Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நமக்கு உளவியல் பார்வை அவசியம்! கற்றுத்தந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ரு சமூகத்துக்கான ஒட்டுமொத்த மாற்றங்களைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு தனிமனிதனின் அதியகமும் (Superego) முக்கியப் பங்கு வகிக்கிறது. `ஒவ்வொரு தனிமனிதனின் சமூகம் குறித்த விழிப்புஉணர்வு என்பது புறக்காரணிகளால் கட்டமைக்கப்படும் அவனது சூப்பர்ஈகோவின் வெளிப்பாட்டால் அமைகிறது’ என்பார்கள். சமூகவியலை உளவியல் பார்வையோடு பார்த்தால்தான், சமூகம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்கள் எப்படி தனிமனிதனை அதற்கு முனைய வைத்தன என்கிற மர்மம் விளங்க ஆரம்பிக்கும்.

இதன்படி சமூகத்தில் நடக்கிற ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையில்தான் நான் இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், இந்த விஷயத்தில் பல கோணங்களில் விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

மக்கள் உளவியல்

அப்படியான ஒரு நிகழ்வுதான் தேர்தல் ஆணையத்தால் தள்ளிப்போடப்படாமல், ரத்துசெய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இது மனிதர்களிடையே எப்படியான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கவேண்டிய விஷயம்... ஆனால் எப்படியான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்கள் வேறு திசையில் பயணிக்கின்றன.

``டேய்... கையில காசே இல்லடா. ஆர்.கே.நகர்ல வீடு கிடைக்குமா?’’ எனத் துன்பம் வரும்போது, நம்மை நாமே நகாசு செய்துகொண்டு, அன்றாடங்களை அதன் போக்கில் வாழ்ந்திட நமக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. கிட்டத்தட்ட அது நன்றாகவே நமக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

``அமெரிக்க மாப்பிள்ளைதான் வேணும்னு அடம்பிடிச்சவர், `மாப்பிள்ளை ஆர்.கே.நகர்னா டபுள் ஓ.கே’னு சொல்றாராம்’’ போன்ற துணுக்குகளைப் பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன.

எனக்குத் தெரிந்து, ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த வருடத்தின் இறுதியில், வட மாநிலங்களில், `தமிழன்’ என்றால் மோசமான பார்வையும், கண்ணியமற்றப் போக்கும், சுற்றுலா சென்றவர்களால்கூட உணரப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்றளவும் பெரிதாக அவை மாறவில்லை. `மதராஸி’ என இலக்கணம் வகுக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை,

இதுபோன்று பல காலமாக தன் மீது சித்தரிக்கப்பட்டு வந்த கற்பிதங்களை நீக்க, தமிழனுக்கு ஜல்லிக்கட்டுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய, `தைப்புரட்சி’ காரணமானது. தன் பாரம்பர்யத்தின் வலிமையைக் காட்டவும், அவன் உரிமையை அவன் நிலைநாட்டவும் உலகுக்கு அவன் அடையாளமாக்கப்பட்டான். மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் தமிழனின் போராட்டத்தை முன்வைத்து தங்களது மண் சார்ந்த போராட்டங்களை ஆரம்பித்தன.

`எந்த அரசியல் தலைவரும் வேண்டாம்... நடிகர்களும் வேண்டாம்... எங்கள் உரிமைக்கு நாங்களே போராடிக்கொள்வோம்!’ என அரசியல், மத, இனச் சாயங்களை ஏற்றுக்கொள்ளாத அன்றைய நிலையும், இன்று ஓட்டுக்காக முறைகேடு நடப்பதாகச் சொல்லி தள்ளிவைக்கப்பட்ட தேர்தலும்...(!) உளவியல்ரீதியில் மக்களின் மனநிலையில் முன்னுக்குப் பின்னான முரண் எப்படி உருவானது?

தைப்புரட்சி

கூவத்தூர் உற்சவ நிகழ்வின்போது சில எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் நல்ல அளவிலேயே(!?) மரியாதைகளை வழங்கியதை, நாம் பல மீடியாக்களில் பார்த்திருப்போம். அதன் தாக்கம் இன்னமும்கூட பல இடங்களில் அப்படியே இருக்கிறது.

இப்படியிருந்த மக்கள்தான் தற்போது தங்களது சுயமரியாதையை இழந்ததாகக் காட்டப்படுவதிலும், கிண்டலடித்துக்கொள்வதிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். இதனால், யாருக்கு என்ன லாபம் என்று பார்க்கவேண்டியது அவசியம். ஆனால், இந்த நுண்ணரசியல் தாண்டி இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. எனவே, அது குறித்தும் பேசப்படவேண்டும் அல்லது அதற்காக வெட்கப்பட வேண்டும்.

பல காலமாகத் தேர்தலும் அதன் பின்னணியும் அவற்றில் இடம்பிடிக்கும் இப்படிப்பட்ட முறைகேடுகள், இலைமறை காயாகப் பேசப்பட்டு வந்தாலும், ஜல்லிக்கட்டுப் புரட்சியில் உலகையே திரும்பிப் பார்க்கச்செய்த தமிழனின் நேர்மை இன்று, ஓட்டுரிமையை விற்கத் தயாராக இருப்பதையும், அதனை நோக்கிய பரிவர்த்தனைகளையும் சுட்டிக்காட்டி கேலிக்கூத்தாகி இருக்கிறது. இது பொதுத்தேர்தல் அல்ல என்றாலும், இது அரசியல் முக்கியத்துவம் பெற்றவிதமும், வெற்றிக்காக கடைப்பிடிக்கப்பட்ட வழிகளும் இந்தச் செயல்பாடுகளை அப்படி ஒரு சித்தரிப்பாக வெளிக்காட்டிவிட்டது என்பதே உண்மை.

ஆக, மீண்டும் உலக அரங்கில் தமிழக மக்கள் கேலிக்குள்ளாகப்படும் பொருளாகவே பார்க்கப்படுவதற்கு இந்தக் காரணம் போதுமானதாக இருக்கிறது.

இதை நாம் எப்படி பிரதிபலிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் வெளிப்பாடும் உள்ளடங்கியுள்ளது. ஓட்டுரிமை விற்கப்படுவதை படு பயங்கரமாகக் கிண்டலடித்தும், அதை ரசித்தும் வேறு வழியின்றி நம் மீதான தவறாக நாமே இதை ஒப்புக்கொள்ளும் மனநிலை, `நாம் உண்மையில் அரசியல் எழுச்சியும் மாற்றம் குறித்த பொதுபுத்தியும் பெற்றுள்ளோமா?’ என்று கேட்கவைக்கிறது.

சமூகத்தில் நம்மை நோக்கி எது நிகழ்ந்தாலும், நம் சமுதாயத்தின் மீதான உலகத்தின் பார்வையாக அது உள்வாங்கப்படாமல், தனிமனிதக் கிண்டல்களாகவும் நகைச்சுவையாகவும் மாற்றம் பெறுவது என்பது ஆரோக்கியமாக உருவாகவேண்டிய ஒரு சமுதாயத்தை தனித்தனியாக பிரித்தாளும் மனநிலை மாறுபாடாகக் கடந்துசெல்கிறது.

சமூக அவலங்கள் அனைத்தும் `நான்’, `நீ’ என்பனபோல வெறும் நகைப்புக்காக அல்லாமல் ’நாம்’ எனும் சமூகத்தைச் சுட்டிக்காட்டும், அவமானத்தை உணர்த்தும் மனநிலை ஒன்றுதான் ஓட்டுக்கான நம் மனநிலையை உரிமைக்காக மட்டுமே கைநீட்டும் சுயமரியாதையை உருவாக்கும்.

ஓட்டுக்கு பணம்

`அதற்கான கேள்வியை எழுப்பத் தயாராக இருக்கிறோமா?’ என்று நம்மைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதும், `ஐபிஎல்-லில் சென்னை அணி இல்லை’ என்று வருத்தப்பட்டு, சமூக ஊடகத்தில் கோடைகால பிரச்னையாகக் கையிலெடுப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

`கிருஷ்ணா நதி வரவில்லை என்றால் நமக்கென்ன கவலை?’ என்று நாம் யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால், நமது தலையாயப் பிரச்னையாக எது இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள இயலாமல் தடுமாறும் வகையில் நம்மை உளவியல்ரீதியாக பெரு வணிக நிறுவனங்களால் நாம் கஸ்டமைஸ் (Customize) செய்யப்பட்டிருப்பதையும் இது காட்டுகிறது. இவற்றை உணர்ந்துகொண்டால் நாம் நமது சோஷியல் ஈகோவைச் சரியானத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, தேவையான உணர்வுகளை தேவையான தளத்தில் மட்டும் முன்னிறுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

- மதுமிதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement