எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள் | Health benefits of herbal Oil

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (28/04/2017)

கடைசி தொடர்பு:12:02 (28/04/2017)

எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள்

ண்ணெய்... இன்றைக்குப் பலர் ஓரங்கட்டும் ஒரு பொருள். கொழுப்பு, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாகவே பலரும் இதை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இன்னொரு பக்கம், எண்ணெய் இல்லாமல் சிறப்பான உணவுகளைத் தயாரிக்க முடியாது; நம் உடலையும் நன்கு பராமரிக்க முடியாது. எள், கடலை, தேங்காயில் இருந்து மட்டுமல்ல... நாம் தினமும் சேர்த்துக்கொள்ளும் உணவுப் பொருள்களில் இருந்தும், சில மூலிகைப் பொருள்களில் இருந்தும்கூட எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அப்படி அரிதான சில எண்ணெய் வகைகள், அவற்றின் பலன்கள் இங்கே... 

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்துணர்வே. நிறைந்த மணம் உடையது. உணவு, பானம், டிடர்ஜெண்ட் சோப், சுத்திகரிப்பான்... என எலுமிச்சை எண்ணெய் இல்லாத இடங்களே இல்லை. 

* ஒரு கிலோ எலுமிச்சை எண்ணெய் எடுக்க சுமார் 3,000 எலுமிச்சைப் பழங்களின் சாறு தேவைப்படும். 

* எலுமிச்சையில் புளிப்பு, இனிப்பு, உலரச்செய்யும் தன்மை போன்றவை உள்ளன. இது, சருமப் பராமரிப்புக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எண்ணெய் பிசுக்குள்ள சருமம், செரிமானக் கோளாறு, தொற்றுநோய்கள், ரத்தச்சோகை, உயர் ரத்த அழுத்தம், ஈரல் அல்லது பித்தப்பை சுருங்கிப்போதல் போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.  

* எலுமிச்சை எண்ணெயை உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம்; நீரில் கலந்து குளிக்கலாம்; மருத்துத் திரவமாகவும், ஷாம்பூவாகவும், மசாஜ் ஆயிலாகவும் உபயோகிக்கலாம்.

* வாசனையைப் பொறுத்தவரை, எலுமிச்சை எண்ணெய் லேசானது; இனிய நறுமணம் கொண்டது.

* லாவண்டர், ஜடமான்ஸி, தவனம் போன்றவற்றுடன் எலுமிச்சை எண்ணெயை எளிதில் கலக்கலாம்.

* பூச்சிக்கடி அல்லது குளவி கொட்டுக்கு சுத்தமான எலுமிச்சை எண்ணெயைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். 

புதினா ஆயில்

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயை 'மிட்டாய் புதினா' என்றும் சொல்வார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் `மெந்தால்’ (Menthol) எனப்படும். மெந்தாலை மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். 

* இலைகளையும் பூக்களையும் பயன்படுத்தி ஆவியாக்கி குளிரச் செய்யும் முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். இந்த எண்ணெய் குளிர்ச்சியானது.

* வாயில் ஊற்றிக் கொப்பளிக்கலாம். சுவாசப் பாதையை சீர்செய்ய உதவும்; பத்து துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து குளித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். 

* உடல்வலியைக் குறைக்கும் தன்மைகொண்டது; வயிற்றுவலி, வாயுப்பொருமல், கிருமித்தொற்றை சரிசெய்ய உதவும். 

* தடுமன், ஜூரம், தொண்டைப்புண், காதுவலி, குரல்வளை வீக்கம், தலைவலி, மாதவிடாய்க் கோளாறு, ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்தும். இதன் பெப்பர்மின்ட் கலந்த பற்பசையை உபயோகித்து, ஈறுகளில் ஏற்படும் தொல்லைகளைப் போக்கலாம். 

* புதினா எண்ணெயை நீரில் கலந்து குளிக்கலாம். மசாஜ் ஆயிலாகப் பயன்படுத்தலாம். 

*இது, யூகலிப்டஸ், ரோஸ்மேரி, லாவண்டர், சிட்ரஸ் எண்ணெய் வகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அவற்றின் குணங்களை மேம்படுத்தும். 

* சுத்தமான புதினா எண்ணெயை நெற்றிப் பொட்டில் தடவினால், ஒற்றைத் தலைவலி பறந்துபோகும். தேங்காய் எண்ணெயுடன் கலந்து வயிறு, விலாப்பகுதியில் தேய்த்தால், நெஞ்செரிச்சல் நீங்கும். நீரில் நாலைந்து சொட்டுகள் சேர்த்து கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் அகன்றுவிடும். 

* கர்ப்பிணிப் பெண்கள் மின்ட் ஆயிலை உபயோகிக்கக் கூடாது.

ரோஜா ஆயில்

ரோஜா எண்ணெய்

 'ரோஜா' தைலங்களின் ராணி. இனிய மணமுடையது. பல நிறங்களில் கிடைக்கும்.

* ரோஜா இதழ்களைக் காய்ச்சி வடித்து சேகரிப்பது மிகவும் கடினம். சிறிதளவு எண்ணெய் எடுக்கவே அதிகச் செலவாகும்.

* ரோஜாப் பூக்களை இரண்டு மூன்று முறை காய்ச்சி வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். இதன் தயாரிப்பு செலவு காரணமாக கலப்படச் சரக்குகளும் புழக்கத்தில் உள்ளன. 

* ரோஜா ஓர் ஆன்மிக உணர்வை, பாதுகாப்புத் தன்மையை வழங்குவது. இது கோபத்தைக் குறைக்கும்; மனச்சோர்வை நீக்கும்; ஈரலை வலுப்படுத்தும்; சருமப் பராமரிப்பில் இதற்கே முதல் இடம்.  

* இனிப்பு, கார, கசப்பு, துவர்ப்பு சுவைகளை உடையது; குளுமைத் தன்மை கொண்டது.

* உடல் சோர்வை நீக்கும்; சிறந்த மலமிளக்கி; வயிற்றுவலி, வாயுப் பொருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்; செல்களைப் புதுப்பிக்க உதவும். 

* மாதவிலக்கு ஒழுங்கற்றுப்போதல், தலைவலி, மனச்சோர்வு, தொண்டைப்புண், குழப்பம், துயரம், பரு, சருமம் முதுமையுறுதல், ஆண்மைக்குறைவு, மன உபாதை போன்றவற்றை சரிசெய்ய உதவும். 

* வாசனைத் திரவியமாக, மருத்துவத் திரவமாகப் பயன்படும்; குளியலிலும், பர்ஃபியூமாகவும், மசாஜுக்கும் உபயோகிக்கலாம்.

* சந்தன எண்ணெய், மல்லிகை, லாவண்டர், தேவதாரு, கதிர்ப்பச்சை எண்ணெய்களுடன் ரோஜா எண்ணெய் நன்கு கலக்கும். 

வெட்டிவேர் ஆயில்

வெட்டிவேர் எண்ணெய்

வெட்டிவேர், புல்வகையைச் சார்ந்தது. புத்துணர்வை அளிக்கும். இதன் வேர்ப்பகுதியில் இருந்து தைலம் எடுக்கப்படுகிறது. வெட்டிவேர் நில அரிப்பு (Erosion) உள்ள இடங்களில் செழித்து வளரும்.

* வருத்தம் நீக்கும்; ஆவேசத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்; மயக்க மருந்தாகவும் செயல்படும்.  

* சருமம் முதிர்வடைவதைத் தடுக்கும். சரும எரிச்சலைப் போக்கும்.

* இனிப்பு மற்றும் கசப்பு சுவை உடையது. 

* அழுகல் தடுப்பானாக, போஷாக்கு மருந்தாக, வலுவூட்டியாக, மோக ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக, ஹார்மோன் பேலன்ஸராகச் செயல்படுகிறது. செல்களை புதுப்பித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* மூட்டுவலி, பயம், தூக்கமின்மை, மன உளைச்சல், சரும அயர்வு, சரும முதிர்ச்சி, எரிச்சலுடன் மாதவிடாய், பசியின்மை போன்றப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும். 

* லோஷனாக, மசாஜ் எண்ணெயாக, வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தலாம். குளியலிலும் உபயோகிக்கலாம்.

* ஜடமான்ஸி, ரோஸ் வுட், கதிர்ப்பச்சை, தவனம், ரோஜா, சந்தனம், லாவண்டர் எண்ணெய் வகைகளுடன் நன்கு கலக்கும்.

* சில சொட்டு தைலத்தை நீரில்விட்டுக் குளித்தால் உடல் சோர்வு, மன உளைச்சல் தீரும். நாம் தினமும் சருமத்துக்குப் பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்து தோளிலும், கழுத்திலும் தேய்த்துக்கொள்ளலாம். கழுத்துப் பிடிப்பு குணமாகும். 

சோம்பு ஆயில்

சோம்பு எண்ணெய்

'சோம்பு' என்கிற பெருஞ்சீரகம் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவும். இது கீழை நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளின் உணவிலும் முக்கியத்துவம் பெற்றது. ஒரு மணமூட்டியாக மட்டுமின்றி, திரவத் தயாரிப்புகளில் ஒரு துணைப் பொருளாகவும் இடம்பெற்றிருக்கிறது. 

* இதை கபம், இருமலை நீக்குவதற்காக இருமல் சிரப்பில் சேர்க்கிறார்கள். இது மோக ஊக்கி என்பதால், இச்சைக் குறைபாட்டை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். தசைச் சுளுக்குக்கு உள்ளும் புறமுமாக உபயோகிக்கலாம். 

* காரச் சுவை கொண்டது. சூட்டுத் தன்மையும், குளிர்ச்சித் தன்மையும் ஒருங்கே பொருந்தியது. 

* வாதம், சுபத்தை மட்டுப்படுத்தும்; பித்தத்தை அதிகரிக்கும். 

* வயிற்றுவலி, வாயுப் பொருமல் போன்றவற்றைச் சரிசெய்யும்; வியர்வை சுரந்து உடம்பின் வெப்பத்தை வெளியேற்ற உதவும். 

* சளி, வறட்டு இருமல், வாயுவை அகற்றும்.

* உணவிலும், பான வகைகளிலும் மண்மூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. பற்றுப் போடவும், மசாஜ் ஆயிலாகவும், இருமல் மருந்தாகவும் பயன்படும். 

* அதிகமாக உபயோகித்தால் தலைச் சுற்றலை ஏற்படுத்தும். வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

* ஏலம், கிராம்புத் தைலங்களுடன் நன்கு கலக்கும்.

* சோம்புத் தைலம் பசியை அதிகப்படுத்தும்; தலைப் பேன்களை அழிக்கும். 

திருநீற்றுப்பச்சிலை எண்ணெய்

திருநீற்றுப்பச்சிலை எண்ணெய்

இதில் பல வகைகள் உள்லன. இது, `இந்திய வகை துளசி’ என்றும் அறியப்படுகிறது. இது மனதை ஒழுங்கு செய்யும் தன்மை உடையது. பயம், கவலை போன்ற உணர்வு பாதிப்புகளின் போது பலமளிக்கும். ஆஸ்துமா, தலைவலிக்கு நிவாரணமாக அமையும். 

* காரச்சுவை உடையது; இனிய நறுமணம் கொண்டது.

* வியர்வையைப் பெருக்கும்; காய்ச்சலைக் குணப்படுத்தும்; அழுகல் தடுப்பானாக, கிருமிக்கொல்லியாக, கப நீக்கியாக, மயக்க மருந்தாகவும் பயன்படும்; மாதவிலக்கை சரிசெய்யும். 

* சளி, இருமல், தலைவலி, மூட்டுவலி, கீல்வாதம், ஜுரம், ஆஸ்துமா, போதிய மனத் தெளிவின்மை போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும். 

* கற்பூரம், ரோஸ்மேரி, எலுமிச்சை, லாவண்டர் தைலங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

* பச்சிலைச் சாற்றை படை நோய்களுக்கும் மற்ற சரும நோய்களுக்கும் பயன்படுத்தலாம். காதுவலிக்கும், காதில் இருந்து வரும் சீழை நிறுத்தவும் பயன்படும். இதன் சாற்றை வெந்நீருடன் கலந்து கொடுத்தால், வாந்தி நிற்கும்.

* விதையும் பூவும் சுறுசுறுப்பைத் தரும்; சிறுநீர்ப் பெருக்கும்; அழற்சியைத் தணிக்கும்; இதன் கஷாயம் சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தும். 

* அதிகப் பித்தம் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் உபயோகிக்கக் கூடாது.

 

மிளகு எண்ணெய்

மிளகு எண்ணெய்

உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதாம். மூன்று அவுன்ஸ் கனோலா (Canola) கடுகு, வாதுமை எண்ணெய்க் கலவையில் 10 சொட்டு லாவண்டர் தைலமும், 5 சொட்டு சாம்பிராணித் தைலமும், 5 சொட்டு சந்தனத் தைலமும், 10 சொட்டு மிளகுத்தைலமும் கலந்து உபயோகித்தால், எடை குறைக்கும்.

* வறட்சியை, சூட்டை ஏற்படுத்தும்; கார, கசப்புச்சுவை கொண்டது. 

* வாயுப் பொருமல், வயிற்றுவலி நீங்கும்; குடல் புழுக்களை அழிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; சிறுநீர்ப்பையை வலுப்படுத்தும்; தொண்டை, நுரையீரல் கபத்தை வெளியேற்றும்; ஜுரத்தை நிறுத்தும்.

* நாள்பட்ட செரிமானக் கோளாறு, குடலில் உள்ள நச்சுத் தன்மை, பருமன், தடுமன் மற்றும் விட்டு விட்டு வருகிற காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.

* சமையலிலும், மருத்துவத்திலும் உதவும். ஆரஞ்சு, இஞ்சி, சாம்பிராணி, எலுமிச்சை, துளசித் தைலங்களுடன் நன்கு கலக்கும். 

* வால் மிளகுப் பொடியை பாலில் கலந்து குடித்தால், தொண்டைக்கட்டுதல் நீங்கி, குரல் அபிவிருத்தியாகும். வால் மிளகுத் தூளை படிகாரத்துடன் சேர்த்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர, நாள்பட்ட வெள்ளை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

* வால் மிளகு எண்ணெய், வெள்ளை குங்கிலியம், பறங்கிச்சக்கைத் தூள் கூட்டி, நீர்முள்ளிச்சாறுவிட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்யலாம். வேளைக்கு இரண்டு மாத்திரையாக காலை, மாலை வேளைகளில் உட்கொள்ளலாம். நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெள்ளைப்படுதல் நீங்கும். ஆஸ்துமாவைத் தடுக்கும். கபம், வாயு, வாய் நாற்றத்தைப் போக்கும்.  

* அதிக பித்தம் உடையவர்களும், குடல் உறுப்புகளில் அழற்சி உடையவர்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது. 

கேரட் எண்ணெய்

கேரட் எண்ணெய்

கேரட்டில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். சருமம் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கேரட்டை 'மஞ்சள் முள்ளங்கி' என்றும் சொல்வார்கள். இது சிறுநீரக உறுப்புகளுக்கு வலிமை உண்டாக்கும். கல்லடைப்பை நீக்கும்.

* ஆவியாக்கி குளிரச் செய்யும் முறையில் கேரட்டில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். சருமப் பராமரிப்புக்கு உதவும்.

* வாத, பித்த, கப தோஷங்களை சமனப்படுத்தும்.

* கார, இனிப்புச் சுவை உடையது. வெப்பமும், ஈரத் தன்மையும் கொண்டது.

* போஷாக்கு மருந்தாக, சருமத்துக்கு இளமை அளிப்பதாக, சக்தியூட்டுவதாக, பெண்ணுக்கு பால் உற்பத்தியை மேம்படுத்துவதாக பயன்படும். 

* கட்டி, கொப்புளம், குடற்புண், சருமக் கோளாறுகள், ஈரல், பித்த நீர்ப்பை குறைபாடுகள், மஞ்சள்காமாலை, வயிற்றில் ஏற்படும் திருகுவலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

* கேரட் தைலத்தை சருமத்துக்கான மருந்துத் திரவமாகவும், உணவுப் பண்டங்களை பதப்படுத்தவும் உபயோகிக்கலாம். 

* லாவண்டர், ரோஸ், தவனம், சந்தனம், ஜடமான்ஸி, வெட்டிவேர், எலுமிச்சை எண்ணெய் வகைகளுடன் நன்கு கலக்கும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close