வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:36 (26/07/2017)

குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?

குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். 

குட்கா, பான் மசலா... 

 
உண்மையில், இத்தகைய போதை வஸ்துகளை கைவிடுவதால் உடல்நலனில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? அந்தப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதற்கான வழிமுறைகள் என்ன? 

மன நல மருத்துவர் ரேஷ்மாவிடம் கேட்டோம்.ரேஷ்மா

"மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் (Psychoactive Substances) என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின் (Nicotine), ஆல்கஹால் (Alcohol), கஃபைன், பாக்கு (Betel nut) போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன. 

தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. 

புகையிலை 

முக்கியமான பாதிப்புகள்

அடிமையாதல்

புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்.   

புற்று நோய்

புகையிலைப் பழக்கத்தால் வாயில் Oral Submucous Fibrosis எனப்படும் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய்  (Oral Cancer or Mouth Cancer) ஏற்படும்.

மலட்டுத்தன்மை

குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.

எப்படி மீள்வது?

எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய்,  உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும். 

போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கிறேன். உடல் நிலையை கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரியவந்தால் அதற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவிங்கம் 

அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும். குறிப்பாக, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயிருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். 

பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். மற்ற நேரங்களில் இந்த எண்ணம் ஏற்படும்போது, சூயிங்கம், வேர்க்கடலை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக ஒருவருக்கு நீண்ட நாள்களாக இந்தப் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை கைவிடுவதற்கு முன்பு, பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் நிலைக்குச் சென்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ளவும் அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளவும் இது உதவும். பாதிப்பைக் கண்டறியும்பட்சத்தில் அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழக்கத்தைக் கைவிட மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

போதைப்பழக்கத்திலிருந்து விடுபட சென்னை கிண்டியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பல்வேறு போதை மறுவாழ்வு மையங்களிலும் மனோதத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு Replacement therpy என்னும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்