ரத்த தானம்... அவசியம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்! #WorldBloodDonorDay | Are you qualified to donate blood

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (14/06/2017)

கடைசி தொடர்பு:18:10 (14/06/2017)

ரத்த தானம்... அவசியம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்! #WorldBloodDonorDay

ம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு... ரத்தம். `நீரின்றி அமையாது உலகு' என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்லும் மெட்ரோ ரயில். ஆக, உடலின் `ஆல் இன் ஆல்’ ஆக நம் ரத்தம் இருக்கிறது. இன்று `உலக ரத்த தான தினம்.’ ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யார் செய்யலாம், யார் செய்யக் கூடாது போன்ற தகவல்களைப் பற்றி விவரிக்கிறார் ரத்தவியல் துறை அலுவலர் வனஜா.

ரத்த தானம்

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'உங்களால் என்ன செய்ய முடியும்? ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!’ (What can you do? Give blood. Give now. Give often)' என்ற இந்த ஆண்டுக்கான கருத்து முழக்கத்தோடு, ரத்த தானம் செய்வது குறித்த கேம்ப்கள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், முகாம்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் உலகம் முழுக்க நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

பரிசோதனைகள்! ரத்த தானத்துக்கு முன்னரும் பின்னரும்...

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும்.

* ரத்த தானத்துக்குப் பின்னர், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்றவை உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் மாறும்.

குருதிக் கொடை

நன்மைகள்...

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

ரத்த தானம் யாரெல்லாம், எப்போதெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது!

* 45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

* மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள் செய்யக் கூடாது.

* பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.

* மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.

* ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள்... என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.

* 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது.

* எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.

குருதிக் கொடை

ரத்த தானம் செய்யும்போது செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!

* ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. புகைப் பழக்கம் உள்ளவர்கள், புகைபிடித்து மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.

* உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து அளிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் சீரான தூக்கம் அவசியம்.

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்.

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.

* ரத்தம் கொடுக்கும்போது, இறுக்கமாக அல்லாமல் தளர்வான உடைகளை அணியலாம்.

* ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், மனஅமைதியுடன் இருக்க வேண்டும். மெல்லிய இசையை ரசிக்கலாம்.

* ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஹெல்தி ஸ்நாக்ஸ் அல்லது ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

* ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு மது அருந்தக் கூடாது. திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம்.

* ரத்தம் கொடுத்த பின்னர், எடை அதிகம் உள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக் கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்