Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காய்ச்சல் போக்குவது முதல் கல்லீரல் காப்பது வரை அருமருந்தாகும் துளசி!

துளசி... இதன் தாவரவியல் பெயர் Ocimum tenuiflorum. கிருஷ்ணதுளசி, ஶ்ரீதுளசி, ராமதுளசி, விஷ்ணுபிரியா, பிருந்தா, துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலங்கல் என வேறு பெயர்களும் இதற்கு உள்ளன. அதே நேரத்தில்  நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய் துளசி அல்லது கஞ்சாங்கோரை அல்லது திருத்துழாய் என்ற வகைகளும் இதில் உள்ளன.

துளசி

பெருமாள் கோயில்களில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுவதால் இதை, `தெய்வீக மூலிகை’ என்று சொல்கிறார்கள். இந்து மதத்தில் இந்தச் செடி புனிதமானதாகக் கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிக்கவும், பூஜைகளின்போது அர்ச்சனை செய்யவும் இதன் இலை பயன்படுத்தப்படுகிறது.

கோயில்களில் வழங்கப்படும் துளசி தீர்த்தத்தை வெறுமனே மதம் சார்ந்ததாக மட்டும் பார்க்கக் கூடாது. அது, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கிறது; உடலில் பிராணசக்தி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்செய்து உடலை வலுப்படுத்துகிறது. மேலும் தொடர்ந்து இந்த தீர்த்தத்தை அருந்திவந்தால், புற்றுநோய் நெருங்காது என்பது மருத்துவ உண்மை.

துளவம்

துளசி நீரை அவரவர் வீடுகளிலேயே செய்வது எளிது. சுத்தமான செப்புப் பாத்திரத்தில் கைப்பிடி அளவு துளசி இலையைப்போட்டு, சுத்தமான நீர்விட்டு 8 மணி நேரம் மூடிவைக்க வேண்டும். இதில் இருந்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீர் எடுத்துக் குடிக்கலாம். `இப்படி 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், 448 விதமான நோய்கள் குணமாகும்’ என்று சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர். இதை முந்தின நாள் மாலையில் செய்து, மறுநாள் காலையில் அருந்துவது சரியாக இருக்கும். இதேபோல் இரவில் ஊறவைத்த நீரை மறு நாள் காலை வெறும் வயிற்றில் இலையோடு சேர்த்து 48 நாள் குடித்துவர, சிறுநீரகக்கல் கரையும்.

இந்த நீரை அருந்துவதால் தோல் சுருக்கம் மறையும்; நரம்புகள் பலப்படும். பார்வைக்குறைபாடுகள் நீங்கும்; என்றும் இளமையுடன் இருக்க உதவும். வாய் துர்நாற்றத்தை நீக்கி, சொறி சிரங்குகளை குணமாக்கும்; சர்க்கரைநோய் வராமல் பார்த்துக்கொள்ளும். குறிப்பாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது பலன் தரக்கூடியது.

இலையை வெறுமனே உண்பது, ஊறிய நீரை அருந்துவது என்றில்லாமல் அதன் காற்றை சுவாசித்தாலே நிறைய நன்மைகள் வந்து சேரும். மனஅழுத்தம் உள்ளவர்கள் இதன் செடி இருக்கும் பகுதியில் அமர்ந்து காற்றைச் சுவாசித்து வந்தால், நிவாரணம் பெறலாம். இலையை வெறுமனே மென்று தின்றால் வாய்ப்புண், வாய்நாற்றம் நீங்கும். வெறும் வயிற்றில் இலையை மென்று, அதன் சாற்றை உள் இறக்கினால் சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

விஷ்ணுப்பிரியா

துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து, சாறு பிழிந்து இதில் சம அளவு விளக்கெண்ணெயைக் கலந்து நன்றாகக் காய்ச்சி, ஆறியதும் பத்திரப்படுத்தவும். இதை தினமும் காலை ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டுவந்தால், பெண்களைப் பாடாகப்படுத்தும் பெரும்பாடு சரியாகும்.

மழைக்காலங்களில் துளசி இலையை தேநீர்போல காய்ச்சிக் குடித்துவந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்றவை வராது. இலைக் கஷாயம் குடித்தால், தொண்டைப்புண் சரியாகும்.

இதன் இலைச்சாற்றுடன் கற்பூரவல்லி இலைச்சாறு சேர்த்துச் சூடாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச்சளி, மூச்சுவிட முடியாமை, மூச்சுத்திணறல் சரியாகும். குறிப்பாக மார்புச்சளி வெளியேறும்.

இந்த இலைச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சம அளவு சேர்த்து தேன் கலந்து, தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டால், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

துளசி இலை, முற்றிய முருங்கை இலை இரண்டையும் சம அளவு எடுத்து 50 மி.லி சாற்றில் இரண்டு சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வேண்டும். இதை 48 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும். இதைச் சாப்பிடும்போது உப்பு, புளி, காரம் சேர்க்கக் கூடாது.

இதன் இலைச் சாற்றுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துச் சூடாக்கி தேன் கலந்து உணவுக்குப் பின்னர் உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலைகளை பிட்டவியலாக அவித்து, பிழிந்து சாறு எடுத்து, 5 மில்லி வீதம் காலை, மாலை சாப்பிட்டுவர பசி அதிகரிக்கும். மேலும் இது இதயம், கல்லீரலை பலப்படுத்தும். சளியை அகற்றும்; தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும்.

துளசி

துளசி இலைக்கதிர்களை தீயில் வாட்டி, பிழிந்த சாற்றை காலை, மாலை இரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டுவர, காது மந்தம் குணமாகும்.

துளசி நீர் அல்லது துளசிச் சாறு, துளசி டீ என பல வடிவங்களில் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் பிரச்னைகள் சரியாகும். சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறுகள், செரிமானக் கோளாறுகள் தீரும்.
 
முந்தின நாள் மாலை அல்லது இரவில் ஒரு வாளியில் இதன் இலையைப் போட்டுவைத்து, அது ஊறிய நீரில் காலையில் குளித்துவந்தால் கோடையில் ஏற்படும் வியர்வை நாற்றம் நீங்கும்; உடல் மணக்கும்.

இந்த இலையை மையாக அரைத்து, வில்வ இலைச் சாறு சேர்த்து, லேசாகச் சூடாக்கி அருந்திவந்தால் மனஅழுத்தம் நீங்கும்.

ருத்திராட்ச மாலை அணிவதைப்போலவே துளசி மணி மாலை அணிந்துவந்தால், அது உடலுக்கு ஆரோக்கியம் தரும்; தெய்விகமான சூழலையும் ஏற்படுத்தும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement