Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்னி நட்சத்திர நாட்களில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை!

சுட்டெரிக்கும் வெயில், சுருண்டு விழுந்து முதியவர் பலி!
கொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து 50-க்கும் மேற்பட்டோர் பலி! ஆந்திரா - தெலங்கானாவில் பரிதாபம்!
- நெஞ்சைப் பதற வைக்கும் கோடை வெயிலின் இந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆம், கோடைக் காலத்தின் உச்சபட்ச காலமான அக்னி நட்சத்திரம் தொடங்கியிருக்கிறது. உக்கிர தாண்டவம் ஆடத் தொடங்கி இருக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்னும் 25 நாள்கள் நம்மைச் சுட்டெரிக்கும் என்ற தகவல் கவலை அளிக்கிறது. உஷ்....ஷ..ப்பா....இப்பவே கண்ணக்கட்டுதே... இன்னும் 25 நாளா?ன்னு நீங்க வருத்தப்படுறது புரியுது. வெயிலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான இயற்கை வழிகள் நிறையவே இருக்கின்றன. இது நமக்கான ஆறுதல் செய்தி.

வெயில் - தண்ணீர்

கோடையின் கொடூர தினங்களான இந்தக் காலகட்டத்தில் நீர்ப்பற்றாக்குறையின் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை, கண் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். நம்மில் பலர் மற்ற காலகட்டங்களைப்போலவே கோடைக் காலங்களிலும் வழக்கம்போலவே நீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.

வெயிலின் காரணமாக உடல் சூடேறி ரத்தம் உஷ்ணமாகி பித்த நீர் அதிகமாவதால் பல்வேறு நோய்த்தொந்தரவுகள் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே, அதிக வியர்வை வெளியேறும் இந்தக் காலகட்டத்தில் தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியமாகும். வெறுமனே தண்ணீர் என்றில்லாமல் இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், எலுமிச்சைப் பழச்சாறு, வெட்டிவேர் ஊற வைத்த மண்பானைக் குடிநீர் போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

மண்பானை குடிநீர்

இயற்கையான முறையில் பெறப்படும் இவற்றை அருந்துவதால் உடலுக்கு எந்தவிதக் கேடும் ஏற்படாது. ஆனால் சிலர் இவற்றோடு ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டிகளைச் சேர்த்தோ தனியாகவோ அருந்துவார்கள். இவற்றால் அப்போதைக்கு வெயிலின் வெம்மை அடங்கியதுபோலத் தெரிந்தாலும் பின்வரும் நாட்களில் தொண்டையில் பாதிப்பு, சளித்தொந்தரவுகள், காய்ச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவைதவிர வேறு சில நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் கூல் வாட்டர் குடிப்பது ஏற்புடையதல்ல. செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட குடிநீர் ஒரு சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளலாம்; வேறு சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் நோய் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

வெட்டிவேர் நீர்

வெயிலில் அலைந்து திரிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அது பகலோ இரவோ எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் `மடக்... மடக்...' என ஐஸ் வாட்டரை குடிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். வெயிலில் அலைந்ததால் உடல் சூடேறி இருக்கும் சூழலில் சாதாரண நீரையோ குளிர்ந்த நீரையோ குடித்தால் அதைச் சிலரது உடல் ஏற்றுக்கொள்ளாமல் வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டுக்குள் நுழைந்ததும் சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்தி அதன்பிறகு நீர் அருந்துவது நல்லது. அது சாதாரண நீராக இருந்தாலும் சரி, மண்பானை குடிநீராக இருந்தாலும் சரி நின்று நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

கோடையில் செரிமானக்கோளாறுகளை மனதில்கொண்டு ஃபாஸ்ட்புட் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்ல சூடான, காரம் நிறைந்த மசாலா உணவுகளை உண்ணாமலிருப்பதும் நல்லது. பரோட்டா, சிக்கன் குருமா, சிக்கன் 65, இறால் மீன் குழம்பு, நண்டுக்குழம்பு எனக் காரசாரமான உணவுகளைக் கூடியமட்டும் தவிர்ப்பது நல்லது. இவை வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மொட்டை வெயிலில் சுடச்சுட காரமான உணவுகளை உண்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அது காலராவா இருக்குமோ? வேறு ஏதாவது நோயாக இருக்குமோ? என்று தேவையில்லாமல் பயப்பட வேண்டியிருக்கும். ஆகவே வெயில் காலங்களில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கோடைக் காலங்களில் தினமும் இரண்டு தடவையாவது குளிப்பது நல்லது. தண்ணீருடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குளிக்கலாம் வாரம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வருவது நல்லது.

சந்தனம்

எண்ணெய்க்குளியல் உடல்சூட்டைத் தணிப்பதோடு கழுத்து மற்றும் கை-கால் வலியைப்போக்கக்கூடியது. மேலும், உடலில் கொப்புளம், கட்டி ஏற்படுவது தடுக்கப்படுவதோடு வியர்வை நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

பகல் வேளைகளில் சந்தனக்கட்டையை உடம்பில் தேய்த்து வருவதன்மூலம் சொறி, சிரங்கு, வியர்க்குரு போன்றவற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

இரவு நேரங்களில் சந்தனம் பூசினால் குளிர்ச்சியை உண்டாக்கி ஜலதோஷம், சளித்தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எண்ணெய்க்குளியலின்போது கடலை மாவு தயிர் சேர்த்துக் குளிக்கலாம். வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு மற்றும் நுங்கு போன்றவற்றை உடம்பில் தேய்த்துக் குளிக்கலாம்.

மேலும், தொடை இடுக்குகளில் தோல் நோய் பாதித்தால் உள் ஆடைகளை நன்றாகத் துவைத்து சுடுநீர் மற்றும் கிருமிநாசினிகள் கலந்த நீரில் அலசுவது நல்லது.

கோடையில் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பாலியஸ்டர் உள்ளிட்ட ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாகப் பருத்தியால் ஆன ஆடைகள் அணியலாம்.

அழுக்கான மற்றும் வியர்வை நிறைந்த ஆடைகளை நன்றாகத் துவைத்து உடுத்துவது நல்லது. வெயிலில் செல்லும்போது குடை, தொப்பிப் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஓய்வு நேரங்களில் மரங்களின்கீழே இளைப்பாறுவதை வழக்கமாகப் பின்பற்றுங்கள்.

கேழ்வரகு - கம்பங்கூழ், வெந்தயக்களி, தர்பூசணி ஜூஸ், வெள்ளரிப்பிஞ்சு, பனை நுங்கு, பதநீர் என இயற்கை வழி சார்ந்திருந்தால் அக்னி நட்சத்திரத்தின் கோரத்தாண்டவத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement