செல்போன் டவர் கதிர்வீச்சால் புற்றுநோய் வருமா? - மருத்துவ உண்மை என்ன?

`செல்போன் டவரில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படும்’ என்கிற எண்ணம் மக்களிடம் இன்று வரை நீடித்திருக்கும் ஒன்று. இதை ஆமோதிப்பதுபோல ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. `செல்போன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது’ என்று கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 42 வயதான ஒருவர் மனுதாக்கல் செய்திருக்கிறார். அவரின் மனுவை ஆதாரமாகக்கொண்டு அங்கிருந்த செல்போன் டவர்களும் அகற்றப்பட்டிருக்கின்றன. 

புற்றுநோய் உண்டாக்குமா செல்போன் டவர் கதிர்வீச்சுகள்

செல்போன் டவர் சர்ச்சை பல ஆண்டுகளாக நடந்தபடி இருக்கிறது. இது குறித்து மத்திய அரசு பல ஆய்வுகளையும் நடத்தியிருக்கிறது. 2014-ம் ஆண்டு `செல்போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், 50-ல் இருந்து 300 மீட்டர் தூரத்துக்குள் இருப்பவர்களுக்கு பாதிப்பு உண்டாகும். புற்றுநோய், மூளையில் கட்டி போன்ற ஆபத்துகள் ஏற்படும். இதற்கு உரிய நடவடிக்கை தேவை’ என்று மும்பை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பேராசிரியர் கிரிஷ் குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை அடிப்படையாகக்கொண்டு நீதிமன்றம், கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கைகளை வெளியிடச் சொல்லியும், செல்போன் டவர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்காக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி வெளியிட்ட ஆய்வறிக்கையில், `செல்போன் மற்றும் செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதில் எந்தவிதமான விஞ்ஞானரீதியான ஆதாரமும் இல்லை. இது தொடர்பான செய்திகள் ஆதாரமற்றவை. மேலும், இது குறித்து உலக சுகாதார நிறுவனம் அமைத்த குழுவின் ஆய்வறிக்கையிலும் இந்தத் தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

செல்போன் டவர்

இந்த  அறிக்கை குறித்தும், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் எஸ்.ஜி.பால முருகனிடம் கேட்டோம்...

``பொதுவாக, செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் குறைந்த அளவு கதிர்வீச்சுக்கள் நம் உடலை பாதிப்பதில்லை. ஆனால், அதிக அளவு வோல்டேஜ் கொண்ட மின்சார வயர்களின்  (High level voltage power cable) மூலம் வெளிவரும் கதிர்வீச்சுகள் நம் உடலுக்குத் தீங்கு பால முருகன்விளைவிப்பவை. இதனால், மூளையில் கட்டி மற்றும் மூளையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளாலும் மூளையில் கட்டி ஏற்படலாம். ஆனால், இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. புற்றுநோய்கள் ஏற்படக்கூடும் என்பதெல்லாம் மிகவும் அரிதாக நிகழ்பவை. அது, ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.

நம்மைச் சுற்றி புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் அதிகம் உள்ளன. மரபணுவில் குறைபாடு இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூளையில் செல் இழப்பு ஏற்படும்போது, புற்றுநோய் கட்டிகள் ஏற்படும். அதேபோன்று, தொடர் செல் இழப்புகள் மூலமாகவும் புற்றுநோய்க் கட்டிகள் உண்டாகும். 

அதீத தலைவலி, பார்வைக் கோளாறு, கை - கால் நடுக்கம், வாந்தி, குமட்டல், வலிப்பு, தூக்கமின்மை போன்றவை மூளை புற்றுநோய்க்கான அறிகுறிகள். 

இது போன்ற செய்திகள் மக்கள் மத்தியில் ஓர் அச்சத்தை உண்டாக்கும். மேலும், செல்போன் டவர்களால்  புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’’ என்கிறார் பாலமுருகன்.

இன்றையச் சூழலில் நோய்க்கு பஞ்சமில்லை. நம் உடல்நலனைக் காப்பது மட்டுமே நம் கடமை. அதற்காக வதந்திகளை நம்பி அச்சப்படவும் தேவையில்லை!

- ச.மோகனப்பிரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!