வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (21/06/2017)

கடைசி தொடர்பு:12:17 (21/06/2017)

உங்கள் சமையலறை பாத்திரங்கள் ஆரோக்கியமானவையா!? அவசிய பராமரிப்புக் குறிப்புகள்

ப்போதெல்லாம் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது. `இதில் கலப்படம்’, `அதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அருகிவிட்டன. உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. நம் சமையல் அறையில், குறிப்பாக நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் உணவை விஷமாக்கும் பல காரணிகள் இருப்பது நம்மில் பலரும் அறியாதது. சரி... நாம் பயன்படுத்தும் சமையலறைப் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை, என்னென்ன பாதிப்புகளை நமக்கு உண்டாக்கும் எனப் பார்க்கலாமா? 

பிளாஸ்டிக் 

முன்னரெல்லாம் செப்பு, பித்தளை பாத்திரங்களை சமையலறையில் பயன்படுத்தினோம். பிறகு அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்கள் அந்த இடத்தைப் பிடித்தன. இப்போது பிளாஸ்டிக் பாத்திரங்கள் சமையலறையை ஆக்கிரமித்துக்கொண்டன. மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தும் சமையலறை பாத்திரங்கள் தொடங்கி, சாதாரண எலெக்ட்ரிக் அடுப்பில் வைத்துச் சமைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் தரமில்லாத, விலை குறைவானவை ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. தரமற்ற பிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கினால் டையாக்ஸின், ஹைட்ரஜன் குளோரைடு போன்ற நச்சுத் தன்மை கொண்ட ரசாயனங்கள் வெளியாகி, உடல்நலத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். டையாக்ஸின் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இது இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கும் தன்மைகொண்டது. பொதுவாக, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிப்பவை. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பையை புற்றுநோயை எளிதாக உருவாக்கிவிடும்.

பாத்திரங்கள்

நான்-ஸ்டிக்

எண்ணெய் ஊற்றாமல், பாத்திரத்தோடு ஒட்டாமல் சமைத்துத் தரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பலரும் பயன்படுத்துகிறோம். இவற்றின் அடிப்பகுதி முழுக்க ரசாயன பூச்சு படிந்துள்ளது. ஒவ்வொரு முறை பாத்திரம் சூடாகும்போதும் அதில் நச்சு வாயுக்கள் உருவாகி, உடலுக்கு பல உபாதைகளை உருவாக்குகின்றன. ஜீரண பிரச்னை தொடங்கி கணையம், கல்லீரல் முதலியவைகூட இதனால் பாதிக்கப்படலாம். இது மெல்ல மெல்ல உடல்நலத்தைக் கெடுத்துவிடும். பல நோய்கள் உருவாகவும் காரணமாகிவிடும்.

பீங்கான் 

பீங்கான் பொருட்கள் அழகு. ஆனால், அதில் கலந்து இருக்கும் காரீயம் ஓர் ஆட்கொல்லி. பீங்கான் பாத்திரத்தை சூடுபடுத்தினாலோ அல்லது அதில் சூடான உணவுப் பொருளைப் போட்டாலோ அதில் உள்ள காரீயம் உணவில் கலந்துவிடும். இதனால் சிறுநீரகத்தில் கல் பிரச்னை தொடங்கி, இதயநோய் வரை ஏற்பட வாய்ப்பிருக்கின்றன... கவனம்!

அலுமினியம் மற்றும் இரும்பு 

`தரமற்ற அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கப்படும் அல்லது வைக்கப்படும் உணவால் அல்சைமர் நோய் வரக்கூடும்’ என்று எச்சரிக்கிறது மருத்துவம். அதேபோல `இரும்புப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவது வலிப்பு, மறதி போன்ற நோய்களைக் கொண்டு வரும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாத்திரங்கள்

சில குறிப்புகள்...

* தரமில்லாத செயற்கை ரசாயனச் சோப்புகள் மற்றும் கரைசல்களைக் கொண்டு கழுவப்படும் பாத்திரங்கள், முறையாகச் சுத்தப்படுத்தி, துடைக்கப்படாமல் பயன்படுத்தப்படுமானால், அது செரிமானப் பிரச்னை, வாந்தி, பேதி, தலைசுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

* விரிசல்கொண்ட, துருப்பிடித்த, உடைந்து, நெளிந்துபோன பாத்திரங்கள் எதையும் பயன்படுத்தவே கூடாது. தூரத் தூக்கிப் போட்டுவிடுவது நல்லது. இவற்றைச் சமைக்கப் பயன்படுத்தினால் உணவைக் கெடுத்துவிடும்; உடல்நலத்துக்கும் நல்லதல்ல.

சமையல் பாத்திரங்கள்

* சுத்தமில்லாத பாத்திரம் பாலை திரிக்கச் செய்துவிடும். இப்படி சுத்தமில்லாத பாத்திரங்கள் நம் கண்ணுக்கே தெரியாமல் பல மோசமான விளைவுகளை நம் உடலுக்கு வழங்கிவிடும். தலைவலி தொடங்கி புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படலாம். எனவே, பாத்திரங்களில் கவனமாக இருப்போம்; நோய் வராமல் தடுப்போம்; ஆரோக்கியம் காப்போம்.