"ஒரே மருந்தில் 17 நோய்கள் குணமாகும்!"- வாட்ஸ் அப் தகவலை நம்பலாமா? #Alert | Alertness about WhatsApp health tips

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (09/07/2017)

கடைசி தொடர்பு:12:07 (10/07/2017)

"ஒரே மருந்தில் 17 நோய்கள் குணமாகும்!"- வாட்ஸ் அப் தகவலை நம்பலாமா? #Alert

ரே மருந்தில் 17 நோய்களுக்குத் தீர்வு... இப்படியொரு வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அந்த மருந்தை எப்படி செய்வது என்றும் செயல்முறை விளக்கமும் தருகிறார்கள். 

வாட்ஸ் அப் தகவல்

எளிதாக வீட்டிலேயே கிடைக்கக்கூடிய வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றால் செய்யப்படும் அந்த மருந்து, பல நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதே அந்த வீடியோ தகவல். 

 

நம் முன்னோர் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி வந்தார்கள். நோய்கள் வராமலும் தடுத்தும் மருத்துவர் செந்தில் கருணாகரன்வந்திருக்கிறார்கள். இதனால்தான் திடகாத்திரமான உடல்வாகுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். ஆனால்,ஒரே மருந்தில் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது சாத்தியமா? அதுவும் புதிதுபுதிதாக நோய்கள் முளைத்து வரும் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு மருத்துவம் இருக்கிறதா?

சித்த மருத்துவர் செந்தில் கருணாகரனிடம் இது குறித்துக் கேட்டோம்.

"நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். பலர் அதுகுறித்து என்னிடம் கேட்டார்கள். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம்... இவை மூன்றும் மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள்தாம். இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதில் குறிப்படப்படும் 17 நோய்களையும் இது குணப்படுத்தும் என்று சொல்ல முடியாது. 

வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும். தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். ஏனெனில் பெரும்பாலான நோய்களுமே வயிற்றில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மந்தம், ஜுரம், கொழுப்பு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கான முழுமுதல் காரணம் செரிமானக் கோளாறுகளே.

மருந்து

வீடியோவில் குறிப்பிடப்படும் மருந்தை நாம் எடுத்துக்கொண்டால்  நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். தேவையற்ற தோல் மினுமினுப்புகொழுப்புகள், கழிவுகள் நீங்குவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதற்க்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த மருந்து ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் என்பது உண்மை இல்லை. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இதயம் சீராக இயங்குவதற்கு இந்த மருந்து துணைபுரியும். ஆனால்  இதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த மருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்போதாது. இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதால் தோல்களில் உள்ள சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சோரியாசிஸ், கரைப்பான் போன்ற தோல்நோய்கள் மாறாது.

வெந்தயம், ஹார்மோனைக் கட்டுப்படுத்தும், அதனால், உடல் மினுமினுப்பு உண்டாகும். மேலும், ஓமம் மற்றும் கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எழும்புகள் மற்றும் பற்கள் உறுதியடைய வாய்ப்புண்டு. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணைபுரியும். மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் கம்மியாக இருந்தால் அதைச்சரி செய்யும்.

மலச்சிக்கல்இந்த மருந்தை எடுத்துக்  கொள்வதால், கண்பார்வை அதிகரிக்கவோ, நினைவாற்றலை மேம்படுத்தவோ எந்தவித வாய்ப்பும் இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகளைச் சரி செய்யாது. அதேபோல் நாள்பட்ட வியாதிகளைச் சரிசெய்வதற்கான வாய்ப்பும் இல்லை. நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாமே தவிர நோயால் பாதிக்கப்பட்ட பின் இதை மட்டும் எடுத்துக்கொண்டால் பெரிய அளவில் முன்னேற்றமும் இருக்காது. ஆனால்  நோய்கள் முற்றிய பிறகு இதை எடுத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்காது. நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது. 

மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் சரியாக வெளியேறி எந்தவிதமான வயிற்றுப் பிரச்னைகளும் இல்லை என்றாலே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

முந்தைய காலங்களில் அன்றாட உணவில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் போந்ற பொருள்களை இயல்பாகவே நாம் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் எந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் இவற்றை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நினைத்து உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத ரசாயனங்களை எல்லாம் உணவில் சேர்க்கிறோம்.

வீடியோவில் குறிப்பிடப்படும் இந்த மருந்தை  தினமும் அருந்துவது நல்லது. உடலை ஆரோக்கியமாகப் பேண வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பின்பற்றலாம்" என்கிறார் அவர்.

ஆரோக்கியமான உடல்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற  மருத்துவக் குறிப்புகள் ஏராளம் வெளிவருகின்றன. அவற்றை கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பிவிடக்கூடாது. குறிப்பாக, நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இதுபோன்ற மருத்துவ தகவல்களை மட்டும் நம்பி மருத்துவரிடம் தக்க சிகிச்சை பெறாமல் இருந்துவிடக் கூடாது. எந்த ஒரு மருத்துவம், வைத்தியமாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்