அரசு மருத்துவமனைகளுக்குத் தகுதியான மருத்துவர்களை அனுமதிக்காதா நீட் தேர்வு?! | Is NEET exam impact on Government hospitals?

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (05/07/2017)

கடைசி தொடர்பு:14:37 (07/07/2017)

அரசு மருத்துவமனைகளுக்குத் தகுதியான மருத்துவர்களை அனுமதிக்காதா நீட் தேர்வு?!

ருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், வருகிற 17-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது. நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் வகையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியதை அடுத்து, `வழக்கம்போல ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடக்கும்’ என்று பெரும்பாலான மாணவர்கள் அந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தார்கள். ஆனால், அந்த மசோதாக்களைக் கிடப்பில் போட்டுவிட்டது மத்திய அரசு. 

நீட் தேர்வு

தமிழகத்தில், ப்ளஸ் டூ தேர்வில் அறிவியல் பிரிவு மாணவர்கள் சுமார் மூன்று லட்சம்பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், தமிழக அரசின் மீதிருந்த நம்பிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை. அவர்களது மருத்துவக் கனவு இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. 

‘லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்தது ஒரு பக்கம் இருக்க, தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனைகளையும் நீட் தேர்வு குலைத்துவிடப் போகிறது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட 37 உயர் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நாம் பெற்ற தகவல்படி, இந்த மருத்துவமனைகளில் மட்டும் 2015-16-ம் ஆண்டில் 2,82,82,153 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 

மருத்துவம் மற்றும்  ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 303 அரசு  மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இங்கு 2015-16-ம் ஆண்டில் 7,52,10,765 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். சராசரியாக, தினமும் 2,05, 494 பேர் இங்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள்.

இவை தவிர, 1,400-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. இவற்றிலும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். ஓர் ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இவற்றில் ஒரு லட்சம் சிசேரியன்களும் அடக்கம். பல குறைபாடுகள் இருந்தாலும், இந்த மருத்துவமனைகள்தான் தமிழகத்தின் ஜீவாதாரமாக இருக்கின்றன. இந்த மருத்துவமனையின் சூழலைத்தான் நீட் தேர்வு சிதைக்கப்போகிறது என்று அச்சமூட்டுகிறார்கள் மருத்துவர்கள். 

லட்சுமி நரசிம்மன்

இது குறித்து விரிவாகப் பேசுகிறார், அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்  லட்சுமி நரசிம்மன்...

“எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்கும் பெரும்பாலான  மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவே விரும்புவார்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும், அப்படி விரும்பிப் பணியாற்றுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ் போன்ற பட்ட மேற்படிப்பு அல்லது  டி.ஜி.ஓ., டி.ஜி.ஹெச் போன்ற பட்டய மேற்படிப்புகளில் தமிழக அரசு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் இருந்துவருகிறது. 

முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு  நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்திவந்தது. 90 மதிப்பெண்களுக்கான தேர்வு அது. அது தவிர, 10 மதிப்பெண்கள் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும். எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து ஒரு வருடம் ஆகியிருந்தால் ஒரு மதிப்பெண். அரசு மருத்துவருக்கு மட்டுமல்ல... தனியார் மருத்துவருக்கும் இந்த அனுபவ மதிப்பெண் வழங்கப்படுவதுண்டு. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இரண்டு மதிப்பெண். மலைப்பகுதிகள், அடிப்படை வசதியற்ற பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும்.  

இப்படியான ஒதுக்கீட்டில் முதுகலைப் படிப்புக்கான இடத்தைப் பெறும் ஒரு மருத்துவர், ‘பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனையில்தான் பணியாற்ற வேண்டும்’ என்று ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தை மீறினால், கணிசமான தொகையை நஷ்ட ஈடாக அந்த மருத்துவர் அரசுக்கு வழங்கவேண்டியிருக்கும்.  

இது மாதிரியான ஒதுக்கீடுகள், முன்னுரிமைகள், சலுகைகள்தான்  மருத்துவர்கள் அரசு மருத்துவனைக்கு பணிபுரிய வர முக்கிய ஊக்கமாக அமைகின்றன. அதனால்தான் கோடிக்கணக்கான் மக்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைக்கின்றன. அதற்கு வேட்டு வைத்துவிட்டது நீட் தேர்வு. தமிழ்நாடு அரசு நடத்திய நுழைவுத்தேர்வு, 50 சதவிகித இடஒதுக்கீடு, தமிழக அரசு வழங்கி வந்த அனுபவ மதிப்பெண்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. முதுகலை மற்றும் டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மூலமாகவே நடக்கும் என்று அறிவித்துவிட்டார்கள். இந்த ஆண்டு அப்படித்தான் நடந்தது.

உயர் டிப்ளோமா மருத்துவப் படிப்புகளில் மட்டும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். முதுகலை மருத்துவப் பட்ட படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்குப் பதிலாக, புதுவிதமான ஒரு விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். 'உள்ளடங்கிய மற்றும் செல்லக் கடினமானப் பகுதிகளில்' (Difficult and remote areas)  பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மட்டும், ஓர் ஆண்டு பணிக்காலத்துக்கு  10 சதவிகித மதிப்பெண் என அதிகப்பட்சம் 30 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்கள். 

உதாரணத்துக்கு, 1,500 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில், ‘உள்ளடங்கிய மற்றும் செல்லக் கடினமானப் பகுதி'களில் பணியாற்றும் ஓர் அரசு மருத்துவர் 800 மதிப்பெண்கள் எடுக்கிறார். அவர் ஓர் ஆண்டு பணி அனுபவம் உள்ளவராக இருந்தால் 80 மதிப்பெண்கள் தரப்படும். ஆக 880 மதிப்பெண்கள். இரண்டாண்டுகள் என்றால், 160 மதிப்பெண்கள் தரப்படும். மூன்று ஆண்டுகள் என்றால், 240 மதிப்பெண்கள்.

இதில் என்ன பிரச்னை என்றால், எது 'உள்ளடங்கிய மற்றும் செல்லக் கடினமானப் பகுதி'  (Difficult and remote areas) என்று தீர்மானிப்பது மட்டும்தான் மாநில அரசின் வேலை. வேறு எதிலும் தலையிட முடியாது. அப்படி தீர்மானிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை உருவாக்கிவைத்திருக்கிறது. 

தமிழகத்தில் செயல்படும் 1,400-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 303 அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மையங்களை மட்டும் 'உள்ளடங்கிய மற்றும் செல்லக் கடினமானப் பகுதி' என்று அறிவித்தால் அந்த மையங்களை மட்டுமே நாடி மருத்துவர்கள் செல்வார்கள். பிற மையங்களுக்கு தகுதி வாய்ந்த மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்தச் சூழலில் தமிழக அரசு, தமிழகத்தில் மொத்தமுள்ள 1,400 ஆரம்ப சுகாதார மையங்களையும் 'உள்ளடங்கிய மற்றும் செல்லக் கடினமானப் பகுதி'  என்று அறிவித்தது. அந்த அடிப்படையில் கலந்தாய்வையும் நடத்தி முடித்துவிட்டது.

அரசு மருத்துவமனை

ஆனால், இந்தக் கலந்தாய்வை எதிர்த்து ஒரு மாணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலந்தாய்வையே ரத்து செய்துவிட்டது. இப்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. 

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படிதான் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பதில் உறுதியான பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யுமா என்பது சந்தேகமே. இந்த ஆண்டுக்காவது விலக்குக் கிடைக்குமா என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. 

உயர் படிப்புக்கான இடஒதுக்கீடு, சலுகைகளை மனதில் வைத்துத்தான், சம்பளம் குறைவாக இருந்தாலும் மருத்துவர்கள் அரசுப் பணியில் சேர்கிறார்கள். பேருந்தே செல்லாத மலை கிராமங்களில்கூட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. அங்கே தங்கி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒதுக்கீடுகளோ, சலுகைகளோ போதுமான அளவுக்கு இல்லாவிட்டால், யாரும் அரசு மருத்துவமனைகளுக்கு பணியாற்றச் செல்ல மாட்டார்கள். அதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்...’’ என்கிறார்  டாக்டர் லட்சுமி நரசிம்மன். 

நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் வகையில் தமிழக அரசு உருவாக்கிய சட்ட மசோதாவோடு சேர்த்து, முதுகலைப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் பழைய நடைமுறையே தொடரும் வகையில் ஒரு மசோதாவையும் உருவாக்கி ஜனாதிபதிக்கு அனுப்பியது தமிழக அரசு. அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 

ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 100 சதவிகிதத்தையும் மத்தியத் தொகுப்புக்கு வழங்கிவிட்டோம். இப்போது இளங்கலை, முதுகலைப் படிப்புகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டது. நம் மக்களின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், நம் பிள்ளைகள் மருத்துவர்களாக வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும்தான் நம் தலைவர்கள் மாவட்டத்துக்கு மாவட்டம் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிவைத்திருக்கிறார்கள். அரசு வழங்கிய சலுகைகள், ஒதுக்கீடுகள் மூலமாகத்தான் போதுமான மருத்துவர்களும், மருத்துவப் பேராசிரியர்களும் நமக்குக் கிடைத்தார்கள்.  தமிழக மக்கள் தரும் வரிப்பணத்தில்தான் இந்தக் கல்லூரிகள் இயங்குகின்றன. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது தமிழக அரசுதான். அதைப் பறிக்க முயற்சிப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பது ஒரு புறம் இருக்க, அரசு மருத்துவமனையையே நம்பியிருக்கும் அப்பாவி மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதையும் உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்