வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (13/04/2017)

கடைசி தொடர்பு:07:55 (13/04/2017)

‘கேக் எடு கொண்டாடு!’... தவிர்த்தல் நலம்..! #HealthTips

கேக் இல்லாத கொண்டாட்டம் முழுமை பெறுவதில்லை. பிறந்தநாள், திருமண நாள், புரொமோஷன், பிற முக்கிய நிகழ்வுகள்... என எதுவாக இருந்தாலும், கேக்கில்லாமல் கிடையாது என்கிற அளவுக்கு இதன் முக்கியத்துவம் கூடிவிட்டது. ஒருவரின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, அலுவலகத்தில் கொண்டாடுவது பரவலாகிவிட்டது. அதுவும், பட்டர் ஸ்காட்ச், காபி, சாக்லேட், கேரமல்... என விதவிதமான கேக்குகளில் ஒன்றை வாங்கி, வெட்டவைத்து அனைவரும் சுவைத்து மகிழ்கிறார்கள். இதைப் பார்க்கும்போதே எடுக்கச் சொல்லி, கைகள் பரபரக்கத் தொடங்கிவிடும்; நாவூறும்; இனிப்புச் சுவையுடன் மெத்தென்று இருக்கும் இதன் தன்மை சொக்கவைத்துவிடும். இன்றைக்கு குழந்தைகளின் பிறந்தநாளில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கமாகிவிட்டது கேக். பேக்கரிகளில் கிலோ கணக்கில் ஆர்டர் கொடுத்து வாங்கி, வீட்டில் பலூன்களைக் கட்டி தொங்கவிட்டு, அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ ஆரவாரமாக கேக்கை வெட்டிக் கொண்டாடுவது எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது. எங்கிருந்து வந்தது இந்த கேக்? 

கேக்

பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது கேக். சலித்த மாவு (மைதா, அரிசி, கோதுமை... என பல மாவுகளில் ஏதோ ஒன்று), சர்க்கரை, முட்டை, பால், வாசனைப் பொருட்கள், வெண்ணெய், சிலவற்றில் பழங்கள்... எல்லாம் கலந்து தயாரிக்கப்படுகிறது. பிரெட்டைப் போல, கைக்கு அடக்கமாக, பெரிய சைஸில்... என விதவிதமான அளவுகளில் உலகெங்கும் ஆயிரக்கணக்கான வகைகளில் கேக் தயாரிக்கப்படுகிறது. இதைத் தயாரிப்பது அப்படி ஒன்றும் பிரம்ம வித்தை அல்ல. பொருத்தமான பேக்கிங் பாத்திரங்கள் இருந்து, சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால், ஒரு சாதாரண சமையற்காரர்கூட பேக்கரி எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம். 2015-ம் ஆண்டு, இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 16 மீட்டர் நீளம், 13.94 மீட்டர் அகலம், 1,000 கிலோ எடையுடன் பிரம்மாண்டமான கேக் ஒன்றைச் செய்து, கின்னஸ் சாதனையெல்லாம் புரிந்திருக்கிறார்கள் இதன் ரசிகர்கள். 

மாவு கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே மனிதர்கள், கேக்கைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் மத்திய இங்கிலாந்தில், சிறிய அளவிலான ரொட்டிகளுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக `கேக்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பல்வேறுவிதமான தானியங்களை அரைத்து, அந்த மாவைக்கொண்டு கேக் தயாரித்ததையெல்லாம் இங்கிலாந்தின் தொல்லியல் துறை கண்டுபிடித்திருக்கிறது. பேக்கரிக்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்காத அந்தக் காலத்தில் சூடான கல்லைக்கொண்டு தயாரித்த தகவலெல்லாம் கிடைத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள்தான் இதற்கான ஆரம்பப் புள்ளி என்றாலும், பண்டைய எகிப்தியர்கள்தான் முதன்முதலில் சிறந்த முறையில் கேக்கைத் தயாரித்திருக்கிறார்கள். 

பிறந்தநாள்-கேக்

கிரேக்கர்கள் கேக்கை, `ப்ளாக்கோஸ்’ (Plakous) என்கிறார்கள். இந்தச் சொல், `ஃப்ளாட்’ (Flat) என்கிற வார்த்தையில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். இது பால், முட்டை, நட்ஸ் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படுவது. கிரேக்கர்கள் `சாட்டுரா’ (Satura) என்றும் இதை அழைத்திருக்கிறார்கள். இதன் வேரைத் தேடிப் போனால், ஸ்காண்டிநேவிய கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள். அவர்கள் மொழியில் `ஓல்டு நார்ஸ்’ (Old Norse) என்ற இனமக்கள் பயன்படுத்திய `காகா’ (Kaka)-வில் இருந்து, `கேக்’ என்ற வார்த்தை பிறந்தது என அறிய முடிகிறது. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த  லத்தீன் கவிஞர் ஓவிட், அவருடைய `ட்ரிஸ்டியா’ (Tristia) என்ற நூலில், தன் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கேக் பரிமாறப்பட்டதைப் பற்றி குறிப்பு எழுதிவைத்திருக்கிறார். ஆனாலும், ஆரம்பத்தில் மிக முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே கேக்கைத் தயாரித்திருக்கிறார்கள். ஏனென்றால், இதில் கலக்கப்படும் வாசனைப் பொருட்களும், மற்ற பொருட்களும் சற்று விலை கூடுதலானவை. ஒரு கட்டத்தில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இதை அடிக்கடி சாப்பிட முடியும் என்கிற நிலையும் இருந்திருக்கிறது. 

ஆரம்பத்தில், அமெரிக்காவில் வாழ்ந்த சமையல் நிபுணர்கள், நல வாழ்வைத் தரும் ஒன்றாக கேக்கைக் கருதியிருக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு மாகாணத்திலும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு வகையை மக்கள் வடிவமைத்து வைத்திருந்தார்கள். 19-ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குப் பிறகு, ரயில்கள் வந்தன; அதன் காரணமாக கேக்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதாகக் கிடைத்தன; கேக்கும் எளிதாக தயார் நிலையிலேயே எல்லோருக்கும் கிடைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மேலும் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தது. கேக்கை மேற்கத்திய கலாசார பின்னணி கொண்டது என்று பலரும் கருதியதால், இதனால் ஆசியாவுக்குள் மெள்ள மெள்ளதான் நுழைய முடிந்தது. ஜப்பான் போன்ற சில நாடுகள் `கஸுடீரா’ (Kasutera) எனும் சிறிய அளவிலான கேக்கை, அனுமதித்தன. பிறகு அனைத்து நாடுகளிலும் அடியெடுத்து உள்ளே நுழைந்த கேக், இப்போது ஆழமாக வேரூன்றிவிட்டது. 

துண்டு கேக்

இதன் வகைகளைப் பட்டியல் போட்டு அடக்க முடியாது. ஸ்பாஞ்ச், பட்டர், ஸ்ட்ராபெர்ரி, காபி, சாக்லேட், ரெய்ஸின், ப்ளம்... என நீள்கிற கேக்கின் வகைகளுக்கு முடிவே இல்லை. மேலும் மேலும் புதுப்புது வகைகளை ஒவ்வொரு நாளும் இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள் மேற்கத்திய நாடுகளில். இதன் ரசிகர்கள் அத்தனைக் கோடி பேர்! சரி... நம்மோடு கலந்துவிட்ட இதைச் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியம்தானா? இதன் நன்மை, தீமைகள் குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி... 

``நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி சுவைத்த சில விநாடிகளுக்குப் பரவசத்தைத் தரும் சக்தி கேக்குக்கு உண்டு. இதைச் சாப்பிடுவதால் நன்மைகளும் அவற்றுக்கு இணையான தீமைகளும் உள்ளன. 100 கிராம் ஃப்ரூட் கேக்கில் (ஒரு ஸ்லைஸ்) 324 கலோரிகள் உள்ளன. 13 கிராம் கொழுப்பு, சோடியம் 101 மி.கி., கார்போஹைட்ரேட் 62 கிராம், புரோட்டீன் 2.9 கிராம், கால்சியம் 29 மி.கி., பொட்டாசியம் 153 மி.கி., இவை தவிர சர்க்கரை 27 கிராம், குறைந்த அளவில் 3.7 கிராம் நார்ச்சத்து உள்ளன. 

சாக்லேட் சுவையில்...

முறையான ஊட்டச்சத்து நம் எல்லோருக்குமே அவசியம். அந்த ஊட்டச்சத்துதான் நம் உடலைச் சீராகப் பராமரிக்க உதவும். குழந்தைகளின் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சக்தி அளிக்கக்கூடியது. ஃப்ரூட் கேக்கில் சேர்க்கப்படும் அன்னாசி, கேரட், ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கும். வாழைப்பழம் சேர்த்த கேக் என்றால், குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்யும். அவை, கெட்ட பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடி, நம் செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்யும். இதில் சேர்க்கப்படும் பால், முட்டை இரண்டுமே புரதச்சத்து நிறைந்தவை. இவை, நம் தசை மற்றும் எலும்புகள் பலம் பெற உதவும். அதோடு பாலில் இருக்கும் கால்சியம், பல்லுக்கும் எலும்புக்கும் உறுதி தரும். கேக்கில் சேர்க்கப்படும் பழங்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதில் சாக்லேட் கலந்திருந்தால், நம் உடலில் இருக்கும் எண்டார்பின் மற்றும் செரொட்டோனின் அளவை அது உயர்த்தும். இது நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்; பதற்றத்தைத் தணியச் செய்யும். 

நல்லவை இருந்தாலும், தீமைகளும் உள்ளன. இதில் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் கொழுப்பும் நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதிகமாக அல்லது நீண்டகாலமாக கேக் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்து, சர்க்கரைநோய் வருவதற்குக்கூட காரணமாக அமைந்துவிடும். இதில் வெண்ணெய் அல்லது மார்கரின் (Margarine) சேர்க்கப்படுகிறது. இவை, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுபவை. கேக்குக்கு வண்ணம் சேர்ப்பதற்காகச் சேர்க்கப்படும் நிறங்கள், செரிமானம் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்திவிடும். சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். சில வகை கேக்குகள், சோர்வையும் உறக்கத்தையும் தரக்கூடியவை. 

பொதுவாக கேக், நம் பாரம்பர்ய உணவுப் பொருள் அல்ல. அதிக சர்க்கரை, வெண்ணெய், மாவுப் பொருட்கள் இவையெல்லாம் நம் நாட்டுச்சூழலுக்கு ஆரோக்கியமானவை கிடையாது. எப்போதாவது ருசி பார்ப்பதில் தவறில்லை. அதையும் அளவோடு சாப்பிடுவது சிறந்தது. மற்றபடி கேக்கிலிருந்து சற்று தள்ளியே இருப்பதுதான் உடல்நலத்துக்கு நல்லது.’’

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்