Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூப்பெய்துதல் முதல் மெனோபாஸ் வரை... பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலச் சவால்கள்!

பெண் வலிமையானவள். பல்வேறு பண்பாட்டுத் தொய்வுகளால் தந்தைவழிச் சமூகமாக இன்றைக்குக் காட்சிப்படுத்தப்பட்டாலும், தாய்வழிச் சமூகம்தான் நம் ஆதி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதற்கானக் கூறுகளை நிலை நிறுத்திக்கொள்ள இன்றளவும் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையிலேயே உடலாலும் மனதாலும் பெண்கள் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதை எதிர்கொள்ளும் பக்குவமும், சரியான நேரத்தில் எடுக்கும் தீர்மானமும்தான் பெண்களின் அடுத்தகட்ட உயரிய லட்சியத்துக்கு வழிவகுக்கும். அதற்கான முதல் கட்டமாக, பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாம் கையாளக் கற்றுக் கொண்டாலே முறையற்ற பாலின ஈர்ப்பு குறித்த வளர்பருவ தவறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

பெண்கள் பிரச்னைகள் 

இன்றைக்கும் பெண் சிசுக்கொலையை முற்றிலுமாக ஒழித்துவிட்டோமா என்றால், `நிச்சயம் இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். `பெண்ணாகப் பிறத்தல் சாபம்’ என்கிற பழைய வழக்குநிலைக்குக் காரணம், வரதட்சணை. என்றாலும், பெண் கருவில் தோன்றுவது முதல் வளர்ந்து பூப்பெய்தி, மாதவிடாய்ச் சிக்கல்களை எதிர்கொண்டு, குழந்தைப்பேறு அடைந்து, மாதவிடாய் காலம் நின்று மெனோபாஸ் தன்மைக்கான அடுத்த முதுமைநிலையில் நின்று நிதானிப்பதன் வல்லமையில் இருக்கிறது பெண் எனும் சக்தி.

பாலின உருவாக்கம் கருவிலேயே தொடங்கிவிடுகிறது. அது வளர்பருவ நிலையை அடைந்து, பாலின முதிர்ச்சி பெற்று இனப்பெருக்கத்துக்கான தகுதியை அடைந்து முழுமையடைகிறது. மிக இயல்பான ஒரு சில வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு தாய்மைக்கான பக்குவநிலையைப் பெண் அடைகிறாள். சந்ததிப் பெருக்கம் என்பது எத்தகைய வரம். அதைக் கைவரப்பெறும் ஆற்றலை இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆண், பெண் என்கிற பாலின உருவாக்கத்தில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்கின்றன. மருத்துவம் சார்ந்த விஷயங்கள் என நம்மை நாமே ஒதுக்கிவைக்க இயலாது. எப்படித்தான் உருவாகிறோம் எனத் தெரிந்துகொள்ள வேண்டாமா? இதை குரோமோசோமல் (chromosomal sex), கொனாடல் (gonadal sex - sex determination), பீனோடைபிக் (phenotypic sex- sex differentiation) என மூன்றாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

குரோமோசோமல் செக்ஸ் என்பது x மற்றும் y என வரையறுத்திருக்கிறார்கள். XX என்பது பெண்களுக்குரியது. XY என்பது ஆண்களுக்குரியது. பிறப்பில் ஆண், பெண் என்கிற உரிமைப் போராட்டம் எல்லாம் கிடையாது. தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து 23 குரோமோசோம்களும் என மொத்தம் 46 (46,xx: 46,xy) எனச் சரிநிகரில்தான் கரு உருவாகிறது. இரண்டாவதான கொனாடல் செக்ஸில் சினைப்பையின் உருவாக்கம் தொடங்குகிறது. கருவுற்று 46 நாள்களில் இதன் செயல்பாடுகள் தொடங்குகின்றன. கருவுற்ற தாயின் இரண்டாம் பருவநிலையில் (Second trimester - 3 to 6 weeks) வயிற்றில் வளரும் பெண் சிசுவின் சினைப்பையில் தோராயமாக 3 - 7 மில்லியன் ஜெர்ம் செல்ஸ் (ovum) இருக்கக்கூடும். கரு வளர்ந்து பிறக்கிறபோது 1 மில்லியனாகக் குறையும். இறுதியாக `பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில் 400 கருமுட்டைகள் மட்டுமே வெளிவரும்' என மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

மூன்றாவதான பீனோடைபிக் செக்ஸில்தான் உள் மற்றும் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் கூடவே இரண்டாம் பாலின (Secondary sex) தன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் தொடங்குகிறது பெண் என்பவளின் உடல்மொழி. பெண் இனப்பெருக்க மண்டலத்தை வழிநடத்துவது, ஒட்டுமொத்தமாக ஹார்மோன்களின் வேலைதான். எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாத பட்சத்தில், மூளையில் இருக்கக்கூடிய ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய ஹார்மோன்களின் தகவல்கள்தான் ஒரு பெண் பூப்படைதல் (Puberty), கருமுட்டை வளர்ச்சி (Follicle development), அண்ட அணு வெளியேற்றம் (Ovulation), கரு உருவாகி, கர்ப்பப்பையில் ஒட்டி வளர்வதற்கான திசு உருவாக்கம் (Endometrial lining) போன்ற பணிகள் சிறப்பாக நடந்தேறுகின்றன.

வயிற்று பிரச்னை

முதன்முறையாகப் பெண் இனப்பெருக்க உறுப்பு வழியாக வரக்கூடிய மாதவிலக்கை, `பூப்படைதல்' (Puberty or menarche) என்கின்றனர். அண்டச் சுரப்பிகள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் எனும் பெண்பால் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஹைபோதாலமஸ் எனும் சுரப்பி கொனடோட்ராபின் (Gonadotropin - GnRH) ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த GnRH, பிட்யூட்டரி சுரப்பிக்குப் பயணப்படுகிறது. அங்கிருந்து பூப்பெய்துதலை ஊக்குவிக்கக்கூடிய லியூட்டினைசிங் (LH) மற்றும் பாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) போன்றவை சுரக்கின்றன. இவைதான் கர்ப்பப்பையின் இரண்டு பக்கமும் இருக்கக்கூடிய சினைப்பைகளையும் அதில் இருக்கக்கூடிய கருமுட்டைகளையும் வளர்ச்சி அடையத் தூண்டுகின்றன. மாற்றி மாற்றி வாயில் நுழையாத ஹார்மோன்களா நம்மை ஆட்டிப் படைக்கின்றன என அங்கலாய்த்தால், வேறுவழியில்லை. ஆட்டிப்படைக்கவில்லை. பெண்மையை அழகுபடுத்துவதே இந்த ஹார்மோன்கள்தான். இதைத் தெரிந்துகொண்டால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உடலையும் மனதையும் பேணிக்காக்க முடியும்.

பூப்பெய்தும் காலம் என்பது 10 முதல் 16 வயது வரை நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் 6 வயது 7 வயது என தலைசுற்ற வைக்கிறார்கள் பெண் பிள்ளைகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஹார்மோன் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியும், பால் உணவுகளும், நொறுக்குத்தீனிகளுமே. அத்துடன் மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடிய சுற்றுச்சூழலும் முக்கியக் காரணமாக அமைகிறது.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்னதாகவே மார்பக வளர்ச்சி தொடங்கி, காம்புகளில் வலி உணர்வு தோன்றும். இப்படி உடல் தன்னை தயார்படுத்துவதுபோல், பெண் பிள்ளைகள் மனதளவில் இதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக வேண்டும். மேலும், அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மெல்லிய ரோமங்கள் வளரத் தொடங்கும். அவ்வப்போது கெண்டைக்கால் வலி ஏற்படும். இடுப்பு, கை, கால் எலும்புகள் வளர்ச்சி பெறும். உடல் எடை அதிகரித்து, உயரமாக வளரத் தொடங்குவார்கள். எண்ணெய்ப்பசை அதிகமுள்ள தோல் உடைய பெண்களுக்கு அதிகப்படியான பருக்கள் உருவாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் எதிர்ப் பாலின ஈர்ப்பு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் அச்சமும் இன்றி விளையாடித் திரிந்த சிறுமிகள் உடலில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்களால் நடுங்கிப் போகின்றனர். `நமக்கு என்னவோ ஆகிவிட்டது’ என மனதளவில் மிகப்பெரிய குழப்பமும் கோபமும் உருவாகிறது. தன்னம்பிக்கையைச் சிதைக்கிற வேலைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும், அந்த நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் ஆறுதலாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்திய சுகாதாரத்தைக் கற்றுக்கொடுப்பது அவசியம். தன் உள் உணர்வுகளை வெளியில் சொல்ல முடியாத குழந்தைகள், தனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதோ எனத் தவறாகப் புரிந்துகொண்டு உளவியல் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலை அலங்கரிக்கத்தான், `மஞ்சள் நீராட்டு விழா’ எனக் கிராமங்களில் கொண்டாடுகின்றனர். சுற்றம் சூழச் செய்யும் இந்தச் சடங்கினால் பெண் தன்னை மங்கலகரமாக உணர்கிறாள். பெண்ணாகப் பிறந்த அத்தனை பேரும் கடக்கவேண்டிய பூக்கள் நிரப்பிய பாதை இது.

இதன் தொடர்ச்சியாக மாதம் ஒருமுறை 28 அல்லது 35 நாள்கள் கொண்ட காலச் சுழற்சியாக மாதவிலக்கு நடைபெறும். ஒருசில பெண்களுக்குப் பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகள் கழித்து இச்சுழற்சி முறைப்படுத்தப்படலாம். ஒவ்வொரு சுழற்சியின்போதும் மாற்றங்கள் ஏற்பட்டு, பெண் உடல் கருத்தரிக்கத் தயாராகிறது. மாதம் ஒருமுறை நிகழும் மாதவிடாய் நிலையை நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

மெனோபாஸ் 

மாதவிடாய்நிலை (Menstrual phase)

மாதவிலக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்து, ஐந்தாவது நாள் வரை கணக்கிடப்படுகிறது. கரு வளர்வதற்கு ஏதுவான கருச் திசு (Endometrium) கர்ப்பப்பையில் வளர்ச்சி அடைகிறது. கரு பதிந்து தாய்மையடையாத நிலையில், கருத்திசு உதிரத்தோடு வெளியேறிவிடுகிறது. இதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். 10 முதல் 80 மி.லி அளவு ரத்தம் வெளியேறுகிறது. மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்டிப்புத் தன்மை சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும் நாள்களை வைத்து நிர்ணயம் ஆகிறது. வளர்பருவத்தில் தொடங்கும் சுழற்சி, ஏறக்குறைய 50 வயது வரை நடைபெறுகிறது. மாதவிடைவு நிலையை (Menopause) நெருங்குகிறபோது இச்சுழற்சி நீண்டு பின் முற்றிலுமாக நின்றுவிடும்.

பெருக்க நிலை (Follicular phase)

மாதவிடாய் முதல் நாளில் தொடங்கி 13 நாள்கள் வரை ஃபாலிக்குலர் நிலை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த முதல் 13 நாள்களில் ஹார்மோன்களின் தூண்டுதலால் ஃபாலிக்கிள் முதிர்ச்சி அடைந்து, முட்டை வெடித்து வெளியேறக் காத்திருக்கும்.

அண்ட அணு வெளியேற்ற நிலை (Ovulation phase)

மாதவிடாய் ஆரம்பித்த 14-ம் நாள் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன்களின் விளைவால், அண்டச் சுரப்பியில் முதிர்ந்த கருமுட்டையானது கர்ப்பப்பை நாளத்தின் (Fallopian tube) வழியாக அதன் ஆம்புல்லாப் பகுதியினை வந்தடையும். ஒற்றை விந்தணு துளைத்து உள்நுழையும் பட்சத்தில் இங்குதான் கருவுறுதல் நடைபெறுகிறது.

முன் மாதவிடாய் நிலை (Luteal phase)

மாதவிடாய்க் காலத்தின் 15-ம் நாளில் இருந்து 28-ம் நாள் வரை இந்த நிலையைக் குறிப்பிடலாம். ஓவுலேஷன் நிலையில் கருத்தரிப்பு நிகழவில்லையெனில், 12 முதல் 24 மணி நேரத்துக்குள் அண்டம் இறந்துவிடும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களால் கருத்திசு கர்ப்பப்பையில் இருந்து விடுபடும் தருவாயில் இருக்கும். அத்துடன் செயலிழந்த அண்டமும் உதிரத்தோடு வெளியேறக் காத்திருக்கும். அடுத்து வரும் மாதவிடாய் நிலை, அதாவது 28-ம் நாள் மாதவிலக்கு ஏற்பட்டு எண்டோமெட்ரியமும் கருவுறாத முட்டையும் வெளியேறி விடும்.

பெண்களுக்கான பிரச்னைகள்

முன் மாதவிடாய்க் காலத்தில் (Pre menstrual syndrome) ஏற்படும் சிரமங்கள்தான் பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு பெரிதாகுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும். ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும்போது ஆத்திரமும் புரோஜெஸ்ட்ரோன் அதிகரிக்கும்போது மனச்சோர்வும் ஏற்படலாம். சில நேரங்களில் தற்கொலைக்கான மனநிலைகூட உருவாகும் என்கிறார்கள். மாதவிலக்கு அடைந்தவுடன் அத்தனை அறிகுறிகளும் மறைந்து மன அமைதி பெறும்.

இது குறித்து சேலத்தைச்சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சரஸ்வதி கூறுகிறார்...

``பெண் என்பவள் பொதுவாக அமைதியானவள். கோபம் குறைவானவள். சகிப்புத் தன்மையும் பொறுமையும் நிறைந்தவள். இந்த அற்புதக் குணங்கள் இருப்பதனாலேயே பெண்ணால் ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கும் சிரமங்களைத் தாங்கி, இந்த உலகத்தை தழைக்கச்செய்ய முடிகிறது. சூழ்நிலைக் காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், அறிவியலின்படி அமைதி, ஆனந்தம், ஆத்திரம், கோபம், தாபம் ஆகிய இந்த உணர்வுகள் அனைத்தும் நமது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே. இதை ஒரு பெண்ணிடம் சரியான அளவுக்கு இருக்கச் செய்வது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள்தான். 

பருவம் எய்தும்போதும் பருவத்தின்போதும் பருவம் முடியும்போதும் இந்த ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இதனால் அடிக்கடி எரிச்சலும் அழுகையும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியோடு உள்மனதில் ஏற்படும் டாக்டர் சரஸ்வதிமாற்றங்களையும் ஒரு பெண்ணுக்கு இயற்கை அளித்திருப்பது அதன் குற்றம் அல்லாமல் வேறென்ன?’’

எனவேதான், புரிதலுக்கான முன்னெடுப்புகளைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தவேண்டியிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது, நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் காலம். இதைத்தான் ‘மெனோபாஸ்’ எனக் கூறுகிறார்கள். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால், அதை மெனோபாஸ் எனக் கருத்தில்கொள்ளலாம். 45 முதல் 55 வயதில் இவை ஏற்படலாம். இது ஒரே நாளில் ஏற்படக்கூடியது அல்ல. நீடித்த செயல்பாடு. காரணம். ஹார்மோன்கள் மாற்றமும் சினைப்பையில் உள்ள ஃபாலிக்கிள் உற்பத்திச் செயல்பாடுகள் குறைவதுமே. முதல் மாதவிலக்கை கணக்கில்கொண்டு, மெனோபாஸ் ஏற்படுவதில்லை. மாதவிலக்கு நிற்பதற்கான தன்மைகள் நான்கு வருட இடைவெளிகளுக்கு முன்னரே ஆரம்பிக்கின்றன. இதை ‘பெரிமெனோபாஸ் (Perimenopause) நிலை’ என்கிறார்கள். இச்சமயத்தில் குழந்தை பிறப்புக்கான ரசாயன மாற்றங்கள் குறைந்துவிடுகின்றன. முறையற்ற சுழற்சி. குறிப்பாக சில நேரங்களில் அதிகமாகவும் பின்னர் குறைவாகவும் உதிரப்போக்கு ஏற்படும். 30 செகண்ட்டில் இருந்து 10 நிமிடங்கள் வரை சூடான உதிரப்போக்கு உண்டாகும். இதனால் இனம் புரியாத நடுக்கம், தோல்கள் சிவப்பாதல், பதற்றத்துடன்கூடிய அதிக வியர்வை உருவாகலாம். பிறப்பு உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, சிறுநீரகச் செயல்பாட்டில் மாற்றம் போன்றவை ஏற்படும். இவை எல்லாம் மெனோபாஸ் ஆகப்போகும் பெண்கள் அத்தனைப் பேருக்கும் கண்டிப்பாக நிகழும் எனச் சொல்ல முடியாது. பரம்பரைத்தன்மை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றால் மாறுபடக்கூடும்.

மெனோபாஸ் நிலையின் பக்கவிளைவுகளுக்கும் பெண் முதுமைத் தன்மையின் நோய்க் கூறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடலில் ஏற்படக்கூடிய ரசாயன ஏற்ற இறக்கங்களும், புதிய செல்கள் உருவாகும் பலமிழப்பதும். நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, பெண்கள் பிரச்னைஒன்றன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நோய்கள் வரவும் காரணமாகின்றன. எலும்பின் கடினத்தன்மை குறைதல் (osteoporosis), இதய மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் குறிப்பாக LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகரித்தல், உடல் எடை கூடுதல், நினைவாற்றல் மங்குதல், உளச்சோர்வு போன்றவை ஏற்படலாம். பெண் இனப்பெருக்க மண்டலம் என்பது மகப்பேறு மட்டும் சார்ந்ததல்ல. சைக்யாட்ரிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவர்களையும் உள்ளடக்கியது. எந்தவிதக் கோளாறுகளும் இல்லாமல் பெண் இனப்பெருக்கச் செயல்பாடுகள் நடக்கின்றன என்றால் மகிழ்ச்சி. ஆனால், இதில் ஏதேனும் சந்தேகத்துக்குள்ளான சிறிய அறிகுறிகள் தோன்றினாலும், தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வார்த்தைகளால் மிரட்டுவதற்காக அல்ல மேற்சொன்ன அத்தனை விளக்கங்களும். இவையெல்லாம் நாம் வாழ்கிற வாழ்க்கையை எப்படி தகவமைக்கிறோம் என்பதைப் பொறுத்து மாற்றியமைக்கலாம். இயல்பாக நடக்கக்கூடிய உடல்மொழியின் அடுத்தடுத்த மாற்றங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். வளர் பருவ பெண்களின் புரிதல் மிகவும் அவசியமானது. உங்கள் பாடத் திட்டங்களில் உள்ள `பெண் இனப்பெருக்க மண்டலம்’ என்பது, தேர்வுக்கான சாய்ஸில் விடுவதற்கு அல்ல. நாம் யார் என்பதை உணர்வுபூர்வமாக என்பதோடு அறிவியல்ரீதியாகவும் உணர வேண்டும். செயற்கை உரமில்லாத இயற்கை உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகளை உட்கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த இசை, விளையாட்டு, கலைகள், இயற்கைக் காட்சிகள், சமூக சேவை என மனதைக் குதூகலமாக வைத்திருங்கள். அந்தந்த வயதுக்கான மாற்றங்களை எளிமையாகக் கையாண்டு, இந்தச் சமூகத்தை திடத்தோடு எதிர்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை, பெண்களை, தாய்மார்களை, மூதாட்டிகளை அரவணைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்களே பெண்களைக் கொண்டாடும் நிலை முதலில் வர வேண்டும். இயற்கை தரும் இத்தகையச் சவால்களை வென்று சாதிக்கும் பெண்கள் நிச்சயம் வலிமையானவர்களே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close