பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? - மருத்துவம் சொல்வது என்ன?

'ல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட மாணவிகள் வாந்தி-மயக்கம்' - நாளேடுகளில் இப்படியான செய்திகள் அடிக்கடி வருவதைப் பார்த்திருப்பீர்கள். நேற்று  (24.7.2017) இரவு சென்னை காயிதே மில்லத் கல்லூரி விடுதி மாணவிகள் திடீரென வாந்தியெடுத்து, மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. `இதற்குக் காரணம், பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதுதான்' என்கிறார்கள். 

பல்லி


உண்மையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்... உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.

பொதுநல மருத்துவர் புகழேந்தி``உலகம் தாண்டி, ஆகாய வெளி வரைக்கும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிற நாம், நம்முடனேயே வசிக்கிற நம்மோடு வாழ்கிற பல உயிரினங்களைப் பற்றி முழுமையாக அறிந்துவைத்திருப்பதில்லை. அதோடு, அவை குறித்த தவறான கண்ணோட்டமும் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பல்லி.  பல்லி என்றால், குழந்தைகளுக்குக்கூட அறிமுகம் தேவையில்லை. நம் அருகிலேயே, நம் வீட்டிலும் இன்னபிற இடங்களிலும் அடிக்கடி நாம் பார்க்கிற ஓர் உயிரினம். 

ஆனால், பல்லி விழுந்தால் ஏற்படும் பலன்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட, பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் உணவு விஷமாகுமா என்பது பற்றித் தெரிந்திருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல்லி பற்றித் தெரிந்து வைத்திருப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... `பல்லி என்றால் ஒரு விஷப் பூச்சி. அது விழுந்த உணவைச் சாப்பிட்டால் அது விஷமாகி மரணம் ஏற்படும்.’ இதுதான். ஆனால், உண்மை என்னவென்றால் பல்லி என்பதும்  கரப்பான் பூச்சி போன்ற ஓர்  உயிரினம்.  பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் வளரும் பல்லிகள் விஷமானவை அல்ல. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டாலே, பல்லி மீதான பயம் நீங்கிவிடும். 

இப்படிச் சொன்னால், அடுத்த கேள்வி, `பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் ஏன் வாந்தி, மயக்கம் வருகிறது?’ என்பது.
பல்லி சுத்தமான இடத்தில் மட்டுமே இருப்பதில்லை. தோட்டம் முதல் வீட்டின் கழிவறை வரை பல இடங்களில் சுற்றித் திரியக்கூடியது. அந்தச் சமயங்களில் பல்லியின் உடல், கால்கள் எனப் பல இடங்களில்  கண்ணுக்குத் தெரியாத லட்சக்கணக்கான கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

பல்லிகள் 

அதோடு அவை ஏற்கெனவே உண்ட பல்வேறு பூச்சிகள், அதன் சிறுநீர், கழிவுகள்... என அனைத்தும் உணவில் கலக்கும்போதுதான் உணவு கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த உணவுகளை சாப்பிடும்போது அது வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அப்போது, இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரியவே ஒரு சில நாள்கள் ஆகும். அப்படி இருந்தாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

உடல்நல பாதிப்பால்  வாந்தி, மயக்கம் ஏற்படுவதைவிட,  பயத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கமே அதிகமாக இருக்கும்.  இதனால்தான் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வருவதைப் பார்க்கிறோம். 
ஏனெனில், பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும் வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்துகிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்கும், அது பற்றிக் கேட்டவருக்கும் பயம் தொற்றும். இதனால் ஏற்படும் அருவருப்பாலும், பல்லி பற்றிய மரண பயத்தாலும், பதற்றத்தாலும்தான் வாந்தி ஏற்படுகிறது. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதோடு, உணவு கெட்டுப்போயிருந்தாலும், வாந்தி ஏற்படுவது இயற்கையே.

பல்லி:  பல்லி விழுந்த உணவு

அதிகப்படியான வாந்தியால் ஏற்படும் டிஹைட்ரேஷனால் ( Dehydration) மயக்கம் உண்டாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்குப் பரிந்துரைக்கிறார்கள். மற்றபடி உயிரிழப்பு என்கிற அளவுக்கு பயப்படத் தேவையில்லை. குழந்தைகளையும் பயமுறுத்தத் தேவையில்லை.

எல்லாவற்றையும்விட பல்லி உள்ளிட்ட வேறு எந்தப் பூச்சியும் உணவில் விழாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்றும் எப்போதும் மிகச் சிறந்த வழி’’ என்கிறார் புகழேந்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!