Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மவுத் ஃபிரெஷ்னர், கிளென்ஸர், ஃபேட் பர்னர்... அனைத்துக்கும் தீர்வாகும் சோம்பு..! #HealthTips

பெருஞ்சீரகம் என்னும் சோம்பின் இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவக்குணம் நிறைந்தவை. பெருஞ்சீரகம், சோம்பு என அழைக்கப்படுகின்ற இந்த மூலிகை, இறைச்சி உணவுகள் செரிமானமாகவும், பேக்கரி பொருட்களிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பெருஞ்சீரகம் முக்கிய இடம் வகிக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சாதாரணச் சளித்தொல்லையில் தொடங்கி வயிறு மற்றும் கர்ப்பப்பை தொடர்பான நோய் வரை பெருஞ்சீரகம் நல்லதொரு மருத்துவப்பணி ஆற்றுகிறது. ஆகவே, சாதாரணப் பெருஞ்சீரகம்தானே என்று அதை ஒதுக்கிவிடாமல் அதன் பலனை அனுபவியுங்கள். பெரும்பாலானோரின் மனம் நோகச்செய்யும் வாய் துர்நாற்றத்தைப்போக்க ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை வாயில் அள்ளிப்போட்டாலே பலன் கிடைக்கும். ஹோட்டலில் உணவு உண்ட பிறகு, செரிமானத்துகாகக் கொடுக்கப்படும் இந்தச் சோம்பு வாசனைமிக்கது. 

சோம்பு

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சமையல் பொருட்களுள் ஒன்று சோம்பு. மருத்துவப் பலன்கள் நிறைந்த சோம்பு நமக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்யக்கூடியது. அதுபற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ். 

பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. சோம்புத் தண்ணீரை தினமும் குடித்து வர அது பல்வேறுவிதமான பலன்களை நமக்குத் தரும். 

1.சோம்பு கஷாயம்... 

தேவையானவை: சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 5௦௦ மில்லி 

செய்முறை: கடாயில் சோம்பையும் தண்ணீரையும் சேர்த்து 125 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். பிறகு அந்தக் கஷாயத்தைக் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் பலன் கிடைக்கும். தொப்பை குறையும். செரிமான சக்தி மேம்படும். 

2.சோம்புத் திராவகம்... 

தேவையானவை: சோம்பு – 25௦ கிராம், தண்ணீர் – ஒன்றரை லிட்டர், தேன் - தேவையான அளவு. 

செய்முறை: பெருஞ்சீரகத்தில் நீர் ஊற்றி குக்கரில் ஆவி வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின்னர்க் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்க வேண்டும். அப்போது பாலாடை போன்று திரண்டு வரும். அதனை 3 முதல் 5 மில்லி வரை எடுத்துத் தேனில் குழப்பிச் சாப்பிட்டு வர சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வலிகளுக்கு உடனடித் தீர்வாக அமையும். 

திராவகம்

3.சோம்புத் தண்ணீர்... 

செய்முறை: கொதிக்க வைத்த இரண்டு லிட்டர் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் சோம்பு போட்டு மூடிவைத்துவிடவேண்டும். இதை நாள்முழுவதும் வைத்து குடிக்கலாம்.

பலன்கள்

* வளர்சிதை மாற்றம் சீராகும். 

* சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும். 

உடல் எடை குறைக்க உதவும்

* வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து தட்டையான வயிறாக மாறும்.

* செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுவலிக்குச் சோம்புத்தண்ணீர் உடனடி தீர்வு தரும். 

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். 

* சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். 

புத்துணர்வு தரும்

* புத்துணர்ச்சியை அளிக்கும். 

* காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும். 

* தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன்மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். 

சீரான தூக்கம்

* பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும். 

* சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய் குடல் இரைப்பைப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் வாய்வுக்கோளாறு, வயிறு உப்புதல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சோம்பு நீரை அருந்தினால் சிறந்த பலன்களைத் தரும். 

* சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால், உடலுக்கு மிகச் சிறந்தது. அதிகப்படியான நச்சு நீர் உடலில் சேர்வதைத் தடுப்பதோடு உடலில் தேங்கியிருக்கும் நச்சு நீரை வெளியேற்ற உதவும். 

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பெருஞ்சீரகத்தைக் கொண்டு உடல்நலத்தைப் பேணிக் காப்போம். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பதை மறந்து விடாதீர்கள்.. 

- வெ .வித்யா காயத்ரி, (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement