Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரசவ வலி குறைக்கும், இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும்... வெந்தயம்!

மிளகு, சீரகம், கடுகு... இவை நம் வீட்டு அஞ்சறைப்பெட்டிகளில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இவை மட்டுமா... மஞ்சள், சோம்பு, வெந்தயம் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். சமையலுக்கு உதவும் இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் மருத்துவக்குணங்கள் நிறைந்தவை. ஆண்மைக்குறைவு போக்கும்... சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்... இன்சுலினை சுரக்கச் செய்வதோடு சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது என எண்ணற்ற நலன்களைக்கொண்ட வெந்தயம் பற்றி இங்கே பார்ப்போம். வைட்டமின் சி, புரதம், நியாசின், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், அலோபதி மாத்திரைகள் தயாரிக்கவும் வெந்தயத்தின் தேவை அவசியமாக உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெந்த + அயம் = வெந்தயம். அயம் என்றால் இரும்புச்சத்து. எளிதாக ஜீரணமாகக்கூடிய இரும்புச்சத்து வெந்தயத்தில் உள்ளது.

வெந்தயம்

* வெந்தயத்தில் உள்ள சபோனின் (Saponin - தாவர உணவுகளில் இருக்கும் ஒரு வகையான ரசாயனக் கலவை) நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நம் உடல் கிரகிப்பதைத் தடுக்கிறது. அத்துடன் இயற்கையாகவே உடல் உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைத்துவிடும்.

* கர்ப்பக் காலங்களில் இதைச் சாப்பிடுவதால் கருப்பைச் சுருக்கங்கள் தூண்டப்படுகிறது. இதனால் பிரசவவலி குறைந்து, சுகப்பிரசவம் உண்டாக வாய்ப்பு உள்ளது.

* வெந்தயத்தில் சபோனின் மற்றும் முசிலேஜ் (Mucilage) எனப்படும் கோந்து உள்ளது. இவை உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களுடன் கலந்து மலம் வழியாக வெளியேறுவதால் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்துவிடும். 

* மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் உடல்ரீதியான பிரச்னைகளைத் தடுக்க ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற சிகிச்சைக்கு அவசியமே ஏற்படாது.

* தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க, பிரசவத்துக்குப் பிறகு வெந்தயத்தால் தயாரிக்கப்படும் கஷாயம் குடிக்கலாம். இது தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையின் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

* டெஸ்டோஸ்டீரோன் எனப்படும் ஹார்மோன்களின் அளவைப் பராமரிக்க உதவுவதோடு, ஆண்மைக்குறைக்கான சிறந்தத் தீர்வையும் அளிக்கிறது. இது வெந்தயத்தின் முக்கியமான பலன்களில் ஒன்றாகும். இதில் உள்ள கோந்து நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், இரைப்பை அழற்சி, வயிற்றுப்புண் போன்ற செரிமானப் பிரச்னைகளை சீராக்குவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும்.

* ஒரு கப் வெந்நீரில், கால் டீஸ்பூன் வெந்தயப் பொடி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடிக்க தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும். காய்ச்சல் இருக்கும்போது இதைக் குடிப்பதால் உடலின் வெப்ப நிலை குறையும்.

எலுமிச்சைச் சாறு

* வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் (Lecithin) எனப்படும் ஒரு வகையான கொழுப்புப் பொருட்கள், வறண்ட கூந்தலை சரிசெய்கிறது. தலையில் இருக்கும் பொடுகுகளை நீக்கி, கூந்தலைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படக்கூடியது.

* கிருமிநாசினிகள் மற்றும் அழற்சிக்கு எதிரான பண்புகள் இதில் நிறைந்துள்ளன. இதனால் சருமத்தின் மேல் தோலின் அடியில் உள்ள நச்சுகளை அகற்றி சருமத்தின் வெளிப்புறத்தை அழகாகவும், பளபளப்பாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. எக்ஸிமா, தீக்காயங்கள், சீழ்பிடித்த கட்டி, கீல்வாதம், தோல் வீக்கம், வடுக்கள், கரும் புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்களை நீக்க பழங்காலத்தில் வெந்தயத்தைத்தான் நம் முன்னோர் பரிந்துரைத்தனர்.

* வெந்தயத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இதய நோய் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது.

* பெண்கள் பூப்பெய்தும் காலத்திலும், பிரசவத்துக்கு முன்பும் பின்பும், இரும்புச்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. அதுபோன்ற காலங்களில் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் வெறும் வயிற்றில் சாப்பிட உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

பிரசவம்

* வெந்தயத்தில் சர்க்கரை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, டைப்-1 சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. அத்துடன் இன்சுலினின் உணர்திறனை அதிகரித்துச் செய்து  டைப்-2 சர்க்கரை நோயைக் குணப்படுத்தும். மொத்தத்தில் வெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் பாதுகாக்கக்கூடியது.

கவனம்:
உடலின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதால் கர்ப்பக் காலங்களில் பெண்கள் மருத்துவரின் பரிந்துரைப்படியே வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும். வெந்தயத்தை அதிக அளவில் சாப்பிட்டால் ஏப்பம், வாய்வு, வயிற்றுப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு தோல் அரிப்பும் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே வெந்தயம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். மேலும், வெந்தயப் பேஸ்ட்டை 15 நிமிடத்துக்கு மேல் தலையில் ஊற வைக்கக்கூடாது. மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இரண்டு மணி நேரத்துக்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ தான் வெந்தயம் சாப்பிட வேண்டும். எனவே, நோய்களை நீக்கி வளமுடன் வாழ, அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் சற்று கவனம் செலுத்துவதே நல்லது. 

- கி.சிந்தூரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement