Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்கள் அவசியம் பின்பற்றவேண்டிய 10 ஆரோக்கிய விதிகள்!

டூ வீலர் டயர் இரண்டு முறை பஞ்சர். ‘ரொம்ப தேய்ஞ்சு போச்சு சார்... டயரை மாத்தணும்’ - மெக்கானிக் அறிவுறுத்தியிருப்பார் அலுவலகம் விரைகிற அவசரம், பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு... என என்னென்னவோ காரணங்களால் ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என அசட்டையாக இருந்திருப்போம். அந்தச் சின்ன அலட்சியம், ரிம் பழுதாகி, துருப்பிடித்து முழு வீலையே  மாற்றவேண்டிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கும். உண்மையில், பல ஆண்கள் அந்த தேய்ந்துபோன டயர் மாதிரிதான். குடும்பம், எதிர்காலத் திட்டம், ஒவ்வொரு மாதமும் முடித்தே தீரவேண்டிய டார்கெட், துரத்திப் பிடித்து சம்பாதிக்கவேண்டிய கட்டாயம்... என உடல் குறித்த அக்கறையின்மைக்கு ஆண்களுக்குப் பல காரணிகள்.

இதய நோய், நெஞ்சு எரிச்சலாக வந்து சிம்ப்டம்ஸ் காட்டியிருக்கும்; `காஸ் ட்ரபுளா இருக்கும்’ என்று சோடா குடித்து சமாளிப்பார்கள். சிறுநீரகத்தில் கல் வந்திருப்பதன் அறிகுறியாக சிறுநீர் அடர் மஞ்சளாகப் பிரியும்; `உடல் உஷ்ணமா இருக்கும். வாழைத்தண்டு கூட்டு சாப்பிட்டா சரியாப் போயிடும்’ என்று வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் உடல்நலத்தின் மீதான அக்கறையின்மை, அந்த டூ வீலருக்கு நடந்ததுபோல பெரிய பிரச்னையாக பிற்காலத்தில் வெடிக்கும்; ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும் நோய்கூட நன்கொடையாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. எனவே ஆண்கள் உடல்நலம் காப்பது மிக அவசியம்! ஆண்கள் அவசியம் பின்பற்றவேண்டிய 10 ஆரோக்கிய விதிகள்....

ஆண்கள்

உங்களுக்காக ஒரு டாக்டர்! 

இந்தியாவில் ஆங்கில மருத்துவம் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், ஆங்கிலேயர்கள் கறாராகச் செய்யும் ஒரு பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதில்லை. அது, `ரெகுலர் செக்கப்’. நாம் வயிற்றுவலி, ஜுரம்போல உடல்நலக் கோளாறுகள் வந்தால்தான் மருத்துவரிடம் போகிறோம். மேற்கத்திய நாடுகளில் உடல்நிலை நன்றாக இருந்தால்கூட மருத்துவரைப் பார்த்து ஒரு `ஹாய்’ சொல்லி, செக்கப் செய்துகொள்வது பெரும்பாலானோரின் பழக்கம். `பிரஷர், சுகர் இருக்கானு பரிசோதிக்கறதெல்லாம் நாப்பது வயசுக்கு அப்புறம் செய்யவேண்டிய வேலை’ என்கிற எண்ணமே தவறு. ஆண்கள் தங்கள் இடுப்புக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் அத்தனை உறுப்புகள் மீதும் கருணை காட்டினால்தான், எதிர்காலம் பிரச்னை இல்லாமல் நகரும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. எனவே, ஒவ்வொரு மாதமும் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வீட்டுக்குப் பக்கத்தில் அல்லது வேறோர் இடத்தில் உங்களுக்கு உதவிசெய்வார் என நம்புகிற, பொருத்தமான டாக்டர் ஒருவரைக் கண்டுபிடியுங்கள். அவரிடம் மனநலம், பாலியல் செயல்பாடு உள்பட உங்கள் உடலின் அத்தனை அம்சங்களையும் வெளிப்படையாகப் பேசுங்கள். டாக்டர் தருகிற ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் தவறாமல் கடைப்பிடியுங்கள்.  

மருத்துவ ஆலோசனை

கவனித்தல் நன்று! 

உடலில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றமோ, வலியோ அலட்சியம் வேண்டாம். மலச்சிக்கல், கண்பார்வை மங்குதல், நெஞ்சுப் பகுதியில் வலி... எதுவாகவும் இருக்கட்டும். உடனே மருத்துவரிடம் போய் ஆலோசனை பெறுவது நல்லது. ஆண்களில் பலர் உடல் உணர்த்தும் அறிகுறிகளைக் கவனிக்காமல்விடுவதே பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணம். கவனித்தல் நன்று. 

சுயவைத்தியம் வேண்டாமே! 

`உடம்பெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. பெயின் கில்லர் ஏதாவது கொடுங்களேன்’ என மருந்துக்கடைகளில் 10 ரூபாய்க்கு மாத்திரை வாங்கிச் சாப்பிடும் ஆண்கள் கவனிக்க..! வலிநிவாரணி மாத்திரை நிச்சயமாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். கொடுத்த 10 ரூபாயின் பலனாக, நமக்கு இல்லாத பல வியாதிகளையும் உடலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே நல்லது. தலைவலியோ, வயிற்றுப்போக்கோ, முழங்கால்வலியோ.... அது வந்திருப்பது உங்கள் உடம்புக்குத்தானே! எனவே, சுயவைத்தியம் வேண்டாம்! 

ஸ்ட்ரெட்சிங்

எக்சர்சைஸ்... மாற்றுங்கள் மக்களே! 

ஆண்களில் சிலருக்கு இருக்கும் நல்ல பழக்கம் உடற்பயிற்சி. ஜிம்மில் ரெகுலராகப் போய் ஒரேவிதமான பயிற்சிகளைச் செய்வது தவறில்லை. அது உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும்தான். ஆனால், ஸ்ட்ரெட்சிங்க், ஏரோபிக்ஸ், தசைகளுக்கான பயிற்சிகள்... என அவ்வப்போது உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வது, வயதாகும் காலத்தில் உடற்பயிற்சிகளை மாற்றிக்கொள்ளவும், எளிய பயிற்சிகளைச் செய்யவும் உதவும். 

உணவு செழிப்பானதாக இருக்கட்டும்!

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அன்றாடம் கொடுக்கவேண்டியது மிக முக்கியம். அதிக கலோரிகள்கொண்ட உணவுகளைத் தவிர்க்கலாம். விதவிதமான ஆரோக்கிய உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடலாம். வாழைப்பழம், மீன் உணவுகள், புராக்கோலி, முந்திரி-பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், சிறுதானியங்கள், கீரைகள், சோயா, பழ வகைகள்... என ஆண்களை அரவணைத்து ஆரோக்கியம் காக்கக்கூடிய பல உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சாப்பிடலாம். அதே நேரத்தில் நம் உடல்நலத்துக்கும் அவை பொருத்தமானதாக இருக்க வேண்டும் இல்லையா? ஒரு வார்த்தை உங்கள் டாக்டரிடம் கேட்டுவிட்டு, இந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு செழிப்பு தருவதாக இருக்கட்டும்.

நட்ஸ் உணவு

உறக்கத்துக்கு முன்னுரிமை! 

`நான் கடுமையா எக்சர்சைஸ் செய்யறேன்ல... என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது. நாலு, அஞ்சு மணி நேர தூக்கம் போதாதா?’ எனப் பல ஆண்கள் நினைக்கிறார்கள். இது தவறு. நாள் முழுக்க ஓடியாடி வேலை பார்க்கும் உடலுக்கு ஓய்வு தருவது தூக்கம் மட்டும்தான். உடலின் உள் உறுப்புகள் தங்கள் இயக்கத்தைப் புதுப்பித்துக்கொள்வதும் தூக்கத்தின்போதுதான். உடல் உழைப்பு செய்பவரோ, செய்யாதவரோ அத்தனை பேருக்குமே ஆறில் இருந்து எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள் பாஸ்!

மனதைக் கவனிக்க மனது வையுங்கள்!

சில ஆண்கள் உடல்நலத்தைக்கூட பராமரித்துவிடுவார்கள்; ஆனால், மனப் பிரச்னைகளில் அலட்சியம் காட்டுவார்கள். மனநலம், உடல்நலத்தைவிட முக்கியமானது என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. பதற்றம், அதிக உற்சாகம் அல்லது சோர்வு (Bipolar disorder) போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறதா? வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அதிகமாகிவிட்டதா? உடனே கவனியுங்கள். மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இவை, பின்னாளில் மனஅழுத்தம் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்துப் பாழ்படுத்திவிடும். அதேபோல வீட்டில் யாருக்காவது மனநல பாதிப்பு இருந்திருந்தாலோ, தற்கொலை நிகழ்வுகள் நடந்திருந்தாலோ, உடல்ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ... மனநல மருத்துவரை நாடி, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆண்கள் தகுந்த கவுன்சலிங் பெறவேண்டியது மிக மிக அவசியம்.

ஆரோக்யத்தின் அளவுகோல் பாலியல் ஈர்ப்பு! 

சரியான தூக்கம் இல்லாத, மனஅழுத்தம் உள்ள, அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ள ஆண்களால் செக்ஸில் நிறைவாக ஈடுபட முடியாது. `ஆண்மை எழுச்சிதான் (Erection) உடலின் மொத்த ஆரோக்கியத்துக்கான அளவுகோல்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அது குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவு, ஆழ்ந்த உறக்கம், முறையான உடற்பயிற்சி ஆகியவை பாலியல் ஈர்ப்பையும் எழுச்சியையும் தக்கவைத்துக்கொள்ள ஆண்களுக்கு உதவும்.

புராஸ்டேட் வருமுன் காக்க!

முதுமை நெருங்கும் காலத்தில் ஆண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை புராஸ்டேட் (Prostate) கேன்சர். இதைப் பொறுத்த வரை நமக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம். இடுப்புவலி, முதுகுவலி, சிறுநீரகம் கழிப்பதில் பிரச்னை ஆகியவை இருந்தால் அலட்சியம் கூடாது. உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்வியல் முறை, உணவுப் பழக்கம் போன்றவை புராஸ்டேட் உண்டாகும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கும். 

மகிழ்ச்சி

மகிழ்ச்சியை மீதம் வைக்காதீர்கள்!

வார இறுதி நாள், விடுமுறை தினங்களில் பார்த்துக்கொள்ளலாம் என்று மகிழ்வான தருணங்களை, மகிழ்வூட்டும் விஷயங்களை தள்ளிப் போடாதீர்கள். ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள். ஒவ்வொரு நாளிலும், உங்களுக்காக, உங்கள் சந்தோஷத்துக்காக தனியாக நேரத்தை ஒதுக்குங்கள்! பிடித்த விஷயம் ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். அது, ஓடுவதாக, ஆடுவதாக, புத்தகம் படிப்பதாக, பிடித்த இசையைக் கேட்பதாக, தியானம் செய்வதாக, யோகாவில் ஈடுபடுவதாக... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பர்களுடன் அரட்டையடிப்பதுகூட உங்களை உற்சாகமூட்டும் என்றால் அதற்காக நேரம் ஒதுக்குவதில் தவறில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான நாளாக இருப்பவர்களைவிட்டு ஆரோக்கியம் என்றும் விலகுவதில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement