வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் உடல் தானம்... உறுப்பு தானம்... ஏ டூ இசட் தகவல்கள்...! #OrganDonation | The Importance of Organ Donation

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (09/07/2017)

கடைசி தொடர்பு:15:04 (09/07/2017)

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் உடல் தானம்... உறுப்பு தானம்... ஏ டூ இசட் தகவல்கள்...! #OrganDonation

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று நொடிப் பொழுதில் முடிந்து விடுகிறது வாழ்க்கை. தினமும் எவ்வளவோ குழந்தைகள் பிறக்கின்றன. எத்தனையோ பேர் இறக்கிறார்கள். எல்லாம் சிறு சிறு சம்பவங்களாக முடிந்து விடுகின்றன. எவர் பிறருடைய நலனுக்காக வாழ்கிறாரோ, மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படுகிறாரோ, ஆபத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களுக்கு எவர் உதவ முன்வருகிறாரோ... அவருடைய மரணம் அர்த்தமுள்ளதாகிறது. சரித்திரமாக பதிவாகிறது. காலம் காலமாக பலரும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். உடல் உறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனும், அவருக்குப் பின் அவ்வப்போது தங்கள் மரணத்திலும் பலருக்கு வாழ்க்கையை அளித்த பலரும் அப்படித் தான் சரித்திரத்தில் பதிவாகி இருக்கிறார்கள். 

உடல் உறுப்பு தானம்

இன்றைய நிலையில், உலகில் பல கோடி மனிதர்கள், உறுப்பு தானத்துக்காக காத்துக் கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் ரத்தம், கண்ஹிதேந்திரன் ஆகியவற்றை மட்டுமே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பொருத்தலாம் என்ற நிலை இருந்தது. இன்று மருத்துவம் பல உச்சங்களைத் தொட்டுவிட்டது. உடம்பில் இருக்கும் பெரும்பாலான உறுப்புகளை ஒருவரிடம் இருந்து எடுத்து இன்னொருவருக்குப் பொறுத்த முடியும்

மூளைச்சாவு அடைந்தவர்களுடைய சில உறுப்புகளையும், இறந்தவர்களுடைய சில உறுப்புகளையும் எடுத்து தேவை இருப்பவர்களுக்குப் பொருத்த முடியும். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்காக இறந்தவர்களின் முழு உடலையும் தானமாகத் தரலாம். இறந்தபின், எரித்தோ, புதைத்தோ நிறைவு செய்து விடப்போகிற உடலை, தேவை இருப்போருக்குத் தானமாகத் தந்து, அவரின் இறப்பை சரித்திரமாக்கலாம். 

உடல் உறுப்பு தானம் பற்றி  மேலை நாடுகளில் பெரிய அளவில் விழிப்பு உணர்வு வந்து விட்டது. இறப்புக்குப்பின் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க, 80 சதவிகிதம் பேர் உறுதி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், நம் நாட்டில், இது, 1 சதவீததுக்கும் குறைவாகவே உள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு, 10 நிமிடங்களுக்கு ஒருவர், மாற்று உறுப்பு கிடைக்காமல் உயிரிழக்கிறார். அதேநேரம், லட்சக்கணக்கான உறுப்புகள் எவருக்கும் பயனின்றி எரித்தோ, புதைத்தோ அழிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லாதது தான் . 

இந்தியாவிலேயே உடல், உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தாண்டு மட்டும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், உடல், உறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். ஆனால், தேவையோடு ஒப்பிடும்போது கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

உடல் உறுப்பு தானம்

இதுகுறித்து மிகவும் கவலையோடு பேசும், பொதுநல மருத்துவர் அருணாச்சலம், உடல் உறுப்பு தானம் பற்றி விரிவாக விளக்குகிறார்.  

” பெரும்பாலானோர் ரத்தம், கண்களை மட்டுமே தானமாகத் தரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உறுப்பு தானம் பற்றி பலருக்குத் தெரியவில்லை.  ஒருவர் இயற்கை மரணமடைந்த பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் கொடுக்கலாம். அல்லது உடல் உறுப்புகளை மட்டும் தானமாகத் தரலாம்.மருத்துவர் அருணாச்சலம்

18 வயது முதல், 60 வயது வரையிலான, ஆரோக்கியமான ஒருவர், வாழும் காலத்திலேயே சில உறுப்புகளைத் தானமாக அளிக்கலாம். வாழும் காலத்திலேயே, ’இறந்த பின் என் உடல், உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து கொள்ளலாம்.   

யார் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது?

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், எய்ட்ஸ், ஹெபடைடீஸ் போன்ற நோய்கள் இருந்தால் தானம் செய்ய முடியாது.  

உயிரோடு வாழ்பவர் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்ய முடியும்?

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை தானமாக தர முடியும்.  

உடல் உறுப்புகளில் ஒரு பகுதியை தானம் செய்கிறவர்களுக்கு பொதுவாக பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை. உதாரணமாக, இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக தரும்போது, இரண்டு உறுப்புகள் செய்யவேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்யும். அதனால், அதில், சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும், நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். அதைப்போலவே, கல்லீரல் அல்லது நுரையீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்த பின், அது தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். இதனால்,  ஆரோக்கியம் பாதிக்கப்படாது. தானம் செய்தபிறகு, இதற்கென மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்துக் கொள்ளத் தேவை இருக்காது. 

உயிரோடு இருப்பவர்கள் செய்யக்கூடிய தானம்

இயற்கை மரணமடைந்தவர்களிடம் இருந்து எதையெல்லாம் தானமாகப் பெறலாம்?

கண்விழித்திரை (cornea), இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், அதை பாதுகாக்கும் தசை நார்கள், குருத்தெலும்பு (கார்ட்டிலேஜ்), நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.

இயற்கை மரணமடைந்தவர்கள் செய்யக்கூடிய தானம்

மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து?

மூளைச்சாவடைந்தவரிடமிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறு குடல், குரல்வளை, பெண்களாக இருந்தால் கருப்பை,  கண்கள்,  காதின் நடுஎலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல்கள்,  நரம்புகள்,  தமனிகள், கைகள்,  கை மற்றும் கால் விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெறலாம். 

மூளைச்சாவு அடைந்தவர்கள்

 

அதேபோல, மரணமடைந்தவர்களின் உடலை ஆராய்ச்சிக்காக கொடுக்கலாம். எந்தவித மரணமாக இருந்தாலும், எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் திசுக்களையும் தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேருக்குத் தன் உறுப்புகளை தானமாக தர முடியும்...” என்கிறார்  அருணாச்சலம். 

பணம், சொத்துக்கள் எல்லாம் இருக்கும்வரை தான். மரணம் அடைந்தபிறகு எதுவும் கூட வரப் போவதில்லை. அவை வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் இருக்கப் போவதில்லை. நான்கு பேருக்கு வாழ்க்கை அளிக்கிற மரணம் மகத்தானது. இன்றே உடல் தானம், உறுப்பு தானதிற்கான பதிவுகளை செய்து கொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்