துவைத்தல், பெருக்குதல், பாத்திரம் கழுவுதல்... இப்படியும் குறைக்கலாம் உடல் எடை!

டல்பருமன், சர்க்கரைநோய், இதயக்கோளாறுகள் எனப் பல நோய்கள் இன்று வரிசைகட்டி நிற்பதற்குக் காரணம் உடல் உழைப்பு இல்லாத, உட்கார்ந்தே பார்க்கும் பணிச்சூழல். எடை குறைப்பதின் அடிப்படை உடலில் உள்ள கலோரிகளை எரிப்பது. இதற்காக வீட்டிலேயே ஃபிட்னெஸ் கருவிகளை வாங்கி கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள் பலர். வேறு சிலரோ, தொலைக்காட்சியில் விளம்பரமாக வருகிறது என்று அதிர்வை ஏற்படுத்தும் கருவிகளை எல்லாம் வாங்கி, வயிற்றில் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

உடல் எடை   

‘இதுபோல செயற்கை முறையில் எடை குறைக்க முயற்சிப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்’ என மருத்துவர்கள் எச்சரித்தாலும், அவர்கள் கேட்பதில்லை. உடல் எடையைக் குறைக்க, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத எளிய வழிமுறைகளும் இருக்கின்றன. ஒன்றும் வேண்டாம், துவைத்தல், பெருக்குதல், பாத்திரம் கழுவுதல்... ... என நம் வேலையை நாமே இழுத்துப்போட்டு செய்தும்கூட குறைக்கலாம் உடல் எடை! அதாவது, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க முடியும். உண்மை... வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தால், எவ்வளவு கலோரிகள் குறையும்... பார்க்கலாமா? 

பெருக்கல்... குறைக்கும்!

வீட்டைப் பெருக்கி சுத்தம்செய்வது எல்லா வீடுகளிலும் அன்றாடம் நடக்கும் எளிய வேலை; அவசியமான வேலை. இதுகூட கணிசமாக நம் உடல் எடையைக் குறைக்க உதவும். சுமார் 30 நிமிடங்கள் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தால், உடலில்  87 முதல் 102 கலோரிகள் எரிக்கப்படும். இது டிரெட்மில்லில் 15 நிமிடங்கள் கடுமையாக நடைப்பயிற்சி செய்வதற்குச் சமம். 

 டிரெட்மில்லில் நடைப்பயிற்சி 

வேக்வம் க்ளீனர் வேல்யூவபிள்

வாக்யூம் க்ளீனரால் வீட்டில் உள்ள தூசிகளைச் சுத்தம் செய்வது மற்றோர் எளிய வழி. இந்த வேலையை 30 நிமிடங்கள் செய்தால், உடலில் 90 முதல் 111 கலோரிகள் வரை எரிக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறையும்; வீடும் சுத்தமாகும். இது, 15 நிமிடங்கள் குத்துச்சண்டைப் பயிற்சி செய்வதற்குச் சமமானது.  

அறை ஒழுங்கு ஃபிட்னெஸுக்கு விதை!

நம் படுக்கை அறையை சுத்தம் செய்து, அறையை நமக்குப் பிடித்த முறையில் மாற்றியமைப்பது நம் எல்லோருக்குமே பிடித்த வேலையாகத்தான் இருக்கும். இதைச் செய்வதால், 30 நிமிடங்களில் 189-ல் இருந்து 223 கலோரிகளை விரட்டலாம்.

சுத்தமான வீடு 

ஃபர்னிச்சர் சுத்தம் பலன் தரும்!

டி.வி., கம்ப்யூட்டர், ஃபேன், ஃபர்னிச்சர் போன்றவற்றை 30 நிமிடங்கள் சுத்தம் செய்தால், 57 முதல் 66 கலோரிகள் வரை எரிக்க முடியும். தூசி அலர்ஜி உள்ளவர்கள், சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த வேலை ஏற்றதல்ல. 

பாத்திரம் கழுவினால்  பலே பலன்!

எல்லோராலும் எளிதாகச் செய்யக்கூடிய வேலை பாத்திரம் கழுவுவது. சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த வேலையைச் செய்தால், 49 முதல் 58 கலோரிகளை காணாமல் அடிக்கலாம். இதுவும் சாதாரண வேலை கிடையாது. 300 மீட்டர் நீச்சல் பயிற்சி செய்ததற்குச் சமம்.

பாத் ரூம் 

குளியல் அறை சுத்தம்... குறைக்குமே கலோரி!

குளியலறை, கழிப்பறை, வாஷ் பேசின் ஆகியவற்றை சுத்தம் செய்தால், 106 முதல் 124 கலோரிகளை அடித்து விரட்டலாம். இது, 30 முறை துணி துவைக்கும் இல்லதரசிஸ்கிப்பிங் செய்வதற்குச் சமமானது.

காரைக் கழுவுவது நல்லது!

கார் அல்லது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவி சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை அரை மணி நேரம் செய்யலாம். இது, நம் உடலில் இருந்து 126 முதல் 149 வரையிலான கலோரிகளை குறைக்க உதவும். இது, 40 முறை புஷ்-அப் செய்வதற்குச் சமம்.

அயர்ன் செய்வதும் ஜும்பா நடனமும்!

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைய, ஆடைகளை அயர்ன் செய்வது சிறப்பான பயிற்சி. சுமார் 3 மணி நேரம் அயர்ன் செய்யும் பணியைச் செய்தால், 420 கலோரிகள் எரிக்கப்படும். இது, அதே அளவு நேரம் ஜும்பா (Zumba) நடனப் பயிற்சி செய்வதற்குச் சமமானது. 

கலோரிகளைக் குறைக்க துவைக்கலாம்!

சாதாரணமாகத் தரையில் அமர்ந்து துவைக்கும் வேலையைச் செய்வதன் மூலமே 78 கலோரிகளைக் குறைக்கலாம். இது 100 முறை உட்கார்ந்து எழும் பயிற்சிக்குச் சமமானது.  

இந்த வேலைகள் அத்தனைக்கும் நம் சுற்றுசூழலோடும் தொடர்புண்டு. நாமும் நமக்கு நெருக்கமானவர்களும் வாழும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுகூட நம் எடையைக் குறைக்கும் என்பது நல்ல விஷயம்தானே! சுத்தத்துக்கு சுத்தம், எடையும் குறையும். ஆக, இரட்டிப்புப் பலன்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!