முருங்கைப்பூ கூட்டு, அரைக்கீரை பொரியல், பூசணி விதைப் பால்... இல்லறம் இனிக்க உதவும் எளிய உணவுகள்! | What to Eat for a Better Sex Life

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (22/07/2017)

கடைசி தொடர்பு:20:59 (22/07/2017)

முருங்கைப்பூ கூட்டு, அரைக்கீரை பொரியல், பூசணி விதைப் பால்... இல்லறம் இனிக்க உதவும் எளிய உணவுகள்!

தாம்பத்யம் எனும் ஆணிவேரே கணவன்-மனைவி இடையேயான ஒற்றுமைதான். பரஸ்பரம் ஆணும் பெணும் உடல் மற்றும் மனநிலையை அறிந்து, புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் இல்லறம்தான் சிறக்கும். இது ஒருபுறமிருக்க இன்றைக்குப் பெரும்பாலான தம்பதியரிடையே தாம்பத்யம் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. விட்டுக்கொடுத்தல், புரிதல் இல்லாதது மட்டுமன்றி, உடல்ரீதியாகவும் பலர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நாம் உண்ணும் உணவில் தொடங்கி உடுத்தும் உடை, கலாசாரம், பண்பாடு என எல்லாமே தலைகீழாக மாறிப்போய்விட்டன. குறிப்பாக, ஆண்களிடையே அதிகரித்துவரும் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போதைப்பழக்கம், உணவுப்பழக்கம் போன்றவை ஆண்மைக்குறைவை ஏற்படுத்திவருகின்றன. பெண்களைப் பொறுத்தவரை உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்ட சிக்கன், எம்எஸ்ஜி எனப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற ரசாயனக் கலப்பு நிறைந்த உணவுகளை உண்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அடிப்படையிலேயே மாறிவிட்ட உணவுப்பழக்கத்தில் இருந்து நாம் முதலில் விடுபட்டு, இயற்கையான, பாரம்பர்யமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். அதே நேரத்தில் சிகிச்சை என்பதைவிட இயற்கை விளைபொருள்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் நிவாரணம் பெற முடியும். அவை குறித்துப் பார்ப்போம்.

இல்லறம்

பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாளில் இருந்து, முற்றிய வேப்பிலையை 100 கிராம் அளவுக்கு எடுத்து, அதில் கஷாயம் வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஆண், பெண் இரண்டுபேரும் குடித்து வர வேண்டும். தொடர்ந்து ஆறு நாள் குடித்ததும் அரச இலை, மா இலை தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து கஷாயம் வைத்து, 100 மி.லி வீதம் ஒன்பது நாள் அதேபோல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்தக் காலகட்டங்களில் கேழ்வரகு உணவுகள், கொத்தமல்லித்தழை போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர, காலையில் வெறும் வயிற்றில் அரச இலைக்கொழுந்தை மையாக அரைத்து, தயிர் சேர்த்துக் கலந்து தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ ஆகியவற்றை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருவது ஆண், பெண் இருவருக்குமே பலன் கொடுக்கும். பிஞ்சு முருங்கைக்காய்கள், முருங்கைப்பூவை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வருவதன் மூலமும் தாம்பத்யம் சிறக்கும். விந்து முந்துதல், விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் முருங்கைப்பூக்களுடன் பாதாம், பால் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய முருங்கையின் பட்டையிலிருந்து கிடைக்கும் பிசின் 4 டீஸ்பூன் எடுத்து பாலில் சேர்த்துக் குடித்துவந்தால் இல்லற சுகம் கிடைக்கும். முற்றிய முருங்கை விதைகளை நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தாலும், விந்தணுக்கள் அதிகரிப்பதுடன் விந்து கெட்டிப்படும். நரம்புகள் பலப்படும்.

இல்லறம் சிறக்க

அரைக்கீரையை வெங்காயம் சேர்த்து நெய்விட்டு வதக்கி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தமும் புதிய தாது அணுக்களும் அதிகமாக உற்பத்தியாகும். இதன் மூலம் தாம்பத்யம் சிறக்கும். ஆகவே ஆண், பெண் இருவரும் சாப்பிட்டு வரலாம். புளிச்சக்கீரையும் பலனளிக்கும். புளிச்சக்கீரையை உலரவைத்து அதனுடன் சம அளவு பாசிப் பருப்பு, ஜாதிக்காய், சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்துப் பொடித்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் ஆண்களுக்கான குழந்தையின்மைக் குறைபாடு நீங்கும். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதைச் சாப்பிடலாம்.

கானாம் வாழைக் கீரையின் முழுச்செடியுடன் தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து கஷாயம் வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து 48 நாள் சாப்பிட்டு வந்தால், தாது பலப்படும். இல்லற இன்பத்தில் அதிக நேரம் ஈடுபட இது வழிவகுக்கும். இந்த மருந்தை சாப்பிடும் வரை உடல் உறவு வைத்துக்கொள்ளாமல் இருந்து 48 நாள்களுக்குப் பிறகு வைத்துக்கொண்டால் முழுப் பலன் கிடைக்கும். தூதுவளைப்பூக்களை நெய்விட்டு வதக்கியோ, பாலில் வேக வைத்தோ சாப்பிட்டு வந்தாலும் ஆண்மை பலம் கிடைக்கும்.

தாம்பத்யம்

பூசணி விதைகளைப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவந்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்து கெட்டிப்படும். நெய்யில் வறுத்த முள்ளங்கி விதைகளைப் பொடி செய்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து அருந்திவந்தால், ஆண்மை அதிகரிக்கும். தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற ஒன்று உண்டு. அதை உலரவைத்துத் தூள் செய்து காலை, மாலை தலா ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் ஆண்மைக்குறைபாடு நீங்கும். இவை தவிர பூனைக்காலி விதை, தாமரை விதை, நீர்முள்ளி விதை, தேற்றான்கொட்டை, பருத்திக்கொட்டை, பிஸ்தா, அக்ரூட் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை உள்ளிட்டவையும் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் திறன் படைத்தவை. மாதுளம்பழ விதைகளும்கூட நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும் தன்மைகொண்டவை.

தம்பதியர் இருவருமே செவ்வாழைப்பழத்தைத் தேனைத் தொட்டு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், போதுமான அளவு உயிரணுக்கள் பெருகும்; கருத்தரிக்கும் வாய்ப்பும் விரைவாகும்.

தினம் ஒரு தக்காளி சூப் அருந்திவரும் ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாம்பத்யம் - ஓரிதழ்தாமரை

ஓரிதழ் தாமரை இலையை நிழலில் உலர்த்தி, அதில் ஒரு கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நெருஞ்சில் முள்ளை பாலில் வேகவைத்து உலர்த்தி, பொடித்து இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து காலையும் மாலையும் பருகிவந்தால், ஆண்மை பெருகும். 50 கிராம் நெருஞ்சில் இலையுடன் அரை லிட்டர் நீர்விட்டு பாதியாகக் காய்ச்சி, தினமும் குடித்துவந்தால், பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கும்.

இவை தவிர பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு நெல்லிக்கனி சாப்பிடுவது நல்லது. கருஞ்சீரகம், சதக்குப்பை, மரமஞ்சள் போன்றவற்றைப் பொடித்து, அரை டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு, பெருஞ்சீரகம் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தினால் பெண்களுக்கும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் நீங்கும். அது, தாம்பத்ய உறவு மேம்பட வழிவகுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்