பாசிட்டிவ், நெகட்டிவ்... உணர்வுகள் நம்மை என்ன செய்யும்?

முகத்தின் அழகு, வசீகரம், பளிச் தன்மை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முகம் என்பதை ஒரு வகையில் கண்ணாடி என்றும் சொல்லலாம். நமக்கல்ல, நம்மைப் பார்க்கிறவர்களுக்கு! நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடி. கோபம், மகிழ்ச்சி, சிரிப்பு, துக்கம், எரிச்சல்... என அனைத்து உணர்வுகளையும் காட்டிக்கொடுத்துவிடும் கண்ணாடி. ஒருவர் மனதில் இருக்கும் எண்ணங்கள்கூட அவர் முகத்தில் உணர்ச்சிகளாகப் பிரதிபலிக்கும் என்பது உண்மையே. முகத்தைவைத்தே ஒருவர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதையும் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் உணர்வுகள்  பெரும் பங்கு வகிக்கின்றன. மகிழ்ச்சியான மனநிலையில் ஒருவர் இருந்தால், அவர் ஆரோக்கியமாக இருப்பார். எப்போதும் கவலையுடனே இருக்கும் ஒருவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்.

உணர்வுகள்

மனிதர்களின் உணர்வுகள் தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் Dr. ராமன்மேற்கொண்டார்கள். அதன் முடிவு சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் பிரபல `எமோஷன்’ (Emotion) பத்திரிகையிலும் பிரசுரமாகியிருக்கிறது. அந்த ஆய்வு, அதன் முடிவுகள், பொதுவாக உணர்வுகள் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அனைத்தையும் மனநல மருத்துவர் ராமன் விவரிக்கிறார் இங்கே...

நடுத்தர வயதுடைய 175 பேர்களின் வாழ்க்கையில், தினமும் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளைப் பதிவுசெய்தார்கள். 32 வகையான உணர்வுகள் பதிவுசெய்யப்பட்டன. அதில் 16 நேர்மறை (Positive) உணர்வுகளும், 16 எதிர்மறை (Negative) உணர்வுகளும் பதிவுசெய்யப்பட்டன. ஆறு மாதங்கள் கழித்து, இவர்களுடைய ரத்த மாதிரியைப் பரிசோதித்தார்கள்.

அதன் முடிவுகளை வைத்து, நேர்மறையான எண்ணங்கள் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த உணர்வுகளில் முக்கியமானது 'மகிழ்ச்சி'. அதே நேரத்தில், 'மகிழ்ச்சி' (Happiness) என்ற உணர்வு மட்டுமே நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அதைத் தாண்டி சில உணர்வுகளும் இருக்கின்றன என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவை உற்சாகம் (Excitement), பெருமை (Proud), மன தைரியம் (Courage) மற்றும் உறுதியாக இருப்பதாக உணர்தல் (strong).

இதுபோன்ற வார்த்தைகளை நாம் ஃபேஸ்புக் பதிவுகளில் அதிகமாகப் பார்த்திருப்போம். தங்களைப் பற்றிப் பதிவிடும்போது, `நான் இப்படி உணர்கிறேன்..?’ (feeling strong, feeling happy... etc) என்று பதிவிடுவார்கள்.

சிரிப்பு

இது வெறும் பதிவுகளுக்கான வார்த்தை மட்டும் அல்ல. நம் மனமும் இப்படித்தான் உணரும்.

இதுபோன்ற உணர்வுகள்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இவை நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஒரே மனநிலையில் இருப்பதைவிட பலதரப்பட்ட நேர்மறை உணர்வுகள் நம்மில் மேலோங்கும்போது உடலும் மனமும் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுவே இந்த ஆராய்ச்சியின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் உடல் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ரத்தத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். நேர்மறையான உணர்வுகள் மேலோங்கியிருப்போரின் உடலில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது.

அதேபோல் எதிர்மறையான உணர்வுகள் மேலோங்கியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது மரணம் வரை அவர்களைக் கொண்டு செல்லும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

உற்சாகம்

நேர்மறையான உணர்வுகள் தரும் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வதோ, அந்த மனநிலையிலேயே இருப்பதோ நம் கையில்தான் உள்ளது. நம் உள்ளுணர்வில் பாசிட்டிவ் உணர்வுகளில் எது மேலோங்கி இருக்கிறதோ அதைக் கண்டறிய வேண்டும். மற்ற உணர்வுகளையும் அந்த நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இதற்காக மனநல மருத்துவர்களின் உதவியை நாடுவதுகூடத் தவறில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டு, நேர்மறையான உணர்வுகளை அதிகமாக்கிக்கொள்வது நம் உடல், மனம், எதிர்காலம் அனைத்துக்கும் நல்லது. அதைத்தான் இந்த ஆராய்ச்சி தெளிவாக விளக்கியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!