வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (06/07/2017)

கடைசி தொடர்பு:08:40 (06/07/2017)

முட்டை... தரம் அறிவது, பாதுகாப்பது எப்படி?

முட்டை!  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும்  விரும்பிச் சாப்பிடும் ஓர் உணவு. புரதச்சத்து நிறைந்துள்ள அற்புதமான ஓர் உணவு. அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்கள் கூட இதைத் தவிர்ப்பதில்லை. 

 முட்டை

முன்பெல்லாம் கோழிமுட்டை என்றால் அது நாட்டுக்கோழிதான். பெரும்பாலான வீடுகளிலும் கோழிகள் இருக்கும். அவரவர் வீட்டுத் தேவைக்கு அவரவர் வீட்டுக் கோழிகளே கொடுத்து விடும். பூப்பெய்திய பெண்களுக்கு, நாள்பட்ட நோய்களில் சிக்கி மீண்டவர்களுக்கு, திடகாத்திரமாக உடம்பை வளர்க்க விரும்புபவர்களுக்கு என எல்லோருக்குமான சத்துணவாக இருந்தது. 

குறைந்த விலையில் கிடைக்கும் ஊட்டமாக முட்டை இருப்பதால் ஏழை மக்கள் கூட  வாங்கிச் சாப்பிடும் நிலை இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் கூட குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக மதிய உணவுடன் முட்டையைச் சேர்த்தனர். தவிர்க்க முடியாத ஓர் உணவாக இன்று இது இருக்கிறது. ஆனால், முந்தைய காலங்களில் கிடைத்ததுப்போல் இன்று நாட்டுகோழி முட்டைகள் எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலை அதிகமாக இருப்பதால் பலரால் வாங்க முடிவதில்லை. 

இன்று பரவலாக பயன்பாட்டில் இருப்பவை பிராய்லர் கோழி முட்டைகள்தான். சிறிதும் பெரிதுமாக தேவையான வடிவத்தில் கோழிகளைப் பொறிக்க வைத்து விடுகிறார்கள். எது நல்லது என்று கண்டுபிடிப்பது சவாலான வேலையாக இருக்கிறது. அண்மையில் பிளாஸ்டிக் முட்டை பற்றிய செய்திகள் பரவி மக்களை பதைபதைக்க வைத்தது. இப்போது, இன்னுமொரு விபரீதம். 

பிராய்லர்

நாட்டுக்கோழி முட்டை அளவுக்கு இல்லை என்றாலும் பிராய்லர் கோழி முட்டைகளும் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தரத்தான் செய்தது. ஆனால் இன்று  நமக்கு பேரிடியாய் சில செய்திகள் வருகின்றன. 

முட்டை என்றால் வெளியே வெள்ளைக்கரு இருக்கும். உள்ளே மஞ்சள் கரு இருக்கும். ஆனால், இப்போது கடைக்கு வரும் சில முட்டைகளை அவித்துப் பார்த்தால் வெள்ளைக்கருவுக்கும் மஞ்சள் கருவுக்கும் நிற பேதமே இல்லை. இரண்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. சில முட்டைகளில் வெள்ளையும் மஞ்சளும் புள்ளிக்கோலம் போட்டது போல இருக்கின்றன. 

இதுமாதிரி முட்டைகளைச் சாப்பிடலாமா? எம்.ஷைனி லிசியா

ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் எம்.ஷைனி லிசியாவிடம் கேட்டோம். 

முட்டை மிக இன்றியமையாத ஒரு புரத உணவு. உலக சுகாதார நிறுவனம், ஒரு உணவில் எவ்வளவு புரதச்சத்து இருக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தே முடிவு செய்கிறது. புரதச்சத்துக்களை கணக்கிடுவதற்கு  மாதிரி உணவாக (Reference food) இது இருக்கின்றது. எனில் இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

இது உற்பத்தியாகி எவ்வளவு காலம் ஆகிறது, எவ்வளவு வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது, எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது, எப்படி கையாளப்படுகிறது ஆகிய காரணிகளைப் பொறுத்தே அதன் தரம் இருக்கும்.  

இதன் எடை 50  இல் இருந்து 60 கிராம் இருக்கும். உள் ஓடானது முட்டையிட்ட 15 நாள்களுக்கு மேல் சென்றுவிட்டால் கடினமாக மாறிவிடும். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. 

எந்தக் கோழிக்கு கால்சிய உணவுகள் கிடைக்காமல் இருக்கிறதோ, அந்தக் கோழி முட்டைகளின் வெளிஓடுகள் மென்மையாக இருக்கும். இதனால் உடைவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. அப்படி உடையாமல் இருக்க இதை மெழுகில் முக்கிய எடுக்கிறார்கள். அப்படி எடுப்பதால் இதன் உள் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இது கெட்டுப்போகக்கூடிய ஒரு உணவுப்பொருள்தான். அதை முதலில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

கண்டறியும் முறை

அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. 

1. பேக்கிங் செய்யப்பட்ட முட்டைகளை தேதி பார்த்து வாங்கவேண்டும்.

2. இதைத் தண்ணீரில் போட்டு மிதக்கிறதா என்று பார்க்க வேண்டும். கெட்டுப்போனது மிதக்கும். 

3. சமைத்த முட்டையில் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் அல்லது அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

    வெள்ளையாக இருந்தால் சாப்பிட வேண்டாம். சமைத்த பின்பு பச்சை நிறத்தில் இருந்தால் பிரச்னையில்லை. சாப்பிடலாம். 

4. குளிசாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கவேண்டும்.

5. இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு மேல் ஆன முட்டைகளை நிச்சயமாக பயன்படுத்தக்கூடாது.

6. கெட்டுப்போன முட்டையை உடைத்தால் வாடை வரும். அதை பயன்படுத்தாதீர்கள்.

கெட்டுப்போன முட்டைகளை உண்பதால்  ஏற்படும் பாதிப்புகள்:

பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு என ஒரு உணவு நஞ்னால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகுமோ அத்தனையும் உண்டாகும். செரிமானக் கோளாறுகள் ஏற்படும். 

அதனால் முட்டைகள் வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை பார்த்து வாங்குங்கள். எல்லாவற்றையும் விட நமது ஆரோக்கியம் முக்கியம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்