உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு!

பயறு... இதை 'ஏழைகளின் இறைச்சி' என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... அத்தனை அற்புதமான ஓர் உணவுப் பொருள் பயறு. இதை ஏழைகளின் இறைச்சி என்று சொல்வதற்குக் காரணம், இறைச்சி உண்பதால், எவ்வளவு புரதச்சத்து கிடைக்குமோ அந்த அளவுக்கு புரதச்சத்து பயறு வகைகளை உண்ணும்போதும் நமக்குக் கிடைக்கும்.

முளைகட்டிய பயறு

பயறு வகைகள் 'லெக்யூம்' என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாள்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 - 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.படையல் சிவக்குமார்

சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக செரிமானமடையும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் 'பைரேட்ஸ்' என்ற எதிர் ஊட்டச்சத்துகள் முளைகட்டிய தானியங்களில் குறைக்கப்பட்டுவிடுவதுதான்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் என்சைம்களைவிட முளைகட்டிய தானியங்களில் அதிகமாக உள்ளன. எனினும், முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பது சுவையாக இருக்காது என்ற கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. ஆனால், “முளைகட்டிய பயறுகளைச் சுவையூட்டப்பட்டப் பயறுகளாக மாற்றி உண்ணலாம்’’ என்கிறார் இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமார்.

எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் எப்படி முளைகட்டியப் பயறுகளைச் சுவை நிறைந்த உணவாக மாற்றலாம் என்பது குறித்து அவர் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

பயறு முளைகட்டும் முறை :

* பச்சைப் பயறை நன்கு சுத்தம்செய்து அலசி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* 8 மணி நேரம் கழிந்ததும் நீரை நன்றாக வடித்து ஒரு பருத்தித் துணியால் கட்டிவைக்கவும்.

* அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.

முளைகட்டிய பச்சைப் பயறு

சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு (இனிப்பு) செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம்

* கேரட் - 2

* தேங்காய் - 1

* கரும்புச் சர்க்கரை - 100 கிராம்

* உலர் திராட்சை - 50 கிராம்

* முந்திரி - 50 கிராம்

* வெள்ளரி விதை - 50 கிராம்

* மாதுளை - 1

* ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

சுவையூட்டப்பட்ட முளைப் பயறு இனிப்பு

செய்முறை:

* கேரட்டைத் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.

* மாதுளையை முத்துக்களாக உதிர்த்துக்கொள்ளவும்.

* இப்போது முளைகட்டிய பயறை ஒரு வாயகன்ற பேசினில் வைத்து துருவிய கேரட், தேங்காய், வெள்ளரி விதை, உலர் திராட்சை, ஏலக்காய்த் தூள், கரும்புச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

* பிறகு முளைகட்டிய பயறு கலவையில் மாதுளை முத்துகளைத் தூவவும்.

இப்போது சுவையான, ஆரோக்கியமான, ஆற்றல் மிகுந்த சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு தயார் என்கிறார் படையல் சிவக்குமார். அதோடு, அதன் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி

சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு உண்பதால் ஏற்படும் பயன்கள்:

* பஞ்ச சக்திகள் நிறைந்த உணவு.

* அதிக பிராண சக்தி வாய்ந்த உணவு.

* அதிக புரதச்சத்து கொண்டது.

* வைட்டமின் பி 12 நிறைந்த உணவு.

* நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

* உடலுக்கு வலுவும் ஆற்றலும் தரவல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!