வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (20/05/2017)

கடைசி தொடர்பு:17:04 (21/05/2017)

நம்ம ஊரு மல்பெர்ரி... மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!

கைக்கு எட்டும் தூரத்தில் பயன்களை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் அதற்கான மருந்தைத் தேடி அலைவது மனித குணம். அப்படி ஓர் அருமருந்து மல்பெர்ரி. கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பழம். கிராமத்தில் ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துச் சுவைத்துப் பார்ப்பது உண்டு. ஆனால், பெரியவர்களோ அதன் பயன்கள், மருத்துவக் குணம் ஆகியவற்றை அறியாமல் மல்பெர்ரியை உதாசீனப்படுத்தி வருகிறோம். இதன் வகைகள், உடலுக்கு அள்ளி அள்ளித் தரும் பயன்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம்...

மல்பெர்ரி

வகைகள்...

பார்ப்பதற்கு பிளாக்பெர்ரியைப்போல இருக்கும்; சுவையில் திராட்சையைப்போல தித்திக்கும். மல்பெர்ரிப் பழங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் விளைகின்றன. இந்தப் பழங்கள் சிவப்பு, கறுப்பு, கருநீலம் போன்ற நிறங்களில் காணப்படும். மல்பெர்ரியின் இலைகளை பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளும் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டவையே!

பயன்கள்...

சத்துகள்...

மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன. 100 கிராம் மல்பெர்ரியில் 43 கலோரிகள், 44 சதவிகிதம் வைட்டமின் சி, 14 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளன.

உடல்நலத்துக்கு உத்தரவாதம்!

இதில் ரெஸ்வெரேட்ரோல் (Resveratrol) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது இதயப் பாதுகாப்புக்கு உதவக்கூடியது. இதன் காரணமாகவே மல்பெர்ரி சீன மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் மல்பெர்ரிக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மல்பெர்ரி

ரத்தக்கட்டி, பக்கவாதம், ரத்தச்சோகை மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கும்; சீறுநீரகத்தைப் பலமாக்கும்; கல்லீரலைச் சுத்தப்படுத்தும். மல்பெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் (Flavanoids) காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கக்கூடியவை. இது, அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்களையும் வீக்கங்களையும் எளிதில் ஆற்றும் தன்மைகொண்டது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நரம்பு வளர்ச்சியைப் பலப்படுத்தும்; உணவு செரிமானத்துக்கு உதவி செய்யும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மல்பெர்ரி பழரசத்தைத் தொடர்ந்து பருகிவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண் எரிச்சல் குணமாகும்.

சருமத்துக்கு நல்லது!

மெலனின் உற்பத்தியைச் சீராக்கி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் வயதான தோற்றத்தைத் தடுத்து, உடலும் முகமும் இளமையாக காட்சிதர உதவும்.

தலைமுடி காக்கும்!

தலைமுடி ஆரோக்கியமாக, நன்கு வளர உதவும். கீமோதெரப்பி சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் தலைமுடி இழப்பைத் தடுத்து, மீண்டும் வேரிலிருந்து முடி வளரச் செய்யும். இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தலைமுடிக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளைக் குறைக்கலாம். இளநரையைத் தடுத்து, முடியின் நிறம் மங்காமல் வைத்துக்கொள்ளவும் மல்பெர்ரி உதவுகிறது.

மல்பெரி பழம்

பழங்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்

நன்கு பழுத்த பழங்களை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும். வெளிறிய நிறமுள்ள பழங்களைச் சாப்பிடக் கூடாது. காற்றுப் புகாதபடி மூன்று நாள்கள் வரை பழங்களைப் பதப்படுத்தி வைத்து பயன்படுத்தலாம்.

உணவு

மல்பெர்ரிப் பழங்களைக் கொண்டு சுவையான இனிப்பு வகைகள், பாயசம், பழக்கூட்டு, பழரசம், ஜாம், ஜெல்லி, பிஸ்கட், கேக் வகைகள், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவு வகைகளைச் செய்தும் சாப்பிடலாம். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் கிடைக்கும் பலன்களை வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற்றுத்தரும் எளிய மல்பெர்ரியைத் தொடர்ந்து சாப்பிடுவோம்... ஆரோக்கியம் காப்போம்!

படம்: சங்கீதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க