வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (24/04/2017)

கடைசி தொடர்பு:08:39 (24/04/2017)

உடல்நலன் காக்கும் மருத்துவகுணங்கள் அடங்கிய பாப்கார்ன்!

திரையரங்கம்... அருகில் அமர்ந்திருப்பவரின் முகம் தெரியாத இருள்... திகில் படம். அந்தக் கணத்தில் நமக்கு உற்ற துணையாக பாப்கார்ன்! முக்கியமான காட்சிகள் கடந்த பிறகுதான், கையில் வைத்திருக்கும் கவரில் இருக்கும் பாப்கார்ன் முழுவதும் தீர்ந்துபோனது தெரியவரும். இந்த அட்டகாசமான நொறுக்குத்தீனியை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை சினிமா தியேட்டர்களையே சாரும்.  சுவாரஸ்யமாகப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அழுது, அடம்பிடிக்கும் குழந்தையைக்கூட இதைக் கொடுத்து அமைதிப்படுத்திவிடலாம். இன்றைக்கு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தொடங்கி, பொரிகடலைக்கடை வரை எங்கும் கிடைக்கிறது பாப்கார்ன்.

பாப்கார்ன்

பாப்கார்னை, `மக்காச்சோளப் பொரி’ என்று தமிழில் சொல்லலாம். கிட்டத்தட்ட நம்மூரில் பொரி செய்வதுபோலத்தான் இதன் செய்முறையும். கேழ்வரகு, சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்கள் ஈரப்பதம்கொண்டவை. மக்காச்சோளத்தை சூடுபடுத்தும்போது, அது வெடித்து (Popping) மொறு மொறுவென்ற பதத்துக்கு வந்து பாப்கார்ன் ஆகிறது. பாப்கார்னைத் தயாரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மைக்ரோவேவ் அவனில்தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. வீடுகளில் நாமே தயாரிக்க மார்கெட்களில் சின்னச் சின்ன சாதனங்களும் கிடைக்கின்றன. திருவிழாக்கள், சினிமா தியேட்டர்களில் விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவது பெரிய இயந்திரம். 

பாப்கார்னை நாம் இன்றைக்கும் ஆச்சர்யத்தோடு புதுசாகப் பார்த்துக்கொண்டிருக்க, `இது கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன’ என ஒரு போடு போடுகிறார்கள் தொல்லியலாளர்கள். மெக்ஸிகோவில் கி.மு. 3600-க்கு முந்தைய காலத்தில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னின் மிச்சம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலிருந்தவர்களிடம் மெஷின் இல்லையென்றாலும், மக்காச்சோளத்தைப் பொரிக்கத் தெரிந்திருக்கிறது. 

மொறுமொறு-பாப்கார்ன்

19-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் பாப்கார்ன் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்தவர் சார்லஸ் க்ரீட்டர்ஸ் (Charles Cretors). ஒரு பேக்கரி வைத்திருந்தார். அவர் வேர்க்கடலை வைக்கும் இயந்திரம் ஒன்றை வைத்திருந்தார். ஃப்ரெஷ்ஷாக வறுத்த வேர்க்கடலை வேண்டும் என்கிறவர்களுக்கு, சுடச் சுட அந்த இயந்திரத்தில் வறுத்துக் கொடுப்பார். ஆனால், அந்த இயந்திரத்தின் மேல் அவருக்கு திருப்தி இல்லை. தானாகவே அதில் சில மாற்றங்களைச் செய்தார். பிறகு, அவரே சில இயந்திரங்களை வடிவமைத்தார். அது அவர் சிகாகோவுக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்திருந்த நேரம். ஒருநாள் அவர் கண்டுபிடித்த மெஷின்களில் ஒன்றில் மக்காச்சோளத்தைப் பொரித்துப் பார்க்க, பாப்கார்ன் உருவானது. உலகமெங்கும் உலாவரும் அட்டகாசமான நொறுக்குத்தீனியாகவும் ஆகிவிட்டது. அமெரிக்காவில் `தேசிய பாப்கார்ன் தினம்’, `தேசிய பாப்கார்ன் மாதம்’ எல்லாம் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. 

1930. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி தலைவிரித்து ஆடிய காலகட்டம். அந்தச் சமயத்தில் குறைந்த விலையில் கிடைத்த நொறுக்குத்தீனி, பாப்கார்ன் மட்டுமே. இதற்கு இருக்கும் அபாரமான வரவேற்பைப் பார்த்து, அமெரிக்காவில் பல விவசாயக் குடும்பங்களேகூட இதன் தயாரிப்பில் ஈடுபட்டன. இதற்காகவே மக்காச்சோளத்தை அதிகம் பயிரிட்டார்கள். இன்றைக்கு உலகம் முழுக்க எக்கச்சக்க பிராண்டுகள். அதிலும். அமெரிக்காவில் உள்ள மத்திய மேற்குப்பகுதி, `உலகின் பாப்கார்ன் தலைநகரம்’ என்றே அழைக்கப்படுகிறது. உலகிலேயே பாப்கார்னை அதிகம் விரும்புகிறவர்கள் அமெரிக்கர்கள்தான். பாப்கார்னை கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைக்கவெல்லாம் பயன்படுத்திப் பார்த்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

பாப்கார்ன்

டயட்டீஷியன் சௌமியா, பாப்கார்னில் இருக்கும் சத்துக்கள் குறித்துச் சொல்கிறார். ``100 கிராம் பாப்கார்னில் 375 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் 74 கிராம், கொழுப்பு 4.3 கிராம், சோடியம் 7 மி.கி., பொட்டாசியம் 274 மி.கி., புரோட்டீன் 11 கிராம் இருக்கின்றன. அதோடு வைட்டமின் பி6, மக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இதில் உண்டு. பாப்கார்ன் ஆரோக்கியமானதுதானா என்பது, இது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. மேலை நாடுகளில் ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கும் பழக்கம் உண்டு. எவ்வளவு சுத்தமானதாக இருந்தாலும், எண்ணெய் சேர்த்து பாப்கார்னைத் தயாரிப்பது சரியான வழிமுறை அல்ல. மைக்ரோவேவ் அவன் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ஆபத்தில்லாதது. சௌமியா

சோளத்தால் தயாரிக்க்கப்படுவது பாப்கார்ன். சோளத்தில் பி காப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் இ ஆகியவை நிறைவாக உள்ளன. எனவே இது செரிமானத்தை எளிதாக்கும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். பாப்கார்னில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும். இதன் மூலம் இதயநோய்கள், பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்கலாம். இது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இன்சுலின் சுரப்பையும் சீராக வைத்திருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காத பாப்கார்னைச் சாப்பிடலாம். `இதில் உள்ள பாலிஃபினாலிக் கூட்டுப் பொருள்கள் புற்றுநோயைத் தடுக்கக்கூடியவை’ என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். முதுமையில் ஏற்படும் பார்வைக்குறைபாடு, தசைகள் வலுவிழத்தல், ஆஸ்டியோபொரோசிஸ், முடி உதிர்வு, ஞாபகமறதி ஆகியவற்றின் தீவிரத்தையும் இது கட்டுப்படுத்தும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. உருளைக்கிழங்கு சிப்ஸோடு ஒப்பிடும்போது, அதைவிட பாப்கார்னில் கலோரி குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து, நன்கு சாப்பிட்ட திருப்தியைத் தந்துவிடும்; எனவே, இது பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தி, பசியுணர்வைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைச் சாப்பிட்டால், அதிக உணவு சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்படாது. 

பாப்கார்னில் உடலுக்கு நல்ல பலன்களைத் தரும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனாலும், கடைகளிலும், சினிமா தியேட்டரிலும் கிடைக்கும் வகைகளில் கவனமாக இருப்பது நல்லது. இதில் தூவப்படும் உப்பு, வெண்ணெய், சில மசாலா சமாசாரங்கள் நம் உடலுக்கு ஒவ்வாதவை. இவை பாப்கார்னில் உள்ள பாலிஃபினாலிக் கூட்டுப் பொருள்களின் தன்மையை பாதித்துவிடும். அதனால் இவையெல்லாம் கலந்த பாப்கார்னைத் தவிர்க்கலாம். மற்றபடி பாப்கார்ன் சாப்பிடுவது நமக்குப் பலவழிகளில் நன்மை செய்யக்கூடியது’’என்கிறார் சௌமியா. 

சோளப்பொரி

`இந்த அபாரமான நொறுக்குத்தீனியை நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இது தொண்டையில் போய் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. `டயாசிட்டில்’ (Diacetyl) என்ற ஒருவகை செயற்கை வெண்ணெய் ஃப்ளேவரை ஆரம்பத்தில் அமெரிக்காவில் பாப்கார்னில் சேர்க்கப் பயன்படுத்தினார்கள். இது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது, முக்கியமாக சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிந்ததும் பல கம்பெனிகள் அதைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டன. இப்படி பல ரசாயனங்கள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருக்கிறது. நாம் செய்யவேண்டியதெல்லாம், பெரும்பாலும் கடைகளில் பேக் செய்யப்பட்ட பாப்கார்னை வாங்குவதைத் தவிர்த்துவிடுவது. இதை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்க முடியும். பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படுத்தாதது, நாம் ஆரோக்கியமாக வாழ, பல நல்ல பலன்களைத் தருவது என்பதால் பாப்கார்னை நம்பலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்