Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலச்சிக்கல், மாதவிடாய்க்கோளாறு நீக்கும், தாம்பத்ய உறவை பலப்படுத்தும் கற்றாழை!⁠⁠

கற்றாழை... `Aloe Vera' என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை... என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன.

பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

கற்றாழை

தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும் பச்சை எனப் பலவிதமாக இருந்தாலும் முதிர்ந்தவையே மருத்துவத்தன்மை நிறைந்தவை. இதில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவத்தை `மூசாம்பரம்’ என்பார்கள். இதற்கு `கரியபோளம்’, `கரியபவளம்’, `காசுக்கட்டி’ எனப் பல பெயர்கள் உள்ளன.

அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் இவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியான ஜெல்லை எடுத்து, அதைத் தண்ணீரில் ஏழு முதல் பத்து தடவை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இந்த ஜூஸை எப்படிச் செய்வதென்று அறிந்துகொள்வோம். இதன் ஜெல்லைத் தனியாக எடுத்து, அதன் கசப்புத் தன்மை போகுமளவுக்குத் தண்ணீரில் நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். தோல் நீக்கிய இஞ்சி, தேன், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் தேவையான அளவுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதனுடன் கற்றாழை ஜெல், ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் தயார்.

கற்றாழை

 சதைப்பிடிப்புள்ள 3 கற்றாழைகளின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதன் மீது படிகாரத்தூளை தூவிவைக்க வேண்டும். அப்போது சதைப்பகுதியில் இருந்து நீர் பிரிந்துவரும்.  இந்த நீருடன் வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகு சேர்த்துச் சாப்பிட்டால், சிறுநீர்க் கழிப்பதில் ஏற்படும் வலி, உடல் அரிப்பு போன்றவை சரியாகும். இதிலிருந்து எடுக்கப்பட்ட நீருடன் அதற்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டுமளவுக்குக் காய்ச்ச வேண்டும். இதை தினமும் தலையில் தடவிவந்தால், கூந்தல் நன்றாக வளர்வதுடன் நிம்மதியான தூக்கத்தையும் வரவழைக்கும்; வெப்பத்தைத் தணிக்கும்.

ஆறு டீஸ்பூன் ஜெல்லுடன் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம், தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரை கிராம் அளவுக்கு தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

கற்றாழை

மூலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து.  இதன்  சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது உப்பு, காரம் சேர்க்கக் கூடாது.

கற்றாழையின் ஜெல்லை தினமும் வெண்படைகளின்மீது பூசி வந்தால் நாளடைவில் குணமாகும்.

இட்லிப் பானையில் தண்ணீருக்குப் பதில் பால் ஊற்றி, கற்றாழை வேரை  சிறு துண்டுகளாக நறுக்கி, இட்லித்தட்டில்வைத்து வேக வைக்க வேண்டும். பிறகு அதை உலரவைத்துப் பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால், தாம்பத்ய உறவு மேம்படும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் இதன் சதையை எடுத்துத் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement