இதமான, இனிமையான குட்டித் தூக்கம்... பலன்கள், பக்கவிளைவுகள்!

முதல் நாள் இரவு 10 மணிக்குப் படுத்திருப்போம். அம்மா காலை 6 மணிக்கு எழுப்புவார். செல்லம் கொஞ்சி, திட்டி எழுப்பினாலும் எழுந்திரிக்க மனம் வராது. `இன்னும் அஞ்சு நிமிஷம்மா...’ என முனகலாக குரலை வெளியே அனுப்புவோம். 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கியிருந்தாலும், அந்த 5 நிமிடத் தூக்கம் பலருக்கும் சொர்க்கம்.  சிலருக்குத் தெளிவும் திருப்தியும் கிடைப்பது இந்தக் குட்டித் தூக்கத்தில்தான். குட்டித் தூக்கம் ஏன் அவ்வளவு இதமாக, மனதுக்கு இனிமையானதாக இருக்கிறது? விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

குட்டித் தூக்கம்


சீரான தூக்கத்தின்போது, `ரெம்’ எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் (REM -Rapid Eye Movement) கனவுகள் வருகின்றன. இந்த நிலையில் நம் முழு உடலும் சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். சீரான தூக்கத்தின்போது சுழற்சி முறையில் ரெம் மாறிமாறி ஏற்படும். இந்தச் சுழற்சியில் இடையூறுகள் ஏற்படும்போது `நாப்’ (Nap) எனப்படும் குட்டித்தூக்கம் பகல் நேரங்களில் தேவைப்படுகிறது. 


இந்தக் குறைந்த நேரத் தூக்கத்தைத்தான் ஆங்கிலத்தில் `நாப் ஸ்லீப்’ (Nap sleep) என்கிறார்கள். நன்றாக உண்ட பகல் பொழுதில், வேலைக்கு நடுவே களைப்பில் எட்டிப் பார்ப்பது, மனச்சோர்வின்போது கண்களை மூடிக்கொண்டு கண் அயர்வது.... போன்ற பல தருணங்களில் இந்த குட்டித் தூக்கம் வரும்.


ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டிருப்பார்கள். ஆனால் பலரும் தூங்கி எழுந்ததும், `நான் அதிக நேரம் தூங்கினது மாதிரி இருக்கு’, `வேற ஒரு கிரகத்துக்குப் போயிட்டு வந்ததுபோல இருக்கு’, `ஆழ்ந்த தூக்கம்’, `நல்ல தூக்கம்’, `இந்தக் குட்டித் தூக்கத்துலயும் கனவு வந்துச்சு பாரேன்...’ என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம்..


சீரான தூக்கத்துக்கும் குட்டித் தூக்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

சீரான தூக்கம் 6 - 8 மணி நேரம் வரை இருக்கும். இரவில் வருவது தூக்கம் . நாப், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள், அதிக பட்சம் ஒரு மணி நேரம் இருக்கும். 10 - 20 நிமிடங்கள் வரையிலான நாப் தூக்கமே சிறந்தது.வேலைக்கு இடையே, இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குட்டித் தூக்கம் வரும். தூக்கத்தின் நேரம், உறங்கும் கால அளவு இவையெல்லாம் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். பல கார்ப்பரேட் நிறுவனங்களில் `நாப் தூக்கம்’ போட வசதி செய்துதருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பலன்கள்...

* மூளை புத்துணர்வுப் பெற உதவும்.

* வேலையைச் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் செய்ய உதவும்.

* மனச்சோர்வைப் போக்கும்.

* மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

* சிந்தனையை ஊக்குவிக்கும்.

புத்துணர்வு தரும்

பக்கவிளைவுகள்...

* இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

* ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டரை (Sleeping Disorder) ஏற்படுத்தலாம்.

* இயல்பான தூங்கும் நேரம் குறையும்.

தூக்கம்

 
யாருக்கெல்லாம் நாப் (குட்டித் தூக்கம்) வரலாம்?

* இரவு குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு.

* உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு.

* மனச்சோர்வு மிகுந்த வேலைப்பளு உள்ளவர்களுக்கு.

* இரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு.

* இரவில் கண்விழித்துப் படிப்பவர்களுக்கு.

குறிப்பு: நாப் ஸ்லீப் அனைவருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. மேலும், இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஏற்படுவது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!