பார்லி, இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை... காய்ச்சல் விரட்டும் கிச்சன் மருந்துகள்! | Surprising Home Remedies for Fever

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (25/07/2017)

கடைசி தொடர்பு:11:21 (25/07/2017)

பார்லி, இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை... காய்ச்சல் விரட்டும் கிச்சன் மருந்துகள்!

காய்ச்சல்... சில நேரங்களில் சிலரது உயிரைப்பறிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. உயிர்க்கொல்லி நோய் பட்டியலில் அதுவும் இடம்பெற்றுவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்துவிட்டது. சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், அதிகமாகி குறைதல் ஆகியவை இதன் வகைகளில் சில. காற்றின் மூலம் பரவக்கூடியது, அசுத்தத்தால் வருவது, குடல்காய்ச்சல். டைபாய்டு, பாக்டீரியா தொற்று காரணமாக வருவது, கொசுக்களால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், மலேரியா, டெங்கு, யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல்... என நீண்ட பட்டியல் இதற்கு உண்டு. இவை தவிர பன்றிக் காய்ச்சல், ஜிகா வைரஸ் எனப் புதிது புதிதாக வந்து மனிதர்களைப் பாடாகப்படுத்துகின்றன.

நிலவேம்பு கஷாயம்

உண்மையில், காய்ச்சல் வந்தால், அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். பிறகு பயப்படத்  தேவையில்லை. அன்று முதல் இன்று வரை காய்ச்சலை எதிர்கொள்ள இயற்கையாகவே சில எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சில இங்கே...

மிளகு வைத்தியம்

கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு சிவந்து அதிலிருந்து தீப்பொறி பறக்குமளவுக்கு வறுக்க வேண்டும். பிறகு அதை, அடுப்பிலிருந்து இறக்கி அதை மத்தால் கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நீர் பாதியாக வற்றியதும், கீழே இறக்கி, ஆறியதும் அதிலிருந்து கால் டம்ளர் குடிக்க வேண்டும். இதேபோல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை செய்து குடிக்க வேண்டும். ஒருமுறை கஷாயம் வைத்த மிளகைக்கொண்டு மீண்டும் ஒருமுறை கஷாயம் வைக்கலாம். பிறகு புதிதாக மிளகை வறுத்துத்தான் கஷாயம் செய்ய வேண்டும். மிளகின் காரம் அதிகமாக இருந்தால், பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை வைத்தியம்

கைப்பிடி கறிவேப்பிலையுடன் அரை டீஸ்பூன் சீரகம், அதில் பாதியளவு மிளகு, இஞ்சி சிறு துண்டு எடுத்து வெதுவெதுப்பான நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். மையாக அரைத்தக் கலவையில் வெந்நீர் ஊற்றிக் கலந்து, வடிகட்டி, தேன் சேர்த்து காலை, மதியம், மாலை என குடித்து வந்தால் காய்ச்சலில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.  

வல்லாரை வைத்தியம்

வல்லரை, துளசி இலைகள், மிளகு தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து மையாக அரைக்க வேண்டும். மைபோல் அரைத்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நிழலில் உலரவைக்க வேண்டும். அதிகமாகக் காய்ச்சல் உள்ளவர்கள், காய்ந்த அந்த உருண்டையை வேளைக்கு ஒன்று வீதம் வாயில் போட்டு, கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.

இஞ்சி வைத்தியம்

துளசி இலை, இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுத்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்துவர, காய்ச்சல் குணமாகும்.

பார்லி பால்

காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் பார்லி அரிசியை வாங்கி, தண்ணீர் சேர்த்து சாதம் பொங்குவதுபோல் வேகவைத்துச் சாப்பிடலாம். நாக்கில் ருசி இல்லாத நேரங்களில் சாப்பிடத் தோன்றாது. அப்படிப்பட்ட நேரங்களில் இந்த பார்லி சாதம் ஓர் ஊக்கமருந்தாகச் செயல்படும். பார்லி அரிசியை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.

பித்தக் காய்ச்சல் வந்தால், தனியா அல்லது கொத்தமல்லிக் கீரையை கஷாயமாக்கிக் குடிப்பதன் மூலம் குணம் பெறலாம். இவற்றை தனித்தனியாகத் துவையலாகச் செய்தும் சாப்பிடலாம்.

புதினா இலையை கஷாயமாக்கிக் குடித்துவந்தால், எந்தக் காய்ச்சலாக இருந்தாலும், அதன் தீவிரம் குறைந்து விடும்.

கஷாயம்

மிளகு, இஞ்சி, சீரகம், தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி போன்றவற்றை தண்ணீர்விட்டுக் காய்ச்சி, வெறுமனேயோ பாலுடன் கலந்தோ குடித்து வந்தால் தீராத காய்ச்சலும் தீரும்.

ஆடாதொடா இலைச்சாற்றில் தேன் கலந்து குடித்தால், சளியுடன் கூடிய காய்ச்சலின் தீவிரம் குறையும்.

தேனில் இஞ்சியை வதக்கி, தண்ணீர் சேர்த்து, சுண்டக் காய்ச்சிக் குடித்துவந்தால் வலியுடன் கூடிய காய்ச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலையுடன் சிறிது உப்பு சேர்த்துக் காய்ச்சி, இளஞ்சூட்டோடு குடித்துவந்தால் குளிர் காய்ச்சல் தீவிரம் தணியும்.

துளசி இலைகளை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்துவந்தால், மலேரியா காய்ச்சலின் தீவிரம் மட்டுப்படும்.

கொத்தமல்லிக் கீரைச் சாற்றைக் குடித்துவந்தால், மூளைக்காய்ச்சல் தீவிரத்தைக் குறையச் செய்யலாம்.

மூன்று டீஸ்பூன் துளசி சாற்றுடன் இரண்டு டீஸ்பூன் இஞ்சிச்சாறு,  ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் மலேரியா காய்ச்சல் குறையும்.

இவை தவிர டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாறை வெறுமனேயோ தேன் கலந்தோ குடித்து வந்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிக்கும். புதிதாக பப்பாளி இலைகளில் காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் 4 தடவை குடிக்க வேண்டும்.

நிலவேம்பு கஷாயம், டெங்கு பரவுவதற்கான வைரஸை அழிக்கக்கூடியது. அது காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும். நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்பாடகம், விலாமிச்சை, சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவை சேர்ந்த நிலவேம்புக் கலவையை தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டி 50 மி.லி வீதம் தினமும் இரண்டு தடவை குடித்துவந்தால், டெங்கு வைரஸ் அழிந்துவிடும். இதன் அருமை புரிந்துதான் அரசு மருத்துவமனைகளில், நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.

மலைவேம்பு இலைச்சாறும் டெங்கு வைரஸை அழிக்கக்கூடியது. புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குடித்துவந்தாலும், டெங்கு வைரஸ் அழிந்துவிடும்.

காய்ச்சல் - பப்பாளி இலை

பப்பாளி இலைச்சாறு மட்டுமல்லாமல் கஷாயங்களையும் ஐந்து நாள்கள் குடித்துவந்தால், காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் குணமான பிறகும் மேலும் 2 நாள்களுக்கு குடித்துவந்தால் காய்ச்சலின் தாக்கத்தை முழுமையாக தடுத்துவிடலாம். மூன்றையும் ஒருசேர குடிப்பதில் சிரமம் இருந்தால், முதலில் நிலவேம்புக் கஷாயம் குடித்துவிட்டு மற்றவற்றைத் தொடரலாம்.

காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே வைத்தியம் உண்டு. சரியான நேரத்தில், சரியாகச் செய்யப்படும் சிகிச்சை நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்