இருள் ருசி உணரலாமா? - `Taste of Darkness’ உணவக அனுபவம் | Have you ever eaten a meal in complete darkness?

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (06/06/2017)

கடைசி தொடர்பு:13:05 (05/08/2017)

இருள் ருசி உணரலாமா? - `Taste of Darkness’ உணவக அனுபவம்

மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஏதோ ஓர் இரவில், நிலவொளிகூட நுழைய முடியாத உங்கள் வீட்டின் இருட்டறையில், விளக்கு வெளிச்சத்தைக்கூட அனுமதிக்காமல் அன்றைய இரவு உணவை உங்களால் உண்ண முடியுமா? முடியும் என்றால், `வழக்கமாக நீங்கள் உட்கொள்ளும் கலோரியைவிட சற்றுக் குறைவாக, (ஏறத்தாழ 9% வரை) குறைவான கலோரியைத்தான் உங்களால் உட்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல்.

இருள்

நாகரிகம் வளரத் தொடங்கியதும் உணவின் மீதான விருப்பங்களும், அதன் தேவைகளும் பன்மடங்காக வளர்ந்துவிட்டன. விருந்தினர் வருகை, விசேஷ நாட்கள், திருவிழாக்கள்... என வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே ஆடம்பர உணவை உட்கொண்டுவந்தது நம் சமுதாயம். அதிலும் இன்று, உணவை போகப்பொருளாகப் பார்க்கிற அளவுக்கு சுவையூட்டிகளின் வர்த்தக வளர்ச்சி, உணவை வைத்து மனஅழுத்தத்தைப் பன்மடங்காகப் பெருக்கியுள்ளது.

அம்மா உணவகம் - இருள் ருசி அறியலாம்

ஒருபக்கம் ரேஷன் கடையில் விநியோகப் பொருட்கள் குறைவது, `அம்மா உணவக’த்தையும் `ஆந்திரா மீல்ஸை’யும் நாடுவது என மக்கள் திண்டாடினாலும், இன்னொரு பக்கம் பசிக்காக உண்ணவேண்டிய உணவு, உற்சாகத்துக்காக உண்ணும் அளவுக்கு அது என்டெர்டெய்ன்மென்ட் ஆகவும் மாறுகிறது. உணவில் அதன் ஆடம்பரம் (Luxury) என்பது மிக முக்கியமான அம்சமாகிவிட்டது. ஏன் இருக்கக் கூடாது என்று கேட்கலாம். ஆனால், அதில் உடல்நலன் பல நேரங்களில் இரண்டாம் பட்சமாகவும் பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

``ரொம்ப போர் அடிக்குது, சாப்பிட எதாவது கொடு!’’ - விடுமுறை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மனதிலும் எளிதாகக் கேட்கும் குரல் இது. உளவியல்ரீதியாக இது மிகக் குறிப்பாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு. `அவர்களின் மனஅழுத்தமும் சூழலும்தான் காரணம்’ என்கிறது.

அரிசி, சப்பாத்தி, பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர்... என `Main course' எனச் சொல்லப்படும் முதல்நிலை உணவுக்கே இன்று மிகப் பெரிய லிஸ்ட் முன்வைக்கப்படுகிறது. இன்னமும், மூன்று வகை பன்னீர்... அதில் முப்பது வகை ரெசிபிகள், ஐந்து வகை பருப்புகள்... அதில் ஐம்பது வகைச் சமையல், வறுவல், பொரியல், டெஸர்ட், ஜாம், சாஸ்... என வண்ண வண்ணமான உணவுகளின் அணிவகுப்பு எப்போதும் நம் மூளையின் செபலிக்கை (Cephalic) தூண்டியபடியே இருப்பதை நாம் இன்பமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இருள் -  நூடுல்ஸ்

இதுதான் உணவு குறித்த நம் தேவைகளை உடல் அளவில் தீர்மானித்து வருகிறது. பேஸ்ட்ரீஸ், ஐஸ்க்ரீமைப் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறுவதும் இப்படித்தான். உணவில் பல வண்ணங்கள், வாசனைகள் என பழகிப்போன மூளைக்கு இட்லி, தோசை போன்ற வழக்கமான ஆரோக்கிய உணவு கொஞ்சம் அலர்ஜியைத் தருவதாகவும் இது நம்மை மாற்றியுள்ளது . இதனால்தான் மேற்கத்திய நாடுகள், `சரிவிகத உணவு’ எனச் சொல்லும் நம் இட்லி, தோசையைக்கூட தந்தூரி வெரைட்டிகளாக உள்நுழைக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது எனலாம்.

இப்படி உணவின் வண்ணங்களையும் வடிவங்களையும் மட்டுமல்ல; தினம் உட்கொள்ளும் உணவின் அளவையும் கணக்கிட்டபடிதான் நாம் டைனிங் டேபிளிலேயே அமர்வோம். காலை உணவுக்கு, `ஒரு சாப்பாத்தி, ஒரு கப் தயிர்...’ என்றாலும், `இதுதான் என் உணவு, இதுதான் என் தட்டு, இதைத்தான் நான் உண்ணப் போகிறேன்’... எனக் கணக்கிட்டுப் பழகிவந்த நமக்கு, சூரி போட்ட பரோட்டா கணக்காக `போட்ட கோட்டையெல்லாம் அழி, மறுபடியும் புதுசா ஆரம்பிப்போம்’ என உணவின் மீது புது ஈர்ப்பை உருவாக்கும் ஒரு வழிமுறையைக் கண்டேன். அதாவது, சென்னை, இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவின், முதல் தளத்தில் சமீபத்தில் நான் பிரமித்து வியந்த `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Taste of Darkness) எனும் உணவகம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.

இருள் - வண்ணமயமான உணவுகள்

உணவகம் என்றாலே பல வண்ண விளக்குகள், கண்ணைக் கவரும் பல நிற உணவு வகைகள் எனப் பழகிப்போன நிலையில், இங்கே இருட்டில் உணவு உண்ண வேண்டும் என்பது முற்றிலும் புது முயற்சியாகத் தெரிந்தது. `இப்படி ஒரு முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா?’ என யோசிக்க வேண்டாம்! அயல் நாடுகளிலும், ஹைதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பெரிதும் விரும்பப்படும் உணவக முறைகளில் இதுவும் ஒன்று. எளிமையும் ஆச்சர்யமும் இன்னும் மிக அதிகமாக புலன் விழிப்புஉணர்வை உருவாக்கும் ஒரு முயற்சியாக சென்னையிலும் அதன் கிளை விரிந்திருப்பது சென்னையின் புதுமைக்கு இன்னொரு வரவேற்பாகத் தெரிகிறது.

 

விடுமுறை அல்லது அவுட்டிங் என்றால் நாணயத்தின் இரண்டு பக்கம்போல பெற்றோர்களும் குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாக நிற்கும் அவஸ்தையில்தான் இன்றைய பல குடும்பங்கள், அதுவும் சென்னை போன்ற பெருநகரவாசிகள் இருக்கிறார்கள். ஏனென்றால், `எது செய்தாலும் அது வாழ்க்கைக்கான உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும்’ - இது பெற்றோர்களின் சாய்ஸ். `புதுமையாகவும் த்ரில்லாகவும் இருந்தால் போதும்’ - இது பிள்ளைகளின் வாய்ஸ்!

 

த்ரில்லும் வேண்டும், அதே சமயம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கைகூட வேண்டும். சாப்பிடும்போது தட்டைப் பார்த்து சாப்பிடப் பழக்கப்படாத இந்த யங் ஜெனரேஷனுக்கு கண்ணைக் கட்டிச் சோறு போடுவதும், சென்னையின் எல்லைக்குள் இந்த உணவகம் இருப்பதும் ஒரு குடும்பக் குதூகல உணர்வுக்கு நிச்சயம் ஒரு `ஹாய்...’ சொல்லும் எனலாம்.

இருள்

இருட்டுதான் இவங்க தீம்!

தாவர உணவோ, மாமிச உணவோ அது உங்கள் சாய்ஸ். ஆனால் இருட்டில்தான் உணவு உண்ண வேண்டும் இதுதான் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ கான்செப்ட்!

`அது சரி... ஏசி, நல்ல உணவு... என இயல்பான சென்னை ஹோட்டலுக்கே பட்ஜெட் பாக்கெட்டைக் கடிக்கும். இதில், `இருட்டுதான் இவங்க தீம்’ என்றால், இவர்கள் பட்ஜெட் நம் குடும்பத்துக்கு சூட் ஆகுமா?’ என யோசித்தால், கூகுள் செய்து, அவர்களை போனில் தொடர்புகொள்ளலாம், முன்பதிவு வசதியும் இருக்கிறது.

விலை... நாலு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அதாவது ஆளுக்கு 500 ரூபாய்! இது ஒரு பீட்சா கார்னரில்கூட எளிதாக இன்று நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் தொகை என்றே தோன்றுகிறது. பகலில் இரவையும், அதே சமயம் பாதுகாப்பையும், நல்ல உணவையும் அனைத்துக்கும் மேலாக புலன் உணர்வை அறியவைக்கும் ஒரு தீம் ரெஸ்டாரென்டுக்கு இந்தத் தொகை பொருத்தமானதாகவே தெரிகிறது.

இருள்

எக்ஸ்பிரஸ் அவென்யூவின் மூன்றாவது தளத்தை அடைந்ததுமே இந்த உணவகம் பளிச்சென்று (வெளியில் மட்டும்தான்) தெரியும். மிகப் பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல், டிக்கெட்டுக்கான தொகை, உணவக விதிமுறைகள்... என எல்லாச் சந்தேகங்களும் நுழைந்தவுடன் முதலிலேயே ஓர் இளைஞரால் விளக்கப்படுகின்றன.

விலையுயர்ந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் எதுவும் உணவகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நம் பொருள்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கச் சொல்லி சாவியை நம் கையில் கொடுத்துவிடுகிறார்கள். இருக்கைக்கான முன் அனுமதி பெற்று வந்திருந்தால், காத்திருப்பு நேரம் சில நொடிகள்தான்.

கையில் மெனுகார்டு போன்ற அட்டை ஒன்றைத் தருவார்கள். அதை மெனு கார்டு என நினைத்தால் நமக்கு பல்ப் நிச்சயம். அது உணவகச் சட்ட திட்டங்களை தெளிவாக அறிவுறுத்தும் ஏடு.

இருள் உணவு

த்ரில் அனுபவமே பிரதானம்!

அறிவுறுத்தலைப் படிக்கும்போது சமாளித்துவிடலாம் என்ற தைரியம்கூட இருக்கும். ஆனால் கதவைத் திறந்து, உள்ளே அனுப்பிய நொடியில் அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என யோசிக்கும் அளவுக்கு இருட்டு நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். தீக்குச்சி வெளிச்சம்கூடக் கிடையாது. போதாத குறைக்கு, பல காலமாக `ஈவில் டெட்’ முதற்கொண்டு `காஞ்சனா’, `காஞ்சுரிங்’ வரை வெளிச்சத்தில் பார்த்துவைத்த அத்தனை பேய்களும் விதவிதமாக மனக்கண் முன்னே வந்து நிற்கும் என்பதும் ஒரு சாராரின் பதற்றமாக இருக்கும்.

அறிவியலாகப் பார்த்தால், கண்களைத் திறந்திருந்தும் ஒளியைக் காண முடியாத முதல் அனுபவத்தை நம் மூளையால் எடை போட முடியாது என்பதே உண்மை. இதனால் பயத்துக்கான அட்ரினலினை உடல் அதிகமாகவே சுரந்துகொண்டிருக்கும்.

உண்மையைச் சொல்லப் போனால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நம் புலனறிவை நாம் சோதித்துக்கொண்டிருக்கிறோம் என தைரியமாக நம்பலாம். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்பதால், உங்கள் குழந்தைக்கும் ஒரு த்ரில்லான அனுபவத்தை இது தரும். எனவே, குழந்தையுடன் அதிகம் பேசிக்கொண்டே இருக்காமல், அவர்களை சிந்திக்கவும்விடுங்கள். காரணம், `பேசினால் பயம் தெரியாது’ என்பது உணவகத்துக்குச் சென்று தப்பித்து வந்த சிலரின் அறிவுரையாகச் சொல்லப்படுகிறது.

ஆகவே, `பேச்சைக் குறை!’ என்பது த்ரில்லுக்கான மெனு கார்டில் இல்லாத நமது எக்ஸ்ட்ரா அட்வைஸ்!

என்னதான் இங்கு அட்வைஸ் செய்தாலும், `சாப்பிடத்தான் அழைத்துச் செல்கிறார்கள்’, `சாப்பிட்டதும் மீண்டும் வெளிச்சத்தை பார்க்க இயலும்’ என்ற உத்தரவாதங்கள் எல்லாம் இருளில் கிடைக்கும் அசலான புலன்களின் முரண்பாட்டால் செல்லுபடியாகாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்.

இருள் உணவு

இந்தப் பதற்றத்தில் கைகாட்டியாக... இல்லை இல்லை குரல் காட்டியாக ஒரு கணீர் குரல் உணவக இருக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வரும். எத்தனை உற்று நோக்கினாலும், உங்களால் யாரையும் பார்க்க முடியாது. நூறு சதவிகிதம் அவர் உருவம் தெரியாது என்பதால், குரலை வைத்து, பெண் என உணர்ந்துகொள்ளலாம். இனி அவர் குரலைத்தான் பின்பற்றி ஆக வேண்டும் என்பதால், செவிக்கு முதல் உணவு அங்கேயே ஈயப்படுகிறது. இப்போது உங்கள் செவி சத்தத்தை நோக்கி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும். கிச்சனில் பாத்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்தால்கூட டோரிமானை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உங்கள் குழந்தை, கைக்கடிகாரத்தின் சிறு ஒலியைக்கூட கவனிக்கத் தொடங்குவான்.

சுவர் தெரியாது, வழி தெரியாது, ஒலிவழி பயணப்படும் உங்களை, அவசியம் என்றால் மட்டுமே தொடுதல் வழி யூ டர்ன் போடவைப்பார்கள். இல்லையேல், சுவற்றைப் பிடித்துக்கொண்டு அவர் குரலைக் கேட்டுத்தான் நடந்தாக வேண்டும். இதுவரை எல்லைகளை கண்வழி பழகியிருப்பீர்கள், முதன்முறையாக தொட்டுப் பார்த்து நடக்கப் பழகுவீர்கள். இதுதான் உங்கள் முதல் தொடு பயிற்சியாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டு சுவர் மென்மையானதா? தெரியாது! இன்று, சுவரிடம்கூட பேசியிருக்கிறீர்கள் என்பது உங்களையே வியக்கவைக்கும் தொடு உணர்வின் அருமை.

இது வரை சத்தமோ, வாசனையோ முதலில் அதைக் கண்களால் ஊர்ஜிதம் செய்தே பழகிய எளிமையான மூளையின் செயல்பாட்டுக்கு இந்த வழிமுறைகள் பெரும் சவாலாகவே இருக்கும். பலருக்கும் புதிதாக முட்டிபோட்டு, தவ்வி நடக்கும் குட்டிக் குழந்தைபோல சுவற்றைக் கட்டிக்கொண்டே நகர்ந்து சென்ற பால்யம்கூட கண்முன் வரும். வேறு வழி இல்லை! இன்று நீங்கள் குழந்தைதான். காரணம், நீங்கள் இதுவரை பார்க்காத, பழகாத புது உலகம் இது.

இருள் உணவு

த்ரில் குறையக் கூடாது என்பதால், கூட்டம் கூட்டமாக அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் என்றால், அவர்களுடன் இரண்டு பேர் கொண்ட நண்பர் குழு அல்லது தம்பதிகளை அனுமதிக்கிறார்கள். இது இருக்கைகளைப் பொறுத்து சில நேரங்களில் மாறவும் செய்யலாம்.

இதில் வெளியே சொல்லப்பட்ட ஒரு ரூல், படிக்கும் போது ஈசியாக இருந்திருக்கும். உணவகம் அனுமதிக்கும் இருக்கைகளில்தான் அமரவேண்டும், இருக்கைகள் நம் தேர்வு அல்ல என்பதுதான் அது. ஆனால், உள்ளே இருட்டு உங்களை அச்சுறுத்தும்போது, இருபது வருடங்களுக்கு முன்னர் உங்கள் கைபிடித்த கணவனோ, மனைவியோ இன்றுதான் பயத்தால் மீண்டும் உங்கள் கைகளைப் பிடித்திருப்பார்கள். ஆனால் இருக்கையில் இந்த ஆறுதல்கள் எல்லாம் கிடைக்காது. தனித் தனி சீட்; வேண்டுமென்றால், குரல்வழி உறுதி செய்துகொள்ளலாம் அல்லது கை நீட்டும் தொலைவா எனத் தொட்டுத் தெரிந்துள்ளலாம். ஆனால் பயப்படும்போது, மூளை அவ்வளவாகப் பேசுவதையும் பிறரைத் தேடும் நிலையையும் அனுமதிப்பதில்லை, சுய விழிப்புஉணர்வில் திளைத்திருக்கும் என்பதையும் அங்கு நிலவும் நிசப்தம் சொல்லிவிடும்.

`ஊசி விழுந்தால்கூட சத்தம் கேட்கணும்’ என டீச்சர் சொன்னதை உங்கள் குழந்தையும், ஏன்... நீங்களும்கூட அங்கு உணர்ந்துகொள்வீர்கள். அமைதி எப்போதாவது பயமுறுத்துமா? அனுபவித்ததால், `ஆம்’ என்கிறது மனம்.

எப்படியோ இருட்டைப் பழக்கி, இருக்கைக்குள் அமர்த்திவிட்டாலும், உங்கள் பயம் உங்களுக்கு முன் அவர்களால் யூகிப்பட்டது என்பதால் உங்களை ஆசுவாசப்படுத்தி சானிடைசர், தண்ணீர், சாப்பாடு, டிஷ்யூஸ் என வரிசையாக தன் குரல்வழி தன்னுடைய இருப்பை அவ்வப்போது ஊர்ஜிதம் செய்வார். ``அம்மா வாசல்லதான் காத்திருப்பேன்’’ எனச் சொல்ல, ப்ரிகேஜிக்குள் பயந்து நுழையும் குழந்தையின் மனநிலையைத்தான் அவர்களின் இருப்பும் உணர்த்தும். இல்லையென்றால், இருட்டு நம்மை பலவீனப்படுத்தி, திணறடிக்கவும் செய்யும்.

``சானிடைசர்...’’ என்று குரல் எழுப்பி, நம் கையில் அதை ஊற்றுவார்கள்! அது எத்தனை திண்ணமான திரவம், லெமன் கிராஸா அல்லது லாவண்டரா எனத் தொடுதலும் மோப்பமும் போட்டி போட்டுக்கொண்டு நம்மைச் சிந்திக்கச் செய்யும் . இதில் கண்முன்னே தட்டு வைக்கப்பட்டிருக்கும் என்பதைத் தடவி பார்க்கலாம் அல்லது அவர்கள் உணவைத் தரும்போது தேடிக்கொண்டிருக்கலாம் .

``உணவு...’’ என்று சொல்லி, கேரியர் ஒன்றில் உணவைத் தருகிறார்கள், `என்னடா கொடுமை இது? கிண்ணத்தில் கொடுத்தாலாவது கையைவிட்டுக் குழப்பி (இருட்டுதானே என்ற ஒரு வசதி) சாப்பிட்டுக்கொள்ளலாம்; கேரியர் என்றால் பிரித்துவைக்க வேண்டும், ஒதுக்க இடம் பார்க்க வேண்டும், தேடித்தேடி உண்ண வேண்டும் என வெளிச்சத்தில் செய்யும் நொடிப்பொழுது வேலைகளை, இன்று மூளை நோட்டு போட்டு கணக்கெழுதிப் பார்க்கும்.

கேரியர் கனம் பார்த்ததும், `அட இது போதுமா?’ எனக் கேள்வி எழும். அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுங்கள். எனக்கு மட்டுமல்ல... பலருடன் பேசியவரை 99 சதவிகிதம் பேர் `சாப்பாடு ஏ1’ என்றுதான் சொன்னார்கள். மெனுவில் பெரிய வகைகளை எதிர்பார்க்காதீர்கள். காரணம், இருக்கும் நான்கைந்து வெரைட்டியை இருட்டின் பிடியில் பிரித்துமேய்வதே பெரும்பாடாக இருக்கும். இதில் தட்டுக்குள் சரியாக கை வைக்கணும், தண்ணீரையும் பிடிக்கணும் என கமலின், `பம்மல்’ பட வசனம்போல பிதற்றவேண்டிய நிலையில்தான் அப்போது நாம் இருப்போம்.

இருள் உணவு

வெஜ் என்றால், சாஃப்டான இரு ரொட்டி, சூப்பரான ஒரு சைடிஷ். கூடவே வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் கிரேவியும் வரும். நான்வெஜ் என்றால், சிக்கன் நிச்சயம். உணவு வகை எது என்றாலும் டேஸ்டுக்குக் குறை இருக்காது.

`நம்பிச் சாப்பிடுங்கள்’ எனச் சொல்கிறேன். ஆனால், `எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....’ என்பது திருவள்ளுவரின் குறள் மட்டுமல்ல, அன்று உங்களாலேயே உணரப்படும். அதாவது, `கண்களால் பார்த்து உணரப்படாத இந்த உணவு உங்கள் உடலுக்கு உகந்ததா, இல்லையா என இன்று உங்கள் மூளை தவிக்கத் தொடங்கிவிடும். வழக்கமாக அப்படித்தானே இதுவரை பழக்கியுள்ளோம். எனவே, அந்த நேர உணவைத் தேவைக்கு மேல், சுவைக்காகவோ, உற்சாகத்துக்காகவோ எக்ஸ்ட்ராவாக ஒரு துளி உணவைக்கூட உள்ளே அனுமதிக்காது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் மிகக் குறைந்த அளவு உட்கொள்ளும்போதே பசி அடங்கிவிடும் நிலையை நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த பலரும் தெரிவித்தனர். உங்கள் உண்மையான உணவுத் தேவை இவ்வளவுதானா என்பதையும் நீங்கள் முதல் சில உணவுகளை உண்ணும்போதே உணர்ந்துவிடுவீர்கள். `கொடுத்த காசுக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டாகணுமே...’ என ஈட்டிக் கடைக்காரர்போல குத்தித் தள்ளினால்தான் உணவை முழுவதுமாக முடிக்க முடியும்.

அடுத்து..? `எப்படியோ சாப்பிட்டாகிவிட்டது. ஆனால் கை கழுவ என்ன செய்வது? கடவுளே...’ எனப் பதற்றம் வரும். வெட் டிஷ்யூவும் டிரை டிஷ்யூவும் கைக்குப் பரிமாறப்பட்டுவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் உங்கள் அருகில் உள்ளவருக்கான டிஷ்யூவை நீங்கள்தான் தரவேண்டும். `நல்லா கோத்துவிடுறீங்கம்மா’ எனச் சொன்னபடி உங்கள் கையைத் தேடி பின் அவர் கை தேடி, அதற்குப் பின்னர் உடன் வந்தவர் அல்லது அருகிலிருப்பவர் கை தேடி கொடுப்பதற்குள் இருட்டிலும் கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.

இன்னமும் அதிகமாகச் சொல்லி முடித்துவிடலாம் ஆனால் இது உணர்வதற்கான தருணம் என்பதால், வார்த்தைகளாலும், கற்பனைவழியும் பார்த்துக்கொண்டிருந்த நாம், கொஞ்சம் உணர்ந்துகொள்ளவும் மிச்சம் வைப்போம்.

இயற்கை கொடுத்திருக்கும் ஐம்புலன்களில் ஒரு புலனை சட்டென நிறுத்திவைத்தால், மற்ற புலன்கள் எவ்வாறெல்லாம் உதவ முன்வரும் என்பதும், அதை எப்படி மூளைக்குப் பழக்கப்படுத்தப் போகிறோம் என்பதும் அத்தனை த்ரில்லான அனுபவம்.

` `Nyctophobia' எனும் இருட்டைக் கண்டு பயப்படும் போபியா சிலருக்கு இருந்தால், துணையுடன் செல்லுங்கள் அல்லது அது உங்கள் சாய்ஸ். பாதுகாப்பான ஓர் இடத்தில் உங்கள் சோல்மேட்டுடன் இந்தப் பயணம் இருட்டின் மீதான உங்கள் பயத்தை ஆராய்ச்சி செய்யவும் அல்லது அரிதாக விடுவிக்கவும் செய்யலாம். என்றாலும், உங்கள் மனதின் வலிமை பொறுத்து இதைக் கையாளலாம்’ என்கிறது அயல்நாட்டு ஆய்வு ஒன்று.

இருள் உலகம்

`டெலிகிராப்’ இதழின் ஆராய்ச்சியில், `கண்களைக் கட்டிக்கொண்டு இருட்டில் உண்பதால், தேவையற்ற உணவுகளையும் கலோரியையும் தவிர்க்க இயலும்’ என்கின்றனர். இதை இன்னமும் அதிகமாக அசைபோட்டால் தேவையில்லாமல் உண்ணும் உணவைக் குறைத்து, உணவை வீணாவாக்குவதை உணர்த்தும் இந்த அனுபவம், தனிமனிதச் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்களை விதைப்பதாக இதன் வாடிக்கையாளர்களால் பேசப்படுகிறது..

``படுத்தபடி டி.வி பார்க்காதே! கண்ணு போயிடும்’’ என உங்கள் குழந்தைக்கு இது வரை நீங்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் மூளைக்குச் சென்றடையாமல் மிதந்துகொண்டிருக்கலாம், ஆனால், கண்களின் ஒளி எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக நிச்சயம் இது அமையும்.

எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் கட்டாயமாக உடன் அழைத்துச் செல்லுங்கள். பார்வையற்றவர்களின் வாழ்க்கை எப்படியானது என்பதையும், சக மனிதர்களுக்கான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இது அவர்களுக்குப் பாடமாக அமையும்.

முடிப்பதற்குள் சொல்லியாகவேண்டிய இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்து அனைவருக்கும் `குரல்காட்டி’யாக இருக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்... பெயர் ஜானகி! அவருக்கு பார்வை இல்லை என்பது உணவகத்தைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியவரும். ஜானகியுடன் வழித்துணையாக இருக்கும் இன்னொரு உதவியாளர் செல்வகுமாருக்கும் பார்வை இல்லை என்பது, வழிகாட்டியாக இருக்க விழிப்புடன் இருந்தால் போதும் என்பதையும், அதற்கு அனைத்துப் புலன்களின் விழிப்புஉணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் அசைபோடச் செய்யும்.

 

`திறமை மிக்கவர்கள்’ என்ற எண்ணமெல்லாம் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புஉணர்வின் முன் மறு விசாரணைக்குள்ளாகும் என்பது திண்ணம்.

ஹோட்டல் மேனேஜர் அனந்த நாராயணனைச் சந்தித்துப் பேசினோம்... ``இது என் அங்கிளோட ஹோட்டல். சென்னை கிளை என் பொறுப்புல இருக்கு. ஹைதராபாத், பெங்களூரூலயும் கிளைகள் இருக்கு. சென்னையில் கிளை தொடங்கி ஆறு மாசங்கள்தான் ஆச்சு. ஆனா, இங்கே எங்களுக்குக் கிடைச்சிருக்கும் ரெஸ்பான்ஸ் வேற லெவல். என் மாமா ஜெர்மனிக்குப் போயிருந்தப்போ, அங்கே இருந்த `டயலாக் இன் த டார்க்’ ரெஸ்டாரன்ட் பத்திக் கேள்விப்பட்டு போய் பார்த்திருக்காங்க. ஜெர்மனியில் இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆண்ட்ரூஸின் நண்பர் ஒருவர் திடீரென ஒரு விபத்தில் தன்னுடைய கண்பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை எல்லோரும் அணுகுகிற முறை ஆண்ரூஸுக்குப் பிடிக்கவில்லை. பார்வையற்றவர்களின் மேல் இருக்கும் பொதுவான கருத்தையும், அவர்கள் மேல் காட்டும் பரிதாபத்தையும் மாத்தணும்னு அவர் யோசிச்சதோட விளைவுதான் `டயலாக் இன் த டார்க்.’அனந்த நாராயணன்

பார்வை இல்லாதவங்களோட கண்கள் எந்த அளவுக்கு இருட்டுக்குப் பழக்கப்பட்டிருக்கும், இப்படிப்பட்ட இருட்டில்கூட அவங்க தன்னம்பிக்கையோட தங்களோட வேலைகளை சக மனிதர்கள்போல எப்படிச் செய்யறாங்கனு நாம் புரிஞ்சிக்க இந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிடும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். மதியம் மற்றும் இரவு இயக்கப்படும் இந்த ரெஸ்டாரன்ட்டில் தினமும் மெனு மாற்றப்படும். இதிலிருந்து வரும் லாபம் `Ace Foundation’ எனப்படும் எங்களோட அறக்கட்டளைக்கு செல்கிறது. அதன் மூலம் பல பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கச் செய்வது, ஸ்கில் டெவலப்மென்ட், தொழில்நுட்பப் படிப்புகள் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது’’ என்கிறார் அனந்த நாராயணன்.

சாப்பிட்டு முடித்து வழியனுப்பும் முன்னர், `ஃபேஸ்புக்கில் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்’ எனச் சொல்லி அனுப்புகிறார்கள். `வெளிச்சத்தில் அனுப்புவதென்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து வெளிச்சத்தைக் காட்டுங்கள்’ என மன்றாடாத குறையாகவே வெளிவரும் அந்த நொடி... பிறந்த குழந்தைபோல மீண்டும் ஒருமுறை உங்கள் கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.

இந்தப் பயணம் உண்மையில் உங்கள் புலன்கள் குறித்த விழிப்புஉணர்வை உங்களுக்குள் விதைத்துப் போகச்செய்யும் இலக்கு. இழந்த பின் அல்ல... இருக்கும்போதே புலன்களின் அருமையை அறிய அவசியம் பார்க்கவேண்டியதில் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’-ஸும் ஒன்று!

- மதுமிதா ஸ்ரீ, எஸ்.எம்.கோமதி (மாணவ பத்திரிகையாளர்)

படங்கள்: பெ.கெசண்ரா இவான்ஞ்சிலின் (மாணவ பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்