Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மோமோஸ்’... தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றா... மருத்துவம் என்ன சொல்கிறது?

ண்மைக்காலத்தில் நமக்கு அறிமுகமாகி, முழுமையாக நம்மை ஆட்கொண்ட பதார்த்தங்களில் ஒன்று மோமோஸ். எந்த டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனாலும், முகப்பில் வெஜ், நான் வெஜ் எனப் பல வெரைட்டிகளில் கிடைக்கிறது. நம்ம ஊர் பூரணக் கொழுக்கட்டையைப்போல இருக்கும் இந்தப் பதார்த்தம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.  

மோமோஸ்

இப்படிப்பட்ட சூழலில் 'உடல் நலனுக்குப் பெரிதும் கேடு விளைவிக்கும் மோமோஸைத் தடைசெய்ய வேண்டும்' என்று காஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். `மோமோஸ் சைலன்ட் கில்லர்’, ‘மோமோஸ் ஸ்லோ டெத்’ போன்ற பதாகைகளைக் கைகளில் ஏந்தியபடி மக்கள் பெரும் பேரணியே நடத்தியிருக்கிறார்கள். 

உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்கு அப்படியென்ன இருக்கிறது மோமோஸில்? 

“மோமோஸில் சுவைக்காக, 'மோனோசோடியம் குளூடாமேட்' (Monosodium glutamate-MSG) என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அது, திரும்பத் திரும்பச் சாப்பிடத் தூண்டும் போதைப் பொருள்போல செயல்படக்கூடியது. அது உடம்பில் மோசமான விளைவுகளை உருவாக்கும்’’ என்கிறார்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துபவர்கள். 

மோமோஸின் பூர்வீகம் திபெத். அங்கிருந்து சீனா, ஜப்பான் வழியாக இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்குள் புகுந்து, பல்வேறு வடிவங்களில் பல்வேறு சுவைகளில் பிற மாநிலங்களுக்குள்ளும் பரவிவிட்டது. மோமோஸின் சுவைக்குக் காரணமே அதில் இருக்கும் மோனோசோடியம் குளூடாமேட்தான். 

மோனோசோடியம் குளூடாமேட்

இதை 'ஜப்பான் உப்பு' என்கிறார்கள். கிகுனே இகேடா (Kikunae Ikeda) என்ற ஜப்பானிய ரசாயனத் துறைப் பேராசிரியர் 1908-ம் ஆண்டில் இந்த உப்பைத் தயாரித்து சந்தைப்படுத்தினார். 'அறுசுவையையும் தாண்டிய ஏழாவது சுவை' என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த உப்பு, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெருவாரியான நாடுகளை ஈர்த்துவிட்டது. எல்லா உணவுகளிலும் சுவையூட்டியாக இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை, பெரு நகரங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த இந்த ரசாயனம், இப்போது கிராமப்புறங்களிலும் சரளமாகப் புழக்கத்தில் இருக்கிறது. பெட்டிக்கடைகளில் சரம் சரமாகத் தொங்கவிட்டு விற்பனை செய்கிறார்கள். வீடுகளில் அன்றாட உணவுகளில் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெருவுக்குத் தெரு விற்பனை செய்யப்படும் பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சூப், நூடுல்ஸ், பர்கர், பீட்சா, பிரெட், பிஸ்கட், சமோசா, பப்ஸ், கேக்... என எல்லாவற்றிலும் 'மோனோசோடியம் குளூடாமேட்' சேர்க்கப்படுகிறது. 

மோமோஸ்

 

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பிரபல நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 'மோனோசோடியம் குளூடாமேட் உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது’ என்று காரணம் காட்டித்தான் அந்தத் தடை விதிக்கப்பட்டது. 

உண்மையில், 'மோனோசோடியம் குளூடாமேட்' தீங்கு விளைவிக்கக்கூடியதுதானா? குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்நாதனிடம் கேட்டோம்... டாக்டர் செந்தில்நாதன்

“ஜப்பான் உணவுகள் அனைத்திலும் இந்த 'மோனோசோடியம் குளூடாமேட்' பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், இது உடலுக்குப் பொருந்தாத உப்பு. இதை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வது மிகப் பெரிய ஆபத்துக்களை உருவாக்கும். ஜீரணமின்மையில் தொடங்கி புற்றுநோய் வரை பல விளைவுகள் ஏற்படலாம். அமெரிக்காவில் இதன் பயன்பாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. சீனாவில் சில பிரதேசங்களில் இதைத் தடைசெய்துவிட்டார்கள். இந்தியாவில் எத்தனையோ சுவையூட்டிகள், வாசனைப் பொருள்கள் இருக்கின்றன. உணவின் ருசியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்துக்கும் உதவும் அது மாதிரி பொருள்களைப் பயன்படுத்தலாம். 'மோனோசோடியம் குளூடாமேட்'டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..." என்கிறார் அவர். 

ரஞ்சனி

'`மோனோசோடியம் குளூடாமேட்டுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்தலாம்?’’ ஊட்டச்சத்து நிபுணர் ரஞ்சனியிடம் கேட்டோம்.

``மோனோசோடியம் குளூடாமேட் உப்பு இயற்கையானது அல்ல. செயற்கை முறையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கக்கூடியது. செயற்கை என்று வந்துவிட்டாலே, அது உடலுக்குத் தீங்குதான். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலர், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போடுவதைப்போல, இந்த உப்பையும் உணவில் நிறைய அள்ளிக் கொட்டுகிறார்கள். இதை அதிகம் பயன்படுத்தினால், உயர் ரத்த அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சோடியம் இருப்பதால், நீர்க்கோர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். இயற்கையாகவே நம் உணவுகள் சுவை நிரம்பியவைதான். கூடுதலாக சுவை கூட்டிகள் அவசியமே இல்லை. பெருங்காயம், ஏலக்காய், கறிமசாலாப் பொருள்கள் என நம்மிடம் ஏராளமான சுவை, மணம் ஊட்டிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்..." என்கிறார் ரஞ்சனி. 

கார்த்திசெஃப் கார்விங் கார்த்தியும் மோனோசோடியம் குளூடாமேட் விபரீதம் பற்றிப் பேசுகிறார்.

“மோமோஸ் மட்டுமல்ல... இளம் தலைமுறையைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் ஃபிரைடு ரைஸ், கோபி மஞ்சூரியன் போன்றவற்றிலும் இந்த மோனோசோடியம் குளூடாமேட் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இந்த உப்பைச் சேர்த்தால், உணவை விரைவில் தயாரிக்க முடியும். எல்லாச் சுவைகளையும் இணைத்து வித்தியாசமான புதிய சுவையை உருவாக்கிவிடும். உணவகங்களில் இதை அரைத்து, பொடியாக்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் முன்னோர் செய்த மாதிரி நமக்கே உரித்தான, நம் மண்ணில் விளையும் மசாலாப் பொருள்களை அம்மியில் அரைத்துப் பயன்படுத்தினாலே மிகச் சிறந்த சுவை கிடைக்கும்’’ என்கிறார் அவர். 

உணவென்பது, பசிக்கானது மட்டுமல்ல... உடம்பின் ஆரோக்கியம் அதில்தான் அடங்கியிருக்கிறது. நாக்கின் அளவுதான் ருசி. ஆனால், இன்றைய இளம் தலைமுறை ருசிக்குத்தான் முதன்மை தருகிறது. அதன் விளைவுகள்தான் புதிய புதிய நோய்கள். மோமோஸோ, ஃபிரைடு ரைஸோ ஆரோக்கியத்துக்கு வேட்டுவைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்ப்போம். சத்தான, நம் தட்பவெப்பத்துக்கு உகந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close