வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (07/05/2017)

கடைசி தொடர்பு:19:14 (07/05/2017)

நிம்மதியான தூக்கம் பெற உதவும் 8 ஹெல்த்தி டிரிங்ஸ்..! #HealthDrinks

ழ்ந்த, நிம்மதியான தூக்கம்... ஆகச் சிறந்த வரம். பரபரப்பு, டென்ஷன், களைப்பு, பணிச்சுமை, கவலைகள்... என நம் அன்றாடச் சிக்கல்களை மறக்க உதவுவதில் உறக்கத்தைப்போல உற்ற நண்பன் வேறு இல்லை. குறைவான தூக்கமும் தூக்கமின்மையும் உடல் கோளாறுகளை இரு கை நீட்டி வரவேற்க எப்போதும் காத்திருப்பவை. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், கட்டுக்குள் வைத்திருக்க முடியாத வாழ்க்கை முறை இரண்டும்தான் ஆழ்ந்த தூக்கத்துக்குத் தடைபோடுபவை. ஆனால், சில ஹெல்த்தி டிரிங்க்ஸ் பருகுவதை வழக்கமாக்கிக்கொண்டால், உறக்கம் நம்வசமாவது உத்தரவாதம்.   

நிம்மதியான தூக்கம் பெற உதவும் 8 ஹெல்த்தி டிரிங்ஸ்...

தூக்கம்

* இரவு தூங்கச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக, பசும்பால் அருந்தலாம். பாலுடன் தேன், மஞ்சள் தூள் சேர்த்துப் பருகலாம். இது, நல்ல ஆழ்ந்த உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும். சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். கொழுப்பைக் குறைக்கும். சளி, இருமல் போன்றவற்றைச் சரிசெய்து, இடையூறு இல்லாத தூக்கத்துக்கு வழிசெய்யும்.

பால்

* ஸ்மூத்தீஸ் பருகலாம். பல வகையான பழங்களின் கலவையான மிக்‌ஸர் ஸ்மூத்தீஸ் அருந்துவது மிக நல்லது. பல வகையான பழங்களின் கலவை என்பதால், இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கும். செரிமானத் தன்மையை மேம்படுத்தும். மலச்சிக்கலைச் சரியாக்கும். ரத்த உற்பத்திக்கு உதவும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதயத்துடிப்பைச் சீராக்கும். 

ஸ்மூத்தீஸ்

* இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் குறைந்த அளவு தண்ணீர் பருகலாம். இளஞ்சூடான நீர் சிறப்பு. இது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும். சுவாசத்தை உடல் முழுக்கச் சீராகப் பாயச் செய்யும். சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதயத்துடிப்பைச் சீராக்கும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு உதவும். அதே நேரத்தில், அதிக அளவுத் தண்ணீர் குடிப்பது சீரான தூக்கத்துக்குத் தடை போடும். 

இளஞ்சூடான நீர்

* இஞ்சி டீ, கிரீன் டீ, மூலிகை டீ போன்றவற்றை உறக்கத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அருந்தலாம். இவை மூளையைப் புத்துணர்வு பெறச்செய்யும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பாய உதவும். பசியின்மையை உண்டாக்கும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

கிரீன் டீ

* இரவு உணவுக்குப் பின்னர், பழச்சாறுகள் பருகலாம். அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு, தக்காளி, செர்ரி, மாதுளை போன்ற பழச்சாறுகள் அருந்துவதற்கு ஏற்றவை. இவை `மெலடோனின்’ என்கிற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். மெலடோனின், தூக்கத்துக்கு உதவும் ஹார்மோன். நிம்மதியான தூக்கமும் மூளைக்குப் புத்துணர்வும் கிடைக்கும். காலைப் பொழுதைப் புத்துணர்வோடு தொடங்கச் செய்யும். 

பழச்சாறுகள்

* கசகசா, ஜாதிக்காய்த் தூள், மஞ்சள் தூள், சுக்குமல்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பசும்பாலுடன் சேர்த்துப் பருகலாம். இவை சிறந்த மலமிலக்கியாகச் செயல்படுபவை. உடனடியாகத் தூக்கத்தையும் வரவழைக்கும். சிறுநீரகம் சீராகச் செயல்பட உதவும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். சளி, கோழை போன்றவற்றை மலத்தோடு வெளியேற்றச் செய்யும். 

மஞ்சள் தூள் கலந்த பால்

* சாமந்திப்பூ டீ (chamomile tea) குடிக்கலாம். இது, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்று எரிச்சல், வலி போன்ற வயிற்று உபாதைகள் வராமல் தடுக்கும். முதுகுவலி, மூட்டுவலியில் இருந்து காக்கும். தசைப்பிடிப்பு மற்றும் தசைவலியைச் சரிசெய்யும். கல்லீரல் செயல்பாட்டைச் சீராக்கும். சீரான தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும்.

சாமந்திப்பூ டீ

* பெருஞ்சீரக டீ பருகலாம். இது, இரைப்பைச் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். பெண்களின், மாதவிடாய்க் கோளாறு சீராக உதவும்.

பெருஞ்சீரகம்

மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். பெருங்குடலைச் சுத்தம் செய்யும். உடல்பருமனைக் குறைக்கும். கொழுப்பைக் குறைத்து, இதயத்தை வலுவாக்கும்.


டிரெண்டிங் @ விகடன்