Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசைவம் சாப்பிட்டால் கோபம் அதிகமாகுமா? 'பிக்பாஸ்’ கமல் சர்ச்சை! - மருத்துவம் என்ன சொல்கிறது?

`பிக் பாஸ்’ நிகழ்ச்சி... ``சைவ சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டா இப்படிச் சண்டை போடுறீங்க?'' -  கஞ்சா கருப்புவிடம் கமல் கேட்ட இந்தக் கேள்வி, புதிய சர்ச்சைக்குக் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. சைவம், அசைவம் தொடர்பான கருத்துகள், விவாதங்கள், சர்ச்சைகள்... வலைதளங்களில் வரிசைகட்டி நிற்கின்றன. 'சைவம் சாப்பிடுபவர்கள் அமைதியானவர்கள்: அசைவம் சாப்பிடுபவர்கள் சண்டை போடுபவர்கள் என்று சொல்ல வருகிறாரா கமல்?' என்று ஒரு தரப்புக் கொதிக்கிறது. உண்மையில், அசைவம் சாப்பிடுபவர்கள் கோபப்படுவார்களா? கமல் சொல்வதற்கும், அவை புரிந்து கொள்ளப்படுவதற்கும் எப்போதும் தூரம் அதிகம். அசைவம் சாப்பிடுவதைப் பற்றிய கமலின் கருத்து இருக்கட்டும். உண்மையில் , அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிவோம்.

அசைவம்

உணவு, உடலுக்குத் தேவையான ஆதாரம் மட்டுமல்ல; நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து, ஒன்றிவிட்ட ஓர் அற்புதம். நாம் சாப்பிடும் உணவு, உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் மாற்றங்களை, தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இன்றும் கிராமப்புறங்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையா? ``கோழி அடிச்சு கொழம்புவெச்சு சாப்பிடு. எல்லாம் சரியாப் போகும்’’ என்பது வயது முதிர்ந்தவர்களின் கூற்றாக இருக்கிறது. இதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. உடல் பலவீனத்துக்கு கோழிக்கறி சரியான மாற்று என அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர். 

'அசைவம் சாப்பிடுபவர்கள் கோபக்காரர்கள்' என்ற வேடிக்கையான கருத்து ஒன்று நம்மைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அது சைவமோ, அசைவமோ... எந்த உணவாக இருந்தாலும், அது அளவாக இருந்தால் என்றென்றும் ஆனந்தமே என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.  

``அசைவ உணவு, சைவ உணவு என்று எதுவாக இருந்தாலும், அதிக அளவு மசாலா கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களே கோப சுபாவத்துக்குக் காரணம். அதிக அளவு எடுத்துக்கொள்ளப்படும் அசைவ உணவில் நிறைந்திருக்கும் புரோட்டீன் மற்றும் கலோரி போன்றவை சரியாக எரிக்கப்படாத நிலையில், உடல் பருமன் மற்றும் உடலில் தேவையற்றக் கொழுப்புச் சேரும். இவற்றைச் சரிசெய்ய உடல் உழைப்பு, உடற்பயிற்சி போன்றவை சிறந்தவை. சைவ உணவுக்கும் இது பொருந்தும். சைவ உணவைக் காட்டிலும், அசைவ உணவை உடல் விரைவில் உறிஞ்சிக்கொள்ளும். ஆகையால் பலனும் விரைவில் கிடைக்கும். மேலும், குணம் மற்றும் மன மாற்றங்களுக்கு ஊட்டச்சத்து மிகுதியால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணமே தவிர, அந்த வகை (அசைவ) உணவினால்தான் என்பது அல்ல...’’ என்கிறார்  ஊட்டச்சத்து நிபுணர் நித்யா. 

காய்கறிகளில் இருப்பதைவிட அதிகச் சத்து இறைச்சியில்தான் இருக்கிறது. அசைவ உணவில் உள்ள சத்துகளை உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்; உடலில் வலு சேரும். எனவேதான் சிறு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அசைவ உணவைப்  பரிந்துரைத்தது நம் பாரம்பர்யம். அசைவ உணவில் உள்ள சத்துகள், அதைச் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் தவிர்க்கவேண்டியவை, யார் சாப்பிடலாம்... அனைத்தையும்  விரிவாகப் பார்க்கலாம். 

அசைவ உணவில் உள்ள சத்துகள்...

* அசைவ உணவுகளில் அதிக அளவு புரோட்டீன், ஃபேட்டி அமிலம், அமினோ அமிலம், ஒமேகா 3 மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை அதிகரிக்க உதவும்.

* இறைச்சியில் நிறைந்துள்ள புரோட்டீன், தசை வளர்ச்சிக்கு உதவும். உடலை வலுவாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். 

* இறைச்சியில் நிறைந்துள்ள இரும்புச்சத்து, ரத்த விருத்திக்கு மட்டுமல்ல, மூளை செயல்பாட்டுக்கும் உதவும். இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

* இறைச்சியில் உள்ள கால்சியம், ஜிங்க், செலினியம் போன்ற தாதுஉப்புகள் உடல் வளர்ச்சிக்கு உதவும். உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்கும். 

அசைவ உணவு

அதிக அசைவமும் ஆபத்தே! 

* அசைவ உணவு சாப்பிட்டவுடன் சிலருக்குத் தூக்கம், மயக்கம், சோம்பல் போன்றவை ஏற்படலாம். இதற்குக் காரணம் மூளைச் செயல்பாட்டில் ஏற்படும் மந்தத்தன்மை. 

* மனஅழுத்தம், தூக்கம் தொடர்பான நோய்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த மாதிரி நோய்கள் உள்ளவர்கள் அசைவ உணவுகள் உட்கொண்டால், அவை குணமாவதற்கு அதிக நாள்கள் ஆகும்.

* செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். 

* அசைவ உணவில் உள்ள அமிலங்கள், ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். அவை கோபம், மனஅழுத்தம், பயம், பொறுமையின்மை போன்றவை ஏற்படக் காரணமாகும். சைவ உணவுகளைச் சாப்பிடுவதாலும் இவை ஏற்படும்தான். ஆனால், சைவ உணவைவிட, அசைவ உணவு உடனடியாக உடலில் உறிஞ்சப்படுவதால் இந்தத் தாக்கங்கள் அதிகமாக ஏற்படும்.

* அசைவ உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிறு, குடல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

* உணவு செரிமானம் ஆகாமல் நீண்ட நேரம் வயிற்றிலேயே இருப்பதால் அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தும். 

 

அசைவ உணவில் பின்பற்றவேண்டியவை...

* வாரம் ஒரு முறை மட்டன் அல்லது கோழி இறைச்சி, வாரம் இரு முறை மீன் எனச் சாப்பிடலாம். 

* வீட்டில் வளர்த்த நாட்டுக்கோழியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகளைத் தவிர்ப்பது நல்லது. 

* அசைவ உணவுக்குப் பின்னர் கொள்ளு ரசம், பெருஞ்சீரகத் தண்ணீர், பால் சேர்க்காத சுக்குமல்லிக் காபி,  இஞ்சித் துவையல் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை சீரான செரிமானத்துக்கு உதவும். மேலும், கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும். 

* இறைச்சியை ஃப்ரெஷ்ஷாகப் பார்த்து வாங்க வேண்டும். வாங்கிவுடன் மஞ்சள் தடவிவைத்திருந்து, சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டுச் சமைக்கலாம். 

* இறைச்சியை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம். இவை அவற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.

* இறைச்சியுடன் வெங்காயம் சேர்த்து உண்ணலாம். இது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

* இறைச்சியை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, வீட்டிலேயே சமைப்பது சிறந்தது. வீட்டில் சமைத்த உணவுக்குச் சுவையும் மனமும் அதிகம். சுகாதாரம், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம். 

* அசைவம் சாப்பிடுபவர்கள் உடலைப் ஃபிட்டாக வைத்துக்கொள்வது நல்லது. அதற்கு உடற்பயிற்சி அவசியம். 

* அசைவ உணவில் கட்டாயம் இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு, ஏலக்காய், பட்டை போன்றவற்றை சேர்த்துச் சமைக்க வேண்டும்.

* அசைவ உணவு சாப்பிட்டு, 30 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின்னர் பழச்சாறு, இளஞ்சூடான நீர் போன்றவற்றைக் குடிக்கலாம். இவை செரிமான சக்தியை அதிகரிக்கும்..

இளஞ்சூடான நீர்

செய்யக் கூடாதவை...

* வெளியில் கடைகளில் கிடைக்கும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இறைச்சியோடு சேர்த்துச் சமைக்கும் பொருள்கள் சுத்தமாக இல்லாமல் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. 

* இறைச்சியில் சேர்க்கப்படும் ரசாயனப்பொருள்கள் மற்றும் உப்புகள் உடலுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடியவை. புற்றுநோயை வரவேற்பதில் இதற்கு முக்கியப்பங்கு உண்டு. 

* தினமும் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. இது ரத்தத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

* இறைச்சியில் உள்ள ரத்தம், மனித உடலின் வளர் சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

* இறைச்சியுடன் தயிர், தேன், கிழங்கு வகைகள், முள்ளங்கி, மைதா உணவுகள், உளுந்து, பயறு, தானியங்கள் மற்றும் கீரை போன்றவற்றைச்  சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* ஆடு, கோழி, மீன் போன்ற எந்த இறைச்சியாக இருந்தாலும், ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடக் கூடாது. முதல் நாள் சமைத்த உணவை அடுத்த நாள் சாப்பிடக்கூடாது. 

* பிராய்லர் கோழிகள் மற்றும் அவற்றின் முட்டைகளைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் தேவையற்றக் கொலஸ்ட்ராலைச் சேர்க்கும். பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பூப்பெய்தும் நிலையை உண்டாக்கும்.

* அசைவ உணவு சாப்பிட்ட பின்னர், கார்பனேட்டட் டிரிங்க்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றைக் குடிக்கக் கூடாது. இவை மூளைச் செயல்பாட்டை மந்தமடையச் செய்யும். செரிமானக் கோளாறை உண்டாக்கும்.

கார்பனேட்டட் டிரிங்க்ஸ்

யார் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது?

* கர்ப்பிணிகள் அசைவ உணவைச் சாப்பிடலாம். காய்கறிகளைவிட அசைவ உணவில் உள்ள சத்துகளை உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும். அசைவ உணவு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான கால்சியம், புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து பெற உதவுகிறது. 

* குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கலாம். இது ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும். 

* உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் அசைவ உணவைத் தவிர்ப்பதே நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close