வாய்ப்புண் முதல் இதயக்கோளாறு வரை நிவாரணம் தரும் சப்போட்டா!

ப்போட்டா... Manilkara zapota அல்லது Sapodilla (சப்போடில் லா), Sapota  என்று அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Achars Sapota. இதற்கு அமெரிக்கன்புல்லி என்ற செல்லப்பெயரும் உண்டு. சப்போட்டா என்ற ஆங்கிலப்பெயரே தமிழிலும் நடைமுறையில் இருந்தாலும் இதன் தூய தமிழ்ப்பெயர் `சீமை இலுப்பை' என்பதேயாகும். சிக்கு என்ற ஒரு பெயரும் உண்டு. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மெக்சிக்கோவில் அதிகமாக விளையும் இந்தப் பழத்தில் குண்டு சப்போட்டா, பால் சப்போட்டா என இரண்டு வகை உள்ளன.

சப்போட்டா

இது நம்மில் பலரும் விரும்பிச்சாப்பிடாத, ஆர்வத்தைத் தூண்டாத பழம் என்றபோதிலும் பலதரப்பட்ட சத்துகள் நிறைந்துள்ளன. இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு சப்போட்டா நல்ல பலன் தரக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துள்ள இதில் சர்க்கரைச் சுவை காணப்படுவதால் மில்க்‌ஷேக்குகளில் சேர்க்கப்படுகிறது.

சப்போட்டாவில் 1.0 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, 2.6 கிராம் நார்ப்பொருள், 21.4 கிராம் மாவுப்பொருள், கால்சியம் 2.1 மி.கி , பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச்சத்து 2.0 மி.கி, வைட்டமின் 6.1 மி.கி உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் இருப்பதால் தினம் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிப்பதோடு எலும்புகள் வலுவடையும்.

சப்போட்டா

வைட்டமின் ஏ நிறைந்துள்ள சப்போட்டாப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயதான காலத்தில்கூட பார்வைக் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும். டானின் என்னும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் நோய் அழற்சியை எதிர்ப்பதில் மிக தீவிரமாக செயல்படுகிறது. பொதுவாக சப்போட்டா செரிமானப்பாதையை சரிசெய்வதன்மூலம் உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மேலும், இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து குடலை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாருக்கு ஏற்படும் உடல் பலவீனம், குமட்டல், மயக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டாப் பழங்களை சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும். ஆக. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். அத்துடன் ரத்த நாளங்களை சீராக வைத்திருப்பதோடு இதயக்கோளாறுகளை சரி செய்யும் ஓர் இயற்கை நிவாரணி என்று அமெரிக்க ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இதுதவிர வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிறது. 

சப்போட்டா

டி.பி ஆரம்பநிலை பாதிப்பு உள்ளவர்கள் இதன் பழக்கூழை அருந்தி ஒரு நேந்திரன்பழம் சாப்பிட்டு வர நோய் குணமாகும். பழக்கூழுடன் சுக்கு, சித்தரத்தையை பொடியாக்கி கருப்பட்டி சேர்த்து காய்த்துக் குடித்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். மேலும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் சப்போட்டாவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சப்போட்டா பழக்கூழுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்து வந்தால் சளித்தொல்லை விலகும். இதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளக்கும். ஒரு பழம் சாப்பிட்டு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை மென்று சாப்பிட்டு வந்தால் பித்தம் விலகும்.  

தூக்கமின்றி தவிப்பவர்கள் இரவு உறங்கச்செல்வதற்குமுன் இதை பழமாகவோ, கூழாகச் செய்தோ சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அன்றைய நாள் நிம்மதியான தூக்கம் வரும்.

சப்போட்டாஜூஸ்

எலும்பும் தோலுமாக காணப்படுபவர்களுக்கு இது நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. தோல், கொட்டை நீக்கிய பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடர் சேர்த்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல் போன்ற பகுதிகளில் பூசிவிட்டு கழுவி வந்தால் பொலிவு கிடைப்பதோடு பூசினாற்போன்ற தோற்றமளிக்கும்.

ஒரு டீஸ்பூன் சப்போட்டா விதைப் பவுடருடன் ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து பொறுக்கும் சூட்டில் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதன்பிறகு கடலை மாவு, சீயக்காய் சேர்த்துக் குளிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் என இப்படி செய்து வந்தால் ஒரு மாதத்தில், கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்னையில் இருந்து தலையைக் காத்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!