தமிழகத்தைத் தாக்க வருகிறது ஜிகா! - தற்காத்துக்கொள்வது எப்படி? | Zika virus... Symptoms, treatment & prevention

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (11/07/2017)

கடைசி தொடர்பு:17:06 (11/07/2017)

தமிழகத்தைத் தாக்க வருகிறது ஜிகா! - தற்காத்துக்கொள்வது எப்படி?

ற்போது கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டுவரும் வார்த்தைகளில் ஒன்று, `ஜிகா.’ கிட்டத்தட்ட 15 நாடுகளுக்கும் மேல் ஜிகா வைரஸ் பரவியிருக்கும் நிலையில், இப்போது நம் தமிழகத்தையும் எட்டிப் பிடித்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் அதே அறிகுறிகளோடு காய்ச்சலுக்கு உள்ளாகியிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஜிகா வைரஸ்

ஏற்கெனவே டெங்குக் காய்ச்சல் பற்றிய பீதி பரவிவரும் நிலையில் இப்போது ஜிகா குறித்த அச்சமும் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஜிகாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களும், அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஜிகா வைரஸ் என்றால் என்ன, எப்படிப் பரவுகிறது, அறிகுறிகள், சிகிச்சைகள் அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம். 

ஜிகா வைரஸ் (Zika virus)

ஜிகா வைரஸ், ஏடிஸ் (Aedes) என்ற கொசுவால் பரவக்கூடியது. டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் அதே கொசுதான். இந்தக் கொசு, நன்னீரில் வாழும். கிட்டத்தட்ட டெங்கு வைரஸுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும். நம் உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது, வைரஸை உள்ளே செலுத்தி விடும். இது, பகலிலும் கடிக்கும். 

ஜிகா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள்...

முதுகுவலி, கண் வலி, காய்ச்சல், இடுப்புவலி, வாந்தி, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படும்.
இதன் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் மாதிரியே இருக்கும். இரண்டு முதல் ஐந்து நாள்கள் வரை அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

தடுப்பு மருந்து

சிகிச்சை...

* வீடு, அலுவலகம் மட்டுமல்ல... நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானதாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

* வீட்டிலும் வெளியிலும் தண்ணீரைத் தேங்கவிடக் கூடாது. ஏனெனில், இந்த வகைக் கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும் தன்மைகொண்டவை. அவை வளர்வதற்கு நன்னீரே மூலதனம். பூந்தொட்டிகள், சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பிரிட்ஜின் பின்புறம் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் சுத்தம் செய்து விடுங்கள். தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறை தொட்டிகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிருக்குப் பாதிப்பு ஏற்படாது. கடும் காய்ச்சல் ஏற்படும். தசைகளில் கடுமையாக வலி எடுக்கும். பார்வைக் கோளாறு ஏற்படும். ஜிகா வைரஸுக்குத் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. கண்டிப்பாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளைப் பயன்படுத்தக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் தற்போதைய, சிறந்த தீர்வு. 

ஜிகா வைரஸ் குறித்து பொது மருத்துவர் சுந்தரராமனிடம் பேசினோம்... 

``அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் ஒரு காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்தன. இந்தக் குறைபாட்டை `மைக்ரோசிபேலி’ (Microcephaly) என்றார்கள். அதாவது, குழந்தையின் மூளை, இயல்பைவிட அளவில் வளர்ச்சி குறைவானதாக இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது என ஓர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில், 'கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்; தலை சிறியதாக இருக்கும்' என்பது கண்டறியப்பட்டது. இதுபோல இன்னும் பல பெயர் தெரியாத வைரஸ்கள் ஏடீஸ் கொசுவால் ஏற்படுகின்றன. அவற்றுக்கு மருந்துகள் என்று தனியே கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான் தீர்வாக இருக்கும்" என்றார் சுந்தரராமன்.

ஜிகா வைரஸ்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஜிகா பாதிப்பு குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம்...

``ஏடிஸ் கொசுக்கள்,  சிக்கன் குன்யா, யெல்லொ ஃபீவர் (Yellow fever), டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்றவற்றைப் பரப்பும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஜிகா வைரஸ் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பரவியதாகக் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, நம்மைச் சுற்றி உள்ள சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும்தான் சிறந்த வழி. மேலும், ஜிகா வைரஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 104 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இந்தச் சேவை 24 மணி நேரமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஜிகா தொடர்பான மருத்துவ முகாம்களும் விழிப்புஉணர்வு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார் டாக்டர் குழந்தைசாமி. 
 


டிரெண்டிங் @ விகடன்