Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்!

றுத்து எடுக்கிறது கோடை... வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின்  தாக்கம் அதிகம்... என்னதான் காலையில் இளநீர், மதியம் நீர் மோர், அடிக்கடி பழங்கள் என உட்கொண்டாலும் உடல்சூடு குறைந்தபாடில்லை. படுபோடு போடும் வெயிலுக்கு வெளியில் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களாலேயே வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் போய்விடுகிறது. சிலருக்கும் மயக்கம்கூட வந்துவிடுகிறது. `உடல் சூடு பிரச்னையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா?’ என்று இயற்கை வைத்தியர் இரத்தின சக்திவேலிடம் கேட்டோம். கடும் வெயிலால் ஏற்படும் உடல்சூடு, அதன் பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள் அனைத்தையும் குறித்து விரிவாகச் சொல்கிறார் இரத்தின சக்திவேல்...

உடல்சூடு

வெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வருவது சகஜம். ஆனால், இந்த வருடம் வெயில் அதிகமாக இருப்பதால், இந்த உபாதைகளை எல்லாம் பலபேர் இப்போதே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதக் காலத்துக்காவது வெயிலின் தீவிரம் நீடிக்கும். இந்த நிலையில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, நம் முன்னோர்கள் இரத்தினம் சக்திவேல்குறிப்பிட்டிருக்கும் `மூலிகை முறை’ உணவு முறையைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்த வழி. மூலிகை முறை என்றதும் பயப்பட வேண்டாம். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களைச் செய்து, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதுமானது.   

உடல் சூட்டினால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்க...

உணவுக்கு முன் அடிவயிற்றில் ஈரத்துணிப்பட்டி அல்லது மண்பட்டி அவசியம் போட வேண்டும். (வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாட்களிலும், மலச்சிக்கல் உண்டாகும் நேரங்களிலும் போடலாம். )

  • காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக, இளம் சூடான தண்ணீர் நான்கு டம்ளர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.
  • பப்பாளியை தினமும் 100 கிராம் அளவில் உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.
  • அத்திப்பழத்தை (ஐந்து பழங்கள்) இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ, அல்லது வெறும் நீரில் கழுவியோ காலையில் சாப்பிடலாம். 
  • பேரீச்சை (மூன்று), உலர்திராட்சை (50 கிராம்) இந்த இந்த இரண்டையும் நன்கு கழுவி, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சை ஊறவைத்த தண்ணீர், இரும்புச்சத்து டானிக்போல தித்திப்பாக இருக்கும். அதே நேரத்தில் பேரீச்சையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.
  • கொய்யா (ஒன்று), வாழைப்பழம் (இரண்டு), மாதுளை (50 கிராம்), தர்பூசணி (200 கிராம்), ஆப்பிள், நெல்லி, போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை வெயில் நேரத்தில் சாப்பிட்டால் வெயிலால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்கும். 

(* பழங்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவு ஏற்படும். எனவே அவ்வாறு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்)

உடல் சூட்டினால் உண்டாகும்  சிறுநீரகப் பிரச்னை, கண் வீக்கம் சரியாக...

வெயில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், மஞ்சளாக சிறுநீர் கழிவது, சொட்டுச் சொட்டாக வெளியேறுவது, வெளியேறும் வழியில் கல் அடைப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களைவிட பெரிய தீர்வு வேறு எதுவும் இல்லை. தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு வெயில் சூட்டினால் கண் எரிச்சல், கண் வீக்கம் போன்றவை உண்டாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர எளிமையான வழி வீட்டின் சமையலறையிலேயே இருக்கிறது.

* வெள்ளரிப் பச்சடியில், வாழைத்தண்டை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிட, உடல் சூடு நீங்கி கண் எரிச்சல் நீங்கும், சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.

வெள்ளரிப் பச்சடி செய்முறை : 

வெள்ளரிப் பச்சடி

இரண்டு வெள்ளரிக்காயை தண்ணீரில் நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தையும், மூன்று தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு கேரட்டை நன்றாகத் துருவி, அனைத்தையும் ஒரு கப் தயிரில் கலந்து, சிறிது கருப்பு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான்... வெள்ளரிப் பச்சடி தயார்.

* மூலிகை டீ:

உடல் சூடு

 தாமரை, ரோஜா, செம்பருத்தி ஆகிய மூன்று பூக்களின் இதழ்களையும் நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் இவற்றைச் சேர்க்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் இதை வடிகட்டி குடித்தால், உடல் சூடு உடனடியாகக் குறையும்.

* வாழைத்தண்டு சூப், மணதக்காளி சூப், தக்காளி ஜூஸ், இளநீர், திராட்சை ஜூஸ், அருகம்புல் சாறு, மல்லி சாதம், மல்லிச் சட்னி-துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

* ரோஜா குல்கந்து உடல் சூட்டைக் குறைப்பதோடு, ஆண்மைக் குறைப்பாடையும் சரிசெய்யும். 

 ரோஜா குல்கந்து செய்முறை :

ரோஜா குல்கந்து

சுத்தம் செய்த ரோஜா இதழ்களுடன், அதைவிட மூன்று மடங்கு அதிகமான கற்கண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, இடித்துக்கொள்ளவும்.பின்னர், இதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையின் மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனைவிட்டு நன்றாகக் கிளறி, கொஞ்சம் வெள்ளரி விதைகளைச் சேர்த்தால் குல்கந்து தயார்.

* அடிக்கடி யூரின் வெளியேற்றம், தானாகச் சொட்டுதலால் அவதிப்படுபவர்கள் துவர்ப்பு, கசப்பு உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாவல், மாதுளை, வெள்ளரி, ஆவாரம் பூ, முருங்கைக் காய், கீரை சூப், கிட்னீ பீன்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் சூட்டினால் உண்டாகும் சோர்வு நீங்க...

முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, ஆளிவிதை, பிஸ்தா பருப்பு, அக்ரூட் பருப்பு, பாதாம் பிசின், பூமி சர்க்கரைக் கிழங்கு,  அமுக்ரா, ஓரிதழ் தாமரை, முருங்கைப் பூ, நெல்லி, பேரீச்சை, உலர் திராட்சை, தேன், அத்திப்பழம் அனைத்தையும் சேர்த்த ஒரு லேகியத்தை வீட்டிலேயே தயார்செய்து சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும்.

குறிப்பு : 

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அது, மண்பானை நீராக இருந்தால் மிகவும் சிறப்பு.

*அதிக நேரம் ஏசி-யில் வேலை செய்பவர்கள், கட்டாயம் உடற்பயிற்சி செய்து வியர்வையை வெளியேற்ற வேண்டும்.

*வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், உடல் சூடு நீங்கும். அதே நேரத்தில் தலை முடியின் அடிப்பகுதி வரை உலரவிடுவது அவசியம். இல்லையேல் சிறுகச் சிறுக வெள்ளைப் பொடுகு தோன்றும். அத்துடன் எண்ணெய்ப் பிசுக்கும் சேர்ந்து பொடுகு அதிகமாகும். இதனால் தலைக்குத் தேவையான சத்துக்கள் தடைப்பட்டு, பலமிழந்து முடி உதிர்வு அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement