வெளியிடப்பட்ட நேரம்: 05:19 (25/04/2017)

கடைசி தொடர்பு:07:51 (25/04/2017)

5 ஆண்டுகளில் 6 லட்சம் லிட்டர் ரத்தம் வீண் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

 ரத்தம்

மனிதர்களுக்கு  ரத்தம் எவ்வளவு முக்கியம் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ரத்தத்தினால்தான் உடலே இயங்கிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரத்தத்தை, எவ்வளவு அலட்சியப்படுத்தி வீணாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேட்டன் கோத்தாரி என்பவர்,ரத்த தானம் பற்றிய கேள்வி ஒன்றைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் இடையே முறையான தொடர்பு, போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணங்களினால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் லிட்டர் ரத்தம் வீணாகியுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், சரியான பாதுகாப்பின்றி வைக்கப்படுவதால், 1000 முதல் 3000 யூனிட்கள் வரை ரத்தம் வீணாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் யூனிட் அளவுக்கான ரத்தத் தட்டுப்பாடு நிலவுகிறது. ரத்த தானத்தை ஊக்குவிக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதிக முயற்சி எடுத்து,மக்களிடம்  ரத்த தானம் குறித்து விழிப்புஉணர்வு செய்துவருகின்ற நிலையில், இந்த மாதிரியான தகவல்கள் மேலும் அதிர்ச்சியை வரவழைத்திருக்கிறது.