புற்றுநோயை எதிர்க்கும் ஆப்பிள், ஆரஞ்சு, கத்திரிக்காய் தோல்!

ளம்பெண்களின் அழகு முதல் ஆரோக்கியம் வரை காக்கும் அருமருந்துகள் நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலிலும், ஆப்பிள் தோலிலும் இருக்கிறது என்கிற ஆரோக்கிய சங்கதி தெரிந்தால் அதை நாம் விட்டு விடுவோமா? பொதுவாகவே, பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் சத்துகள் நிறைந்திருக்கும் செய்தி தெரிந்திருந்தாலும்கூட சுகாதாரக்குறைவு, ரசாயனக் கலப்பு காரணமாக பெரும்பாலானவர்களால் அவை புறக்கணிக்கப்படுகின்றன. சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் அவற்றின் சதைப்பகுதியைவிட தோலில் அதிக சத்துகள் உள்ளன என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? தர்பூசணியின் சத்துகள் அதன் பட்டையில்தான் அதிகளவில் உள்ளது, ஆரஞ்சுப்பழத்தின் சத்துகள் அதன் தோலில்தான் அதிகம் உள்ளது. இப்படித் தவிர்க்கக்கூடாத காய்கறி மற்றும் பழத்தோல்கள் எவை? அவற்றில் உள்ள சத்துகள் என்னென்ன? பார்ப்போம்...

ஆப்பிள் 

தோல்
 

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தில் பாதி அதன் தோலில்தான் உள்ளது. இதன் சதைப்பகுதியைவிட நான்கு மடங்கு பொட்டாசியம் அதன் தோலில் உள்ளது. இது எலும்புக்கு மிகவும் நல்லது. இதன் தோலில் குவர்செடின் (Quercetin) என்ற நிறமி உள்ளது. இது சுவாசப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும். நுரையீரல் நன்றாக செயல்பட உதவும். மூளைத்திசு பாதிப்படையாமல் பாதுகாக்கும். ஆப்பிளின் தோலில் டிரிட்டர்பீனாய்டு (Triterpenoid) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. இதிலுள்ள அர்சோலிக் அமிலம் (Ursolic acid) உடல் பருமனைக் குறைத்துத் தேவையான உடல் வளர்ச்சியைத் தூண்டும். 

மாம்பழம்

மாம்பழத்தோல் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். மாம்பழத்தை தோல் நீக்கிச் சாப்பிடும்போது இந்தப் பயன் கிடைப்பதில்லை. மாம்பழத்தின் சதைப்பகுதியைவிட அதன் தோலில் கரோட்டினாய்டு, பாலிஃபினால்ஸ், ஒமேகா-3 , ஒமேகா-6 ஆகியவை அதிகளவில் உள்ளன. இதனைத் தோல் நீக்காமல் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். ஆப்பிளின் தோலில் உள்ள குவர்செடின் (Quercetin)  மாம்பழத்தோலிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளரி


வெள்ளரி

வெள்ளரித்தோலில் அதன் சதைப்பகுதியைவிட அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-கே ஆகியவை உள்ளன.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தோலில் அதன் சதையைவிட அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-6, வைட்டமின்-சி ஆகியவை உள்ளன. உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சமைப்பதால் 90 சதவிகிதம் அளவு உருளைக்கிழங்கிலுள்ள இரும்புச்சத்தை இழக்கிறோம். 50 சதவிகிதம் அளவு நார்ச்சத்தை இழக்கிறோம். 

தர்பூசணி

தர்பூசணியில் சிட்ருலின் (Citrulline) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. இது உடலால் அர்ஜினைன் (Arginine) அமினோ அமிலமாக மாற்றப்படுகிறது. அர்ஜினைன் இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் போன்றவை சிறப்பாக செயல்பட உதவும். தர்பூசணியின் பட்டையில் இந்தப் பலன்கள் அதிகமாக உள்ளன. ஆனால் தர்பூசணிப்பட்டையை அப்படியே சாப்பிடுவது கடினம் என்பதால் ஊறுகாய் மாதிரி செய்து சாப்பிடலாம். 

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சுப்பழத்தின் சதைப்பகுதியைவிட அதன் தோலில் அதிக அளவு வைட்டமின்-சி உள்ளது. வைட்டமின் பி-6, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவையும் தோலில் அதிக அளவு காணப்படுகிறது. இவை புற்றுநோய் மற்றும் கட்டி, வீக்கங்களுக்கு எதிராகப் போராடும் தன்மையைக் கொண்டுள்ளன. இதன் தோல் மிகவும் கசப்பாக இருக்கும் என்பதால் அப்படியே சாப்பிடமுடியாது. இதனைப் பொடியாக்கி சாலட்டின்மீது சிறிதளவு தூவி சாப்பிடலாம்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயின் தோலில் நாசுனின் (Nasunin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. மூளை மற்றும் நரம்பைப் பாதிக்கும் புற்றுநோய் பிரச்னைகளுக்கு எதிராக இது போராடும். இளம் வயதில் வயதான தோற்றம் ஏற்படுவதையும் இது தடுக்கும். எனவே கத்திரிக்காயின் தோலைத் தவிர்க்காமல் அதையும் சேர்த்து சாப்பிடுவது மிக மிக முக்கியமானதாகும். 

காய்கறிகள் மற்றும் பழங்களை நீரில் கழுவுவதன்மூலம் அவற்றை முழுமையாகச் சுத்தப்படுத்திவிட முடியும். சிறிது, கல் உப்பை போட்டு அரை மணி நேரம் ஊறவைத்தால், தோலில் உள்ள அழுக்கு, மருந்துகள் ஆகியவை நீங்கும். சுகாதாரக் காரணங்களுக்காக சத்துகள் நிறைந்த தோலை வெட்டி எறிந்துவிட்டு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவது சிறப்பானது அல்ல. முடிந்தவரை தோலைச் சாப்பிடுவோம், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பலன்களை அதிகமாகப் பெறுவோம். 

- அகில் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!