறை செய்தாலே போதுமானது.


பலன்கள்: தொண்டை வலி, தொண்டைப்புண்கள், இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகும். 


ஆழ்ந்த தூக்கத்துக்கு...

தூக்கம்

செய்முறை: நடுவிரலின் நுனிப்பகுதியில், ஒரு நிமிடம் வரை ஆள்காட்டி விரலால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.


பலன்கள்: தூக்கமின்மைக்கு முக்கியக் காரணமே கவலைதான். இந்தப் புள்ளி பெரிகார்டியத்துடன் தொடர்புடையதால், இதயத்துக்குச் சீராக ரத்தம் செல்ல உதவுகிறது. அதனால், மனச்சோர்வு நீங்கி ஆழ்ந்த தூக்கம் வர உதவும். இதயம் தொடர்பான வலி, நெஞ்செரிச்சல், எரிச்சல் உணர்வு, நாக்கு வீக்கமடைதல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.


செரிமானப் பிரச்னைகள் சரியாக...

அக்குப்பிரஷர்

 


செய்முறை:  காலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் இடையில் உள்ள புள்ளியை (படம் பார்க்க),  20 முறை ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 


பலன்கள்: இந்தப் புள்ளி வயிற்றுப் பகுதியுடன் தொடர்புடையதால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரியாக்கும். 


கவனம்: சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது  சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரோதான் இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.


ஹார்மோன் குறைபாடுகளைச் சரி செய்ய... 

ஹார்மோன் குறைபாடு

 


செய்முறை:  கணுக்கால் பகுதியில், நான்கு விரல்களை வைக்க வேண்டும். ஐந்தாம் விரல் வைக்கும் இடைவேளிவிட்டு,படத்தில் உள்ளபடி அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை என, ஒரு நிமிடத்துக்கு ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே  இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தாலே போதுமானது.


பலன்கள்: இந்தப் புள்ளி மண்ணீரலுடன் தொடர்புடையது. மாதவிடாய் வலி, பாலியல் தொடர்பான ஆர்வம் குறைதல்,  அதிக ரத்தப்போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றுதல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வாகும்.


குறிப்பு: கருவுற்ற பெண்கள், கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் ஆகியோர் இதைத் தவிர்க்கவும்.


தலைவலி சரியாக...

தலைவலி


செய்முறை:  பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலின் இடையில் உள்ள புள்ளி (படம் பார்க்க),  ஒரு நிமிம் வரை மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 


பலன்கள்: ஒற்றைத் தலைவலி, தலைச்சுற்றல், கண் வலி, சைனஸ், வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வாகும்.


குறிப்பு: கருவுற்ற பெண்கள், கர்ப்பமாக திட்டமிடுபவர்கள் இந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கக் கூடாது. 


சுவாசக் கோளாறுகள் சீராக...

அக்குப்பிரஷர்


செய்முறை:  பெருவிரலின் நகப்பகுதியின் நுனியில் (படம் பார்க்க), ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே 16 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் அழுத்தம் தந்தால் போதும்.


பலன்கள்: இந்தப் புள்ளி நுரையீரலுடன் தொடர்புடையது. மனஅழுத்தம், பதற்றம், கோபம் அதிகரிக்கும் நேரத்தில், இங்கே அழுத்தம் கொடுக்கவும். மயக்கம் வருவதுபோல இருந்தால், அருகில் இருப்பவரிடம் சொல்லி இந்த இடத்தில் மிதமாக அழுத்தம் கொடுத்தால் மயக்கம் தெளியும்.


நெஞ்சு வலியைக் குறைக்க... 

அக்குப்பிரஷர்


செய்முறை:  வலது உள்ளங்கையின் கீழே உள்ள புள்ளி (படம் பார்க்க), அந்த இடத்தில் 10 முறை மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.


பலன்கள்: இந்தப் புள்ளியை, `கடவுளின் வாசல்’ என சீன மருத்துவர்கள் கூறுவார்கள். இந்தப் புள்ளி இதயத்துடன் தொடர்புடையதால், இதயம் சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளையும் மனஅழுத்தத்தையும் சரி செய்யும்.


- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close