ஷிஃப்ட் முறை வேலை... உடல்நலம் பராமரிக்க செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!

அண்ணாந்து பார்க்கவைக்கும் பிரமாண்ட கட்டடம்...  குளு குளு ஏசி வசதி... கைநிறையச் சம்பளம்... வீட்டு வாசலுக்கே வந்து ஏற்றிச்செல்லும் அலுவலக வாகனம்... `செமயா வாழ்றாங்கடா’ என்று ஐடி துறை பணியாளர்களைப் பற்றி பலர் கூறுவதைக் காதுபடக் கேட்டிருப்போம். அவர்களைப்போலவே வாழ்ந்து பார்க்க வேண்டும் எனப் பலரையும் ஏங்கவைக்கும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை. இப்படி, அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்வது 'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் ஐடி துறையினரின் வேலை... ஷிஃப்ட் முறையில் பணிபுரியவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டு.  

அசதி 

``பொருளாதாரரீதியாக, எங்கள் வாழ்க்கை முறையை அறிந்துவைத்திருப்பவர்கள், நாங்கள் சந்திக்கும் உடல்நல பிரச்னைகள், மனநலச் சிக்கல்கள் குறித்து பெரிதாகத் தெரிந்துவைத்திருப்பதில்லை’’ என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள். டார்க்கெட், டெட்லைன், ஷிஃப்ட், எப்போது தொடங்கும்-எப்போது முடியும் எனச் சொல்ல முடியாத நிர்ணயிக்கப்படாத வேலை நேரம்... என அவர்களின் புகார் பட்டியல் ரொம்பவே நீளம்.

இதில், நேரடியாக அவர்களின் உடல்நலத்தைப் பாதிப்பது 'ஷிஃப்ட்' எனப்படும் பணி நடைமுறை. ஷிஃப்ட் வேலையில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான தவறுகள்... சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, போதிய அளவு நீர்அருந்தாதது, முறையற்ற தூக்கம் போன்றவைதான். இந்தத் தவறுகளால், செரிமானப் பிரச்னைகள் தொடங்கி உடற்பருமன், இதய நோய்கள் வரை ஏராளமான உடல்நலக் கோளாறுகளை இவர்கள் எதிர்கொள்ளவேண்டியதாகிவிடுகிறது. இந்தத் துறை மட்டுமல்ல... 24x7 என்னும் நடைமுறையைப் பின்பற்றும் பல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலைமை இதுதான். இதில் கடுமையான, உடல் உழைப்பு செலுத்தவேண்டிய பணியில் இருப்பவர்களுக்குப் பசியிருக்கும்; களைப்பில் தூக்கமும் வரும். ஆனால், உட்கார்ந்தநிலையில் பெரிதும் உடல் உழைப்பு தேவைப்படாத வேலை செய்பவர்களுக்கு இதெல்லாம் ஏற்படாது. சாப்பாடு முதல் தூக்கம் வரை எதையும் முறையாகக் கடைப்பிடிக்க முடியாது. 

ஷிஃப்ட் வேலை

``நவீன வாழ்க்கை முறையில் ஷிஃப்ட் வேலை தவிர்க்க முடியாதாகிவிட்டதால், குறைந்தபட்சம் அதற்கேற்றாற்போல சில வாழ்க்கை டாக்டர் அருணாச்சலம்முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டியதும், சில நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். அப்போதுதான், உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம். மேலும், அவற்றைப் பற்றி விளக்குகிறார்...  
 

உடலைப் புரிந்துகொள்வோம்!

நாம் எப்படி கடிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறோமோ அதுபோல, நமது உடல் உறுப்புகளும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது. அதாவது, இரவு, பகல் எனச் சுழற்சியை ஏற்படுத்தும் சூரிய வெளிச்சத்தை மையமாகக்கொண்டு இயங்கும் உடல் கடிகாரம். ஒவ்வோர் உறுப்பும் அதன் பணிகளைச் செய்துகொள்ள, உடல் செயல்பாடுகளைத் தூண்டும் ஹார்மோன்கள் அந்தந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுரந்து உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

தூக்கம் 

இதனால், நாம் உணவு உட்கொள்ளுதல், உழைத்தல், பின் ஆற்றல் குறைந்து களைப்பில் உறங்குதல் போன்ற உடல் செயல்பாடுகள் அனைத்தும் சரியாக நடக்கும். அப்போது, உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளும் நல்ல வாழ்க்கையும் அமையும். ஆனால், பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன வாழ்க்கை முறையில் இயற்கைக்கு மாறாக வாழவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இருந்தாலும், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி ஓரளவுக்கு உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக, கண்டநேரத்தில் சாப்பிடுவது, தூங்குவது என மூளையையும் உடலையும் குழப்பக் கூடாது. 

தூக்கம்

தூக்கம், உணவு, பழக்கம்...

உடல் தன் ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்ள பெரியவர்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இரவு நேரப் பணி முடித்து வீடு திரும்பும் பணியாளர்கள், பகலில் நேரம் உள்ளது என்று ஒரே நேரத்தில் முழுமையாகத் தூங்காமல், இடையில் எழுந்து மதிய உணவு உண்பது வழக்கமாக இருக்கிறது. தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் அந்த நேரத்தில் உணவுக்குழல் ஓய்வெடுக்க வேண்டும். அந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது.

அதேபோல, இரவு நேரப் பணியின்போது, நள்ளிரவில் உணவு உண்ணவேண்டியதும், உணவு இடைவேளைகளில் டீ, காபி, மோர், ஜூஸ்... என ஏதாவது நீராகாரம் உட்கொள்ளவேண்டியதும் அவசியம். குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

வேலை 

பணியில் சிறிது ஓய்வு கிடைக்கும்போது சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது நல்லது.

பகலில் நேரம் கிடைக்கிறது என்று தூக்கத்தின் இடைப்பட்ட நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பது, நண்பர்களைப் பார்க்கச் செல்வது எனச் சிலர் நேரத்தைச் செலவிடுவார்கள். இதனால், முழுமையான தூக்கம் பாதிக்கப்பட்டு, பணியில் கவனமின்மை, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

தூங்கக்கூடிய அறையைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியம். இரைச்சல் ஏதும் இல்லாத இருளான சூழலே ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். இருளாக இருந்தால்தான் உடலில் தூக்கத்தைத் தூண்டும் `மெலட்டோனின்’ (Melatonin) என்ற ஹார்மோன் சுரக்கும். 

இரவில் லேப்டாப் பார்த்தல் 

கணினி, செல்போன், தொலைக்காட்சி போன்ற அதிகம் ஒளிவீசும் பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், கண்களும் மூளையும் உடனே ஓய்வுநிலைக்குத் திரும்பாது. இது தெரியாமால், தூக்கம் வரவில்லை என்று மீண்டும் தொலைக்காட்சிப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். எனவே, தூங்குவதற்குத் தயாராவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், இவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

24 மணி நேரத்தை, மூன்று எட்டு மணி நேரங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதில் 8 மணி நேரத்தை வேலைக்கும், 8 மணி நேரத்தைத் தூக்கத்துக்கும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 8 மணி நேரத்தை ஓய்வுக்காக, உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும். இரவு நேரப் பணி உள்ளிட்ட எந்த ஷிஃப்ட்டில் பணிபுரிந்தாலும், இதை இப்படியே பின்பற்ற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!