Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்ரிதா தேவி முதல் திருப்பூர் ஈஸ்வரி வரை... பெண்ணியப் போராளிகளின் உளவியல்!

`இகோ-ஃபெமினிஸம்’ (Ecofeminism) என்ற சூழியல் பெண்ணியவாதம் உலக நாடுகளில் இப்போது அதிகம் பேசப்பட்டுவரும் கோட்பாடு. ஆனால், இதன் அடிப்படைகள் எல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் வாழ்வியலில் எப்போதிருந்தோ கடைபிடிக்கப்பட்டு வந்த பண்புநிலைகள்தான். `உளவியல்ரீதியாக இயற்கையையும் பெண்ணையும் ஒன்றாகப் போற்ற வேண்டும்’ என்ற மனநிலையை உருவாக்கும் பொருட்டு இயற்கையின் அத்தனைச் சிறப்புகளுக்கும் பெண்களின் பெயர்களே வைத்துப் போற்றப்பட்டன. ஆனால், இதன் உளவியல் மாற மாற சூழ்நிலைச் சீர்கேடுகளும் இணையாக (Parellel loss) மாறிக்கொண்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

திருப்பூர் ஈஸ்வரி

 

இன்றைக்கு நடக்கும் அசம்பாவிதங்களும் புரட்சிகளும் மக்களாட்சி என்றில்லாமல், மன்னர் காலத்திலும்கூட வெவ்வேறுவிதமாக நிகழ்ந்துவந்திருக்கின்றன. காலங்காலமாக ஆடம்பரவாசிகள் இயற்கையைச் சூறையாடுவதும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையுடையவர்கள் அல்லது இயற்கையான சுழற்சியில் தங்கள் வாழ்க்கை முறையை வைத்துக்கொண்ட எளியவர்கள் அதற்காக மன்றாடுவதும்... என இப்படிப்பட்ட போராட்டங்கள் இன்று நேற்றாக நிகழவில்லை. அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பெண் முன்னெடுக்கும் போராட்டக்களமே வரலாற்றில் சூழல் சார்ந்து பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.

கி.பி.1730-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் சூழல் பாதுகாப்புக்கு ஆதாரமாக இயற்கைச்சூழலைக் காக்கும் பொருட்டு உருவான இயக்கம், `சிப்கோ இயக்கம்’ எனும் `சிப்கோ அந்தோலன்’ (Chipko andolan). இயற்கையைக் காக்கும் பொருட்டு முதன்முதலில் குரல்கொடுத்த நாடு இந்தியாதான் என்பதையும் தாண்டி, அந்தக் குரலையும் அதற்கான உயிர்த் தியாகத்தையும் செய்த முதல் சூழியல் பெண்ணியவாதியாக அம்ரிதா தேவி (Amrita Devi) என்ற இந்தியப் பெண்தான் இருந்திருக்கிறார்.

மன்னனின் அரண்மனை ஆடம்பரத்துக்காக மரங்களை வெட்ட முனைந்தபோது, மரங்களைத் தழுவி அவற்றை காப்பாற்றும் நூதனப் போராட்டத்தை `பிஷ்ணோய்’ (Bishnois) என்ற அந்த இன மக்கள் முன்னெடுத்தனர். மரங்களை வெட்டுவதற்கு முன்னர் தம்மை வீழ்த்தச் சொல்லிப் பெண்களும் குழந்தைகளும் மரங்களைக் கட்டிப்பிடித்துப் போராடினார்கள். வீரர்களும் மன்னனின் உத்தரவை மீற முடியாமல், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அம்ரிதா தேவியையும் அவரின் குழந்தைகளையும் முதலில் வெட்டிச் சாய்த்தார்கள். அதன் பின் ஏறத்தாழ 363 மரங்களை கட்டிப்பிடித்திருந்தவர்களையும், அந்த மரங்களையும் வெட்டிய நிலையில்தான் அந்த மன்னன் மனம் இளகி, அந்த கிராமத்தின் மரங்களை விட்டுவைத்ததாக இன்றும் வரலாறு கூறுகிறது.

மதுக்கடை அடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த திருப்பூர் ஈஸ்வரியின் மீது காவல் துறையின் தாக்குதல் வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பேசினார் நண்பர் ஒருவர். ``பெண்களை அடிக்கிறாங்க... அதுவும் ஒரு போலீஸ்! இது குறித்து என்ன சொல்றீங்க?’’ என்று கேட்டார்.

போலீஸ் தடியடி

 

நான் என்ன சொல்லியிருக்க முடியும்? அம்ரிதா தேவிபோல ஆயிரமாயிரம் தேவிகள் எங்களின் இன்றையத் தேவையாக இருக்கிறார்கள். `அந்த அளவுக்கு இயற்கை சீரழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மனித உயிர்களுக்கு நேரிடையாக விலை பேசும் மதுக்கடைகளை அரசே முன்னின்று நடத்தும்போது போராடுவதையும், மாண்டு போவதையும் தவிர எங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள இயலாது...’ என்பதுதானே சூழலை விரும்பும் ஒவ்வொரு பெண்ணியப் போராளியின் மனநிலையாக இன்று இருக்க முடியும்?

ஈஸ்வரியை, `பெண்’ என அடையாளப்படுத்தி, இதன் வழி மதுக்கடைக்கு எதிரான போரட்டத்துக்கு வலுசேர்க்க முயற்சிக்காதீர்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் உணர்வு தூண்டலுக்காக `மெல்லியவர்கள்’ எனச் சொல்லப்படும் `பெண்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் தாக்கப்பட்டால்தான் இந்தச் சமுதாயம் அதைப் பிரதிபலிக்கும்’ என்ற மனவோட்டம் என்பது மிகவும் ஆபத்தானது.

ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு பிரச்னையின்போதும் பெண்கள் மீதான கழிவிரக்கத்தை ஏற்படுத்துவது... இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும், எழுச்சி மிகுந்த செயல்களும் நிகழ்த்தப்பட்டால்தான் அந்த நிகழ்வு வலுப்பெறும் என்பது போன்ற கட்டாயத்தை ஏற்படுத்துவது என்பதை தயவு செய்து திணிக்கச் செய்யாதீர்கள். `தட்டிக்கேட்டால் தாக்கப்படலாம்’ எனத் தெரிந்துமே போரிடும் மனநிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுவாள். அது சூழலைப் போற்றும் பெண்ணின் மனநிலையைப் பொறுத்தது.

பெண்களை வலிமையற்றவர்களாகச் சித்தரிக்கும் உலகத்துக்கு முன்னர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், அங்கு வாழும் மக்களை அடிமைசெய்யும் மது வர்த்தகத்தை எதிர்த்தும் முதன்முதலில் ஈஸ்வரி வாங்கிய அடிக்கு ஒரு பெரும்பான்மைச் சமுதாயமே இன்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகப் பரிதவிக்கும் நிலை இதற்கு வலு சேர்க்கிறதே தவிர, விடை காண வழி செய்வதில் ஏன் தாமதிக்கிறது?

திருப்பூரின் அந்தப் பகுதி மிகவும் ஆபத்தானது. மாணவர்கள் நலன் முக்கியம். `ஆண்கள் குடித்துக் குடித்து வாழ்வை இழப்பது அநியாயம்’ எனத் தவறுகளுக்கு நீதியைத் தேடிக் குரல் கொடுத்த ஈஸ்வரியோ, அவரைச் சார்ந்தவர்களோ இந்த அச்சுறுத்தலைக் கடக்க இந்தச் சமுதாயம் துணைபுரிய வேண்டும். `பிரச்னை என்றால் உடன் நிற்போம்’ என்ற சூழியல்வாதிகளின் பலம் இதன் மூலம் சமூகத்துக்கு உணர்த்தப்பட வேண்டும். இன்றைய ஈஸ்வரியின் வலியை இந்தச் சமூகம் உள்வாங்கட்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கட்டும்.

போராட்டமும் வலியும் அம்ரிதா தேவி போன்ற ஈஸ்வரிகளுக்கு, `மெல்லினம்’ என்ற பச்சாதாபம்வேண்டி உருவானது அல்ல; சூழலை நோக்கி, மனிதர்களின் நலன் நோக்கி எழுப்பப்பட்ட உணர்வலை அது என்கிற உண்மையாக மாற்றப்பட வேண்டும். இதுதான் அந்த நிகழ்வின் ஒட்டுமொத்த எதிரொலியாகவும் இருந்திருக்க வேண்டும்.

உடல்நிலை குன்றிய நிலை என்பது மட்டும் அல்ல, எந்த நிலையிலும் சக உயிர்களை வதைப்பது கண்டிக்கத்தக்கது. அந்த வகையில் இந்த நிகழ்வை, ஈஸ்வரியைக் கை ஓங்கிய காவல் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற செயலாகவே பார்க்க முடிகிறது. அங்கு மண்டை பிளந்து, ரத்தம் சொரிந்த பல ஆண்களின் துயரங்களும் இதே வெளிச்சத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியவையே! அதன் வழி மதுஒழிப்புக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் இலக்கு.

பெண்ணியம்

இந்தப் போராட்டம் ஆண்-பெண் பேதமற்ற, சூழலைச் சார்ந்த போராட்டம், தேவைப்பட்டால், இன்னமும் ஆயிரம் ஈஸ்வரிகள் இதற்காக முன்னணியில் நிற்பார்கள் என்பதைச் சூழலைச் சீரழிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளும் வகையில், பிரச்னைகளை அதன் கோணத்திலேயே முன்வைப்பதில்தான் ஈஸ்வரி போன்ற பெண்கள் களமிறங்குவதற்கான கெளரவமாக இருக்க வேண்டும்.

பெண்மையும் இயற்கையும் இங்கு பிரிக்க இயலாத ஒன்று என்பதை இதுபோன்ற நிகழ்வின் வெற்றிகள் மட்டுமே உணர்த்த முடியும். அதை உணர்ந்துகொள்ளும் மனமாற்றம்தான் இன்றைய மனநிலையின் அடிப்படைத் தேவையே தவிர, பிரித்துக் காட்டும் இரக்கத்தில் வரும் `உச்... உச்...’ ஒலிகள் அல்ல!

- மதுமிதா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement