பாசிட்டிவ் எனர்ஜி தரும் மணம் மிக்க மூலிகைகள்! | Smoky herbs gives positive energy!

வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (23/06/2017)

கடைசி தொடர்பு:09:54 (23/06/2017)

பாசிட்டிவ் எனர்ஜி தரும் மணம் மிக்க மூலிகைகள்!

சீனாவின் ஃபெங் சுயி (Feng Shui) தத்துவத்தின்படி, `எங்கே பாசிட்டிவ் எனர்ஜி நிரம்பி இருக்கிறதோ, அங்கே உற்சாகமும் வளர்ச்சியும் இருக்கும்’ என்பார்கள். அதைப்போலவே பாசிட்டிவ் எனர்ஜி குறையும் இடத்தில் நெகட்டிவ் எனர்ஜி நுழைந்து, சோம்பலையும் துக்கத்தையும் அளித்துவிடும். தீமைகளை அளிக்கும் நெகட்டிவ் எனர்ஜியைத் தடுக்கவும், பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கவும் பல வழிகள் பழங்காலம் முதலே ஞானியர்களால் சொல்லப்பட்டு வந்துள்ளன. அதில் ஒன்று, மூலிகைகள் எரித்து பெறப்படும் பாசிட்டிவ் எனர்ஜி. எந்தெந்த மூலிகைகள் எரித்தால், என்னவிதமான பயன்களைப் பெறலாம் என்பதைக் காண்போம். இந்த மூலிகைகள் புதுச்சேரி ஆரோவில்லிலும், சென்னை நுங்கம்பாக்கத்திலும் கிடைக்கும்...

மூலிகைகள் கலந்த சாம்பிராணி புகை

1. சிடார் என்னும் ஒருவகை தேவதாரு வகை மரத்தின் கட்டைகள் மற்றும் அதன் எண்ணெயை எரிப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள நெகட்டிவ் எனர்ஜி மறையத் தொடங்கும். குறிப்பாக, பழைய எரிந்து போன ஆடைகள் மற்றும் அதன் நினைவுகள் போன்ற பயமூட்டும் அல்லது வெறுக்கத்தக்க, கசப்பான தீய அதிர்வுகளை முற்றிலுமாக சிடார் எரிவதன் மூலம் நீக்கலாம். புதிய பாசிட்டிவ் எனர்ஜியை பெறலாம்.

2. சில வாசனை மிக்க மரப்பிசின்களை எரிப்பதன் வழியாகவும் நம்மை உற்சாகப்படுத்தும் பாசிட்டிவ் எனெர்ஜியைப் பெறலாம். உதாரணமாக பிராங்கின்சென் மற்றும் மிர் (Frankincense and Myrrh) போன்ற மரங்களின் வாசனைமிக்க பிசின்கள் எரிந்து உங்கள் ஆழ்மனதின் ஆன்மிக உணர்வுகளைத் தூண்டச் செய்யும். மேலும் தியானம் போன்ற மனதை ஒருமிக்க செய்யும் செயல்களை தீவிரப்படுத்தி உங்களை அமைதியாக்கும். ஆனால் இந்த வகை பிசின்களை எரிக்கும்போது மிக கவனமாக எரிக்க வேண்டும். தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக எரிக்க வேண்டும்.

3. தென் அமெரிக்க நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரம் பாலோ சான்டோ. இந்த மரத்தின் நறுமணமிக்க கட்டைகளை எரிப்பதால், உங்களின் அன்பும் உற்சாகமும் அதிகம் வெளியாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களைச் சுற்றியுள்ள சோம்பல், வெறுப்பு போன்ற தீய வகை ஆற்றலும் மறையும். பாசிட்டிவ் எனர்ஜியை அதிகமாக்கி, செயல்திறனைத் தூண்டி உங்களை வெற்றியாளராக மாற்ற இந்த மரத்துண்டுகள் உதவுகின்றன.

4. திபெத்தில் சிறந்த துறவிகளால் உருவாக்கப்படும் வாசனை பத்திகள் உங்களை அமைதியாகவும், ஆழ்ந்த பக்திநிலைக்கும் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. 38 வகை அரிய ஹிமாலய மூலிகைகளைக் கொண்டு இந்த வாசனை பத்திகள் உருவாக்கப்படுவதால், இவை உங்களின் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி பாசிட்டிவ் எனர்ஜியை அதிகமாக்குகின்றன.

5. நறுமணமிக்க பொருள்களை எரிப்பதால் உருவாகும் வாசனைப்புகை உங்கள் மனதை மகிழ்விக்கிறது. உங்களின் செயல்கள் உற்சாகமாகின்றன. இதனால் சந்தனம் போன்ற கட்டைகளை எரிப்பது உங்களின் சுற்றுப்புறத்தையும் உங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சந்தனக்கட்டை

6. மிகவும் சோர்வாக, தயக்கமாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் அது நிச்சயம் உங்களைச் சுற்றியுள்ள நெகட்டிவ் எனர்ஜியால்தான் நிகழ்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம். இந்த நிலையை மாற்ற, உங்களை சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள ஜூனிபர் மரக்கட்டைகளை எரிக்கலாம். இதன் நறுமணம் உங்களை இனிமையானவர்களாக மாற்றிவிடும்.

7. உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள்தான் அதிகம் நம்மை பாதிக்கச்செய்கிறது. உறவுகளை மேம்படுத்தவும் நேசத்தை அதிகரிக்கவும் ஏர்பா சாண்டா என்ற தாவரத்தின் எண்ணெய் மற்றும் தண்டுகளை எரிக்கலாம். உங்களுக்குள் பரவி இருக்கும் வெறுப்புணர்ச்சி, பயம், விரக்தி போன்றவற்றை இந்த நறுமணம் விலக்கி, நல்ல அதிர்வுகளை உருவாக்கி, உங்களை அன்பான உறவாக மாற்றுகிறது.

8. புதிதாக ஒரு காரியத்தைத் தொடங்கப் போகிறீர்களா? அதற்குத் தடையாக சில குணங்களை உணர்கிறீர்களா? அப்படியானால் ரோஸ்மேரி செடியின் எண்ணெய் அல்லது அதன் பாகங்களை எரித்து நறுமணத்தை உணர்ந்து பாருங்கள். இந்த நறுமணம் உங்களின் கிரியேட்டிவ் எனர்ஜியைத் தூண்டி, ஊக்கத்தை அளிக்கும். தன்னம்பிக்கை அளித்து செயல்திறன் மிக்கவராகவும் மாற்றிவிடும்.

நறுமண மூலிகை

9. மக்வார்ட் இனத்தின் பல செடிகள் வாசனைப் பொருளாகப் பயன்படுகிறது. இந்தச் செடியின் வாசனை, ஓர் அலாதியான பரவசத்தை கொடுக்கக்கூடியது. இரவில் உங்கள் பெட் ரூமில் இதை எரிப்பதால், ஆழ்ந்த உறக்கமும் அதன் பின்னர் சுவாரஸியமான த்ரில்லான கனவுகளையும் தரும் என்று கூறப்படுகிறது.

10. `ஹிமாலயன் சால்ட் விளக்கு’ ஹிமாலயப் பகுதிகளில் கிடைக்கும் பாறை உப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்புகளை எரித்து வெளியாகும் அதிர்வலைகள் உங்களின் ஆழ்நிலை அமைதியை அதிகம் தூண்டும். இதனால் சந்தோஷம், நல்ல உறக்கம் போன்றவை சாத்தியமாகின்றன. வீடு, அலுவலகம் என எங்கும் இந்த வகை விளக்குகள் எரிவது நல்லது. முக்கியமாக உங்கள் படுக்கை அறையில் இது எரிவது நல்லது.

மேற்கூறிய வகை பொருள்கள் மட்டுமின்றி, உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல எனர்ஜியைத் தரும் பொருள்களை மணக்கவிடுவது நல்லது. எரியும் மெழுகுவத்தி, நறுமண ஊதுபத்திகள், நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர், புகையும் பாறை உப்புகள் ஆகிய இந்த நான்கும் உங்கள் சூழலை நல்லவிதமாக மாற்றிவிடும். கெட்ட எனர்ஜியைத் தடுத்து, வெளியேற்றி இனிமையான சூழலை உருவாக்கி, உங்களை வெற்றியாளராக்கும்.


டிரெண்டிங் @ விகடன்