வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (31/05/2017)

கடைசி தொடர்பு:11:08 (31/05/2017)

உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு தினப் பகிர்வு

புகை நமக்குப் பகை, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குத் தீங்கானது... பீடி, சிகரெட் அட்டைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய வாசகங்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளான எத்தனைபேரை மனம் மாறச் செய்திருக்கும். இது... சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இத்தகைய சூழலில், உலக சுகாதார அமைப்பால் இன்று (மே 31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படும் சூழலில் அதுகுறித்து பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்களாம்.

புகையிலை என்ன செய்யும்?

1) புகையிலையைச் சுவாசிப்பதால், அதனுள்ளே இருக்கும் நிகோட்டின், உடலுக்குள் செல்கிறது. ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யக்கூடிய நுரையீரலில் நிகோட்டின் கலந்து ரத்தத்தை மாசுபடுத்துகிறது. அது நுரையீரல் புற்றுநோய்க்கும், ரத்தப் புற்றுநோய்க்கும் வழிவகை செய்கிறது.

2) புகையிலையில் இருக்கும் நிகோட்டின், ஒருவரது டி.என்.ஏ-வில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. அந்த வகையில், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்பு, கண் தெரியாமல் போவது போன்ற தீராத பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படலாம்.

மூச்சுக்குழாய் பாதிப்பு ஏற்படும்

3) புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு, ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அழித்துவிடுகிறது. ஆக்சிஜன் உள்ளிழுக்க உதவியாக இருக்கும் ஹீமோகுளோபின் பாதிப்படைவதால், மூச்சுவிடுவதில் சிரமம் வருகிறது. இது, மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற இதயக்கோளாறுகளுக்கு வழிவகை செய்யும்.

4) புகைபிடிப்பது, நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும். செயற்கையாகத் தூண்டப்படும் நரம்பு மண்டலம், மிகவும் அதிக சக்தி பெற்றிருக்கும். நாளடைவில், புகைபிடிக்காமல் இருக்கும்போது, நரம்பு மண்டலம் மந்தமாகச் செயல்படுவதுபோலத் தோன்றும். இதன் கடைசி கட்டமாக, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

5) செகண்ட்-ஹேண்ட்-ஸ்மோக்கிங்க் (SECOND HAND SMOKING) மிகவும் ஆபத்தானது. அதாவது, ஒருவர் புகைபிடித்து வெளிவிடும் புகையை மற்றொருவர் உள்ளிழுப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுவர். இது, பெண்களது இனப்பெருக்க உற்பத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2017-ன் நோக்கம்!

என்னதான் எல்லா பாதிப்புகளும் தெரிந்திருந்தாலும், புகைப் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. 1987-ல் தொடங்கப்பட்ட இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை, ஆண்டுதோறும் ஏதாவதொரு 'தீம்' கொண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. 2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், Tobacco - a threat to development (புகையிலை வளர்ச்சிக்கு ஓர் அச்சுறுத்தல்) என்பதே அதன் தீம். இந்த வருடத்தைப் பொறுத்தவரையில், இவர்களது முக்கிய நோக்கம் புகையிலையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதைத் தடுக்கும் நோக்கில் செயல்படுவதேயாகும்.

புகைப்பழக்கம்

வெளிவரலாமே!!!

புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள், அதிலிருந்து வெளிவர முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் நீங்கள் தினமும் புகைபிடிக்கச் செல்லும் இடத்தையும், உடன் புகைபிடிக்கும் மனிதர்களையும் தவிர்ப்பது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது, தேவையான அளவு தூங்குவது, குடும்பத்தினரோடு நேரம் செலவிடுவது போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். அலுவலகத்தில் வேலை இல்லாத நேரத்தில்தான் சிகரெட் பழக்கத்தில் ஈடுபடுவேன் என்பவர்கள், எப்போதும் தங்களை ஏதாவது ஒரு விஷயத்துக்குள் நுழைத்துக்கொண்டே இருக்கலாம். சிலரால் தங்களது புகைப் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருக்கலாம். அவர்கள், மருத்துவரை அணுகி மருத்துவ ரீதியாக அதிலிருந்து வெளிவர முன்வரலாம். ஒருவர் புகைபிடிப்பது அவரை மட்டுமன்றி அருகிலிருப்பவருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொது வெளிகளில் புகைபிடிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம்

இத்தனைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதே சிறந்தது. உண்மையில் புகையிலை விற்பனையால் வரும் வருமானத்தைக் காட்டிலும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும், அதனால் வாடும் குடும்பங்களும் அதிகம்.!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்