கோடைக்கு இதம், உடலுக்கு நலம்... நீர்ச்சத்து மிகுந்த 10 காய், கனிகள்! | Hydrating foods to beat the summer heat

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (18/04/2017)

கடைசி தொடர்பு:16:57 (18/04/2017)

கோடைக்கு இதம், உடலுக்கு நலம்... நீர்ச்சத்து மிகுந்த 10 காய், கனிகள்!

`நீரே! உல‌கில் முக்கால் பாக‌ம் நீதான்!
வாய்க்கால், குளம், குட்டை
வ‌ற்றாத‌ நதி, கடல் என்று
உன‌க்குப் ப‌ல‌ முக‌ங்க‌ள்...
' - தண்ணீர் பற்றிய கவிதை இது. ‘ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?’ குறைந்தது 3 லிட்டர் குடிக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நம் உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, மலச்சிக்கல், தலைவலி, அதீத தாகம், தசைப்பிடிப்பு, நாவறட்சி, சிறுநீர்க்கோளாறுகள், குறைந்த ரத்த அழுத்தம் உண்டாக வாய்ப்பு உள்ளது. உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தண்ணீரின் தேவை அவசியம். தண்ணீருடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வதால், கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

கோடை

வெள்ளரி:

வெள்ளரியில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர பொட்டாசியம், தாமிரம் (Copper), வைட்டமின் - சி,கே,பி போன்ற சத்துகளும் உள்ளன. கோடை வெயில் வறுத்தெடுக்கும் இந்த சூழலில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் வெள்ளரி சாப்பிடுவதன்மூலம் உடல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி சாப்பிடும்போது அதன் தோல்களை நீக்கிச் சாப்பிடுவது பாதுகாப்பானதாகும்.

தக்காளி :

தக்காளியில் 94 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. பீட்டா கரோட்டின், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. தக்காளியைப் பச்சையாக வெறுமனே சாப்பிடலாம். ஜூஸ் செய்தோ, சூப் செய்தோ சாப்பிடலாம்.

தர்பூசணி:

இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இது அல்லாமல் வைட்டமின் ஏ, சி, டி, பி -6, பி 12 மற்றும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் உள்ளன. பல்வேறு சத்துகள் நிறைந்த தர்பூசணி விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்தது. ஏனெனில் இதிலுள்ள உப்புகள், கனிமங்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் தண்ணீரைவிட அதிக பலன் தரக்கூடியவை.

முட்டைகோஸ்:

முட்டைகோஸில் 92  சதவிகிதம் நீர்ச் சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி, கே, பி மற்றும் ஃபோலேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துகளும் நிறைந்துள்ளன. பச்சை முட்டைகோஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதை சூப்பாகவோ சாலட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

குடமிளகாய் :

குடமிளகாய்

குடமிளகாய் 92 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்தது. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துகளும் இதில் உள்ளன. சிவப்பு, மஞ்சள், பச்சை என இம்மூன்று நிறத்திலும் நீர்ச்சத்தின் அளவு சமமாகவே உள்ளது. குடமிளகாய் வயிற்றுப்புண், மலச்சிக்கல், மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

காலிஃப்ளவர்:

காலிஃப்ளவரில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, பி, இ, கே மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. இவைதவிர புற்று நோய், உடல் வலி, மூட்டு வலி, செரிமானக் கோளாறுகள் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது.

புரோக்கோலி:

புரோக்கோலி

91 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த புரோக்கோலியில், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் ஏ, சி, கே, பி6 மற்றும் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகளும் உள்ளன. புரோக்கோலி ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொழுப்புகளைக் குறைக்கக்கூடியது. மேலும், இது புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.

ஆரஞ்சு:

ஆரஞ்சுப்பழத்தில் 87 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன. உடனடி ஆற்றலைத் தரும் ஆரஞ்சுப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியது. இதனுடன் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள சத்துகளை உடனடியாக கிரகித்துக் கொள்ளும்.

- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்