தக்காளி, வெஜிடபுள், ஆட்டுக்கால்... சூப் மிக நல்லது! #HealthTips | Health benefits of soup

வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (17/04/2017)

கடைசி தொடர்பு:08:57 (17/04/2017)

தக்காளி, வெஜிடபுள், ஆட்டுக்கால்... சூப் மிக நல்லது! #HealthTips

‘அண்ணாச்சி ஒரு டொமெட்டோ சூப்!’ இப்படிக் கேட்கும் குரலை அநேகமாக தமிழ்நாட்டின் அத்தனை சிறுநகரங்களிலும் நாம் கேட்க முடியும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி... உள்ளிட்ட பெருநகரங்களிலோ கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தெருவோர வியாபாரம். இரண்டு தெருக்களுக்கு ஒரு சூப் கடை நிச்சயம் இருக்கும். ஒரு மர ஸ்டேண்ட்; கேஸ் ஸ்டவ்; மேலே மூடிவைக்கப்பட்ட மூன்று சில்வர் பானைகள்; கரண்டிகள், 10, 15 கிண்ணங்கள் அல்லது கப்கள், எடுத்துக் குடிக்கப் பொருத்தமான பெரிய சைஸ் ஸ்பூன்கள், மேலும் சில பாத்திரங்கள்... இவை போதும் ஒரு சிறு கடையை ஆரம்பிக்க! டீ, காபி, குளிர்பானங்களைவிட சூப் சிறந்தது; உடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தாதது; ஆரோக்கியத்துக்கு உதவுவது என்கிற எண்ணம் மக்களுக்குப் பரவலாக இருக்கிறது. உண்மை நிலவரம் என்ன? 

சூப்

அது தெருவோரக் கடையோ, நட்சத்திர உணவு விடுதியோ எங்கு கிடைத்தாலும், சூப் ஆரோக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவற்றின் தரம் இவை மட்டும்தான் பிரச்னை. இன்றைய தலைமுறையின் கூகுள் தேடல் விரிவாக்கம் செய்த தொழில்களில் நிச்சயம் சூப் கடைகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ஆட்டுக்கால் சூப் தொடங்கி, மூலிகைகள், காய்கறிகள், மஷ்ரூம், கீரை, தக்காளி... என மலைக்கவைக்கும் வகைகள். தெருவோரக் கடைகள் மட்டுமில்லாமல், இதற்கான பிரத்யேகக் கடைகளும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கின்றன. மாலை 4 மணிக்குத் தொடங்கும் வியாபாரம் அதிகபட்சம் இரவு 9 மணி வரைக்கும் நடக்கும். குறைந்த முதலீடு, நிறைவான லாபம் என்கிற அடிப்படையிலும் இந்தக் கடைகள் பெருகிக்கொண்டே போகின்றன. உலகம் முழுக்க விதவிதமான ஃப்ளேவர்களில் பட்டையைக் கிளப்பி, தன் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது இந்த அட்டகாச திரவம்!

சூப்பைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்வியைக் கேட்டால், `கி.மு 20,000க்கு முன்னாலேயே இது இருந்தது’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள் உணவு வரலாற்று ஆசிரியர்கள். களிமண் பாத்திரங்கள் இருந்த காலத்திலேயே இது இருந்திருக்கிறது. எப்படி? ஒரு கைப்பிடி தானியம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் மட்டும் அதைச் சமைத்து சாப்பிடலாம். ஆனால், அதனுடன் சில பொருட்களைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு வேகவைத்து ரசம்போல ஆக்கினால், இன்னும் அதிகமான பேர் இதைச் சாப்பிட்டுப் பசியாறலாமே!  இதுதான் சூப்புக்கு அடிப்படை. நம் முன்னோர் இப்படியெல்லாம் கூட்டாகப் பசியாறியிருக்கிறார்கள். இந்த `கஞ்சி’ பாரம்பர்யம்தான் இன்றைக்கு, `சூப் டயட்’ வரை உருவாகி முன்னேற வழிகாட்டியிருக்கிறது. 

கேரட்-காலிஃப்ளவர்சூப்

வெதுவெதுப்பாக அல்லது இளஞ்சூட்டில் பரிமாறப்படுகிறது இந்த திரவ வகை உணவு. இறைச்சி, காய்கறிகள்... என சைவம், அசைவம் இரண்டு வகையிலும் தயாரிக்கலாம். சைவத்தில் காய்கறிகளைக் கழுவிய தண்ணீரை (Stock) அப்படியே வைத்திருந்து, அதை சூப் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள். மேற்கத்திய நாடுகளில் இதை `க்ளியர் சூப்’, `திக் சூப்’ என இரண்டு வகையாகப் பிரித்துவைத்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸில் பௌவில்லோன் (Bouillon), கான்சோம் (Consomme) என வகைப்படுத்துகிறார்கள். அதாவது, க்ரீம், முட்டை, வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாக்குவது அல்லது நீர்க்கக் கொடுப்பது எனப் பிரிக்கிறார்கள். 

இன்றைக்குப் புழக்கத்தில் இருப்பது `Soup' என்கிற ஆங்கில வார்த்தை. இது ஃப்ரெஞ்சின் `Soupe' என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம்; `Soupen' என்கிற ஆங்கில வார்த்தைக்கு, `சப்பிச் சாப்பிடுதல்’ `To sip' என்று பொருள்.. எனவே, இதிலிருந்து வந்திருக்கலாம்; அல்லது லத்தீன் வார்த்தையான `Suppa' (பிரெட் ஊறவைத்த சாறு)... இதிலிருந்து வந்திருக்கலாம்; அதெபோல ஜெர்மன் மொழியில் `Sop' என்றால், குழம்பு எனப் பொருள் இதன் காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். மெக்ஸிகன், வியட்நாமீஸ், பிரேசிலியன், கொரியன், இங்கிலாந்து, சிசிலியன், சிங்கப்பூர், ஜப்பானீஸ்... என சூப்களில் பல வகைகள்! இன்னும் ரஷ்யா, இத்தாலி, ஸ்பானிஷ்... என உலகின் அறியப்பட்ட பெரிய நாடுகள் தொடங்கி, மூலை முடுக்குகளில் எல்லாம் மூக்கை நுழைத்து சொக்கவைத்துக்கொண்டிருக்கிறது அதிருசி திரவ உணவு. 

வெஜிடபுள் சூப்

தெருவோரக் கடைகளோ, நட்சத்திர விடுதியோ சூப்பை அருந்துவது ஆரோக்கியம்தானா? டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம்... “இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன்னர் சூப் பரிமாறப்படுவது வழக்கமாகிவிட்டது. சைவம், அசைவம் என இரு பிரிவிலும் இது இப்போது கிடைக்கிறது. கீரை, தக்காளி, மஷ்ரூம், வெஜிடபுள், சிக்கன், ஆட்டுக்கால்... என நீள்கிறது சூப்களின் வகைகள். உதாரணமாக, வெஜிடபுள் சூப்பில் நம் உடலுக்குத் தேவையான சில தாதுக்களும் வைட்டமின்களும் கிடைக்கும். அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீனும் நிறைந்திருக்கும். 

ஒரு கப் வெஜிடபுள் சூப்பில் 50-ல் இருந்து 100 கலோரிகள் இருக்கும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள் காய்கறிகளில் இருந்து கிடைப்பவை. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்துக்கு உதவும். நன்கு காய்ச்சப்ப்ட்ட சூப்பில் கார்போஹைட்ரேட் 15 கிராம், நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 5 கிராம் இருக்கும். கொலஸ்ட்ரால் குறைவாகவே இருக்கும். சூப்பில் நாம் சேர்க்கும் காய்கறிகளுக்கு ஏற்ப வைட்டமின் சத்துகள் கிடைக்கும். வைட்டமின் இ, தயாமின், நியாசின், வைட்டமின் பி 6, பொட்டாசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருக்கும். இது ஒரு லோ கிளைசமிக் தன்மைகொண்ட திரவ உணவு. ஒரு கப் குடித்தால், பசியைத் தூண்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. எளிய செய்முறை. உடல் எடை குறைய உதவும். அது மட்டுமல்ல... புற்றுநோய் வராமல் காக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; உடல்பருமன் வராமல் பார்த்துக்கொள்ளும்; இதயநோயில் இருந்து காக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகள்கூட குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. டயட்டீஷியன் சௌமியா

சிக்கன், ஆட்டுக்கால் போன்றவற்றில் செய்த சூப்களை கடைகளில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அவை ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை பழைய இறைச்சி, எலும்பில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நம் உடலுக்குக் கெடுதி விளைவிக்கலாம். இன்றைக்கு பல சூப்களை ரெடிமேடு மிக்ஸாகத் தயாரிக்கிறார்கள். ரோட்டோரக் கடைகளில் கிடைப்பவற்றில் பெரும்பாலானவை இந்த ரகங்களே. நம் கண் முன்னால் சில காய்கறி நகரங்களைச் சேர்த்துத் தயாரிப்பார்கள் அவ்வளவுதான். எனவே, இவை நமக்கு சக்தியைத் தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது சூப் நமக்குப் பலவழிகளில் நலம் தருவது. கிராமங்களில் உடல் பலவீனமானவர்களுக்கு, எலும்பில் அடிபட்டவர்களுக்கு நாட்டுக்கோழியில் ரசம் வைத்துக்கொடுப்பார்கள். ஆட்டுக்கால் சூப்பைச் சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்; மூட்டுவலி தீரும். எனவே, சூப் நமக்கு பல நன்மைகளைத் தருவது. ஆரோக்கியமான முறையில் தயாரித்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் சௌமியா. 

கற்றுக்கொள்வதும் தயாரிப்பதும் எளிது. எனவே, நம்மால் வீட்டிலேயேகூட சூப்பைச் செய்ய முடியும். ஆரோக்கியதுக்கு உத்தரவாதம் தரும் சூப்பைக் கொண்டாடுவோம்! 

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close