இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுள் கூட்டும்... நார்ச்சத்து உணவுகள்!

இன்றைய உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் வெகுவாக மாறிவிட்டன. `நாகரிகம்’ என்ற பெயரில் வெந்தும் வேகாத உணவுகளை உண்டுவருகிறது இறைய இளைய சமுதாயம். குறிப்பாக, நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர் எந்த உணவில், என்ன சத்து உள்ளது என்பதைக்கூடப் பொருட்படுத்துவதில்லை. ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் செழித்து ஓங்கி நிற்கிறது. நாம் உண்ணும் உணவு சத்தானதா, சரிவிகிதச் சத்துள்ள உணவைத்தான் நாம் உட்கொள்கிறோமா என்ற கேள்வியை ஒவ்வொருவருமே கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். அந்த வகையில், நம் ஆரோக்கியம் காப்பதில் நார்ச்சத்துள்ள உணவுகள் எப்போதுமே முக்கிய இடம் வகிக்கின்றன. பல நோய்களைப் போக்கவும், வராமல் காக்கவும் உதவுபவை நார்ச்சத்து நிறைந்த உணவுகளே! அவை தரும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போமா?

நார்ச்சத்து உணவுகள்

எடை குறைக்க உதவும்

நார்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம். `ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்படியான உணவை உண்டுவந்தால், எடையைக் குறைக்க வேறு எந்த டயட்டையும் பின்பற்றத் தேவையில்லை’ என்கிறது ஓர் ஆய்வு. இவை நம் வயிற்றை வேகமாக நிரம்பச் செய்யும். அது, அடிக்கடி பசி எடுக்கும் உணர்வைத் தடுக்கும். நார்ச்சத்து, கொழுப்புடனும் சர்க்கரையுடனும் சேர்ந்து உணவுக்குழாயில் பயணம் செய்து, உடலில் உள்ள கலோரிகளைக் குறைத்து, உடல்நலனைப் பாதுகாக்கும்.

சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்

ஒருவர் தினமும் குறைந்த பட்சம் 25 கிராம் நார்ச்சத்தை உட்கொண்டால், சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தலாம். இது, உடலில் இன்சுலினை சீராகச் சுரக்கச்செய்து, சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ளவும் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கவும் உதவும்.

இதயம் காக்க

இதயத்தைப் பாதுகாக்கும்

தினமும் நம் உணவில் 10 கிராம் நார்ச்சத்து இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டால், இதயம் தொடர்பான நோய்களை 10 சதவிகிதம் தவிர்க்கலாம். இது, உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, இதயம் தொடர்பான பிரச்னைகளை நீக்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

புற்றுநோய்க்கு `நோ’ சொல்லலாம்!

ஒரு நாளைக்கு 10 கிராம் நார்ச்சத்து உணவில் இடம் பெற்றால், வயிற்றுப் புற்றுநோயை 10 சதவிகிதமும் மார்பகப் புற்றுநோயை 5 சதவிகிதமும் தவிர்க்கலாம். இந்தச் சத்துள்ள உணவுகளில் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வேதியல் பொருள்களும் (Phytochemical) உள்ளதால், புற்றுநோயைத் தவிர்க்கலாம்.

ஆயுள் அதிகரிக்கும்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் 19 சதவிகிதம் நார்ச்சத்து நிறைந்த தானியங்களையும், 17 சதவிகிதம் பருப்பு வகைகளையும் சேர்த்துவந்தால், பல நோய்களைத் தவிர்த்து, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளலாம். இதனால் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலுக்கு மருந்து

நார்ச்சத்து அடங்கிய உணவு, குடலுக்கு வலிமை சேர்க்கும். மலச்சிக்கலை வருமுன் காக்க இது மிகவும் முக்கியமானது. இதில் உள்ள `செல்லுலோஸ்’ (Cellulose) எனும் வேதிப் பொருள், உணவுடன் செல்லும் நீரை ஈர்த்துக்கொள்ளும். இதனால், மலம் இளகி, குடலில் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடும். நார்ச்சத்து உடலுக்குப் போதுமான அளவுக்குக் கிடைக்காதபோதுதான், மலம் இறுக்கமடைந்து மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும்.

கிருமிகளை அழிக்கும்!

இது, உணவு மண்டலத்தில் உள்ள கிருமிகளை அழித்து, குடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்குள் வரும் தீய வேதிப் பொருள்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலும், எலும்புகளையும் வலுவாக்கும்.

எந்த உணவில் எவ்வளவு நார்ச்சத்து?

(ஒரு சிறிய கப் அளவு உணவில்)

பயறு வகைகள் – 7.5 – 9 கிராம்

ராஜ்மா (அ) கிட்னி பீன்ஸ் – 8.2 கிராம்

பச்சை பட்டாணி – 6.7 கிராம்

பார்லி மற்றும் கொள்ளு – 4 கிராம்

பசலைக்கீரை – 3.5 கிராம்

அவகேடோ – 11 கிராம்

உலர்ந்த திராட்சை

 

உலர்ந்த திராட்சை – 5.4 கிராம்

அத்தி – 3.6 கிராம்

கோதுமை ரவை – 4.1 கிராம்

ஆப்பிள் – 3.5 கிராம்

ஆரஞ்சு – 3.1 கிராம்

பேரிக்காய் – 4.4 கிராம்

மஞ்சள் பூசணி – 2.7 கிராம்

நார்ச்சத்தின் நன்மைகளை உணர்வோம். அதைப் போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொண்டு நலமாக வாழ்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!